'நான் ஜாக்குலினுடன் நெருக்கமாக பழகியது நோராவுக்கு பிடிக்கல'-சுகேஷ் சந்திரசேகர் வாக்குமூலம்

ஜாக்குலின் பெர்னாண்டஸ் மீது நடிகை நோரா ஃபதேஹி எப்போதும் பொறாமை கொண்டிருந்ததாகவும் ஜாக்குலினுக்கு எதிராக நோரா ஃபதேஹி தன்னை மூளைச் சலவை செய்ததாகவும் தெரிவித்துள்ளார் சுகேஷ் சந்திரசேகர்.  

அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை முறைகேடாக பெற்றுத்தர இந்திய தலைமைத் தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் அடைக்கப்பட்டுள்ளார். சிறையில் இருந்து கொண்டே தனியார் நிறுவனத்தின் உரிமையாளரின் மனைவியை ஏமாற்றி, 200 கோடி ரூபாய் பணம் பெற்ற வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் டெல்லி குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த வழக்கில் கடந்த ஆகஸ்ட் மாதம் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்த அமலாக்கத்துறை, பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ், நடிகை நோரா உள்ளிட்டோர் பெயரையும் குறிப்பிட்டு இருந்தது. இது தொடர்பாக ஜாக்குலின் பெர்னாண்டஸிடம் தொடர்ச்சியாக அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது. அதில் மினி கூப்பர் கார், விலை உயர்ந்த கடிகாரங்கள், ஹேண்ட் பேக், காலணிகள், பூச்செண்டுகள், குதிரை உள்ளிட்ட 7 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் பரிசளித்ததாகவும் விசாரணையின் போது ஜாக்குலின் பெர்னாண்டஸ் தெரிவித்திருந்தார்.

image
இதனிடையே ஜாக்குலின் பெர்னாண்டஸ் கொடுத்திருக்கிற வாக்குமூலம் டெல்லி பாட்டியாலா வளாக நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்டுள்ள நிலையில், அதன் விபரம் சமீபத்தில் வெளியாகியிருந்தது. அதில், தனது உணர்ச்சிகளுடன் விளையாடி தனது வாழ்க்கையை சுகேஷ் சந்திரசேகர் நரகமாக்கிவிட்டார் என்று பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் குற்றஞ்சாட்டியுள்ளார்.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உறவினர் என்றும், சென்னையை தலைமையிடமாக கொண்ட பிரபல டிவி குழுமத்தின் உரிமையாளர் என்றும் கூறி சுகேஷ் சந்திரசேகர் தன்னை ஏமாற்றிவிட்டார் எனவும் ஜாக்குலின் பெர்னாண்டஸ் குறிப்பிட்டுள்ளார். தனது மிகப்பெரிய ரசிகர் என்றுக் கூறியதுடன், தென்னிந்தியப் படங்களில் தான் நடிக்க வேண்டும் என்று சுகேஷ் கூறியதாக அவர் அதில் தெரிவித்துள்ளார்.

பிரபல டிவி குழுமத்தின் உரிமையாளர் என்பதால், தென்னிந்தியாவில் பலப் படங்களை தயாரிக்க உள்ளதாகவும், இருவரும் சேர்ந்து பலப் படங்கள் செய்யலாம் என்றும் அவர் கூறியதாக ஜாக்குலின் தெரிவித்துள்ளார். சுகேஷ் தன்னை தவறாக வழிநடத்தி தனது தொழிலையும், வாழ்வாதாரத்தையும் நாசமாக்கிவிட்டதாக குறிப்பிட்டுள்ள ஜாக்குலின், உள்துறை மற்றும் சட்ட அமைச்சகங்களின் மூத்த அதிகாரிகளைப் போல ஆள்மாறாட்டம் செய்ததற்காக சந்திரசேகர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார் என்பது வெகுநாட்கள் கழித்துத்தான் தெரிந்தது என்றும், அவரது குற்றப் பின்னணியை அறிந்தப் பிறகுதான், அவரது உண்மையான பெயர் (சுகேஷ் சந்திரசேகர்) தனக்குத் தெரிந்தது என்றும் ஜாக்குலின் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இந்த நிலையில் சுகேஷ் சந்திரசேகர் தனது வழக்கறிஞர்கள் மூலமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ஜாக்குலின் பெர்னாண்டஸ் மீது நடிகை நோரா ஃபதேஹி எப்போதும் பொறாமை கொண்டிருந்ததாகவும் ஜாக்குலினுக்கு எதிராக நோரா ஃபதேஹி தன்னை மூளைச் சலவை செய்ததாகவும், ஜாக்குலினை விட்டு விலகி தன்னுடன் டேட்டிங் செய்ய அவர் விரும்பியதாகவும் சுகேஷ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:- ”நான் நடிகை ஜாக்குலினுடன் நெருக்கமாக பழகி வந்ததால் நடிகை நோராவை தவிர்க்க ஆரம்பித்தேன். ஆனால் அவர் எனக்கு தொடர்ச்சியாக போன் செய்து எரிச்சலூட்டினார். நோரா ஒரு நாளைக்கு குறைந்தது 10 முறையாவது எனக்கு போன் செய்வார். நான் அவரது அழைப்பிற்கு பதிலளிக்கவில்லை என்றாலும் போன் அடித்துக்கொண்டே இருப்பார்.

image
நான் பார்த்துவந்த இசை தயாரிப்பு நிறுவனம் மூலமாக அவரது உறவினர் பாபிக்கு உதவுமாறு கேட்டுக்கொண்டார். நோராவுக்கு பிடித்தமான ஹேண்ட் பேக் மற்றும் நகைகளை அன்பளிப்பாக கொடுத்தேன். அவற்றை நோரா இன்றுவரை பயன்படுத்தி வருகிறார். அதை அவர் தனது சொந்தப் பணத்தில் வாங்கியதாக கூறுவது பொய். ஹெண்ட் பேக் வாங்கியதற்கான ரசீதை காட்டச் சொல்லுங்கள் பார்க்கலாம். அந்த ஹேண்ட் பேக்குகளின் மதிப்பு ரூ.2 கோடிக்கும் அதிகமாக இருக்கும்.

நான் யாரையும் காதலிக்கவில்லை. 9 மாதங்களுக்கு முன்பு அமலாக்க இயக்குநரகத்தின் முன்னிலையில் நடிகை நிக்கி, நடிகை சாஹத் கன்னா ஆகிய இருவரும் கொடுத்த வாக்குமூலமும் இப்போது கொடுத்திருக்கும் புதிய வாக்குமூலமும் வேறுவேறாக இருக்கிறது. அதைப் பார்த்தாலே  நான் பொய் சொல்கிறேனா என்பதை ஊடகங்களால் கண்டுபிடிக்க  முடியும்.

பொருளாதார குற்றப் பிரிவில் அவர்கள் (நடிகைகள் நிக்கி மற்றும் சாஹத் கன்னா ) கொடுத்துள்ள இந்த புதிய அறிக்கை, தங்களைக் காப்பாற்றிக் கொள்ளவும், ஊடகங்களில் விளம்பரம் பெறவும் மட்டுமே. உண்மையை ஒப்புக்கொள்வதற்கு எனக்கு பயமில்லை.  நடிகை நிக்கி, நடிகை சாஹத் கன்னா ஆகிய இருவரும் அமலாக்கப் பிரிவு மற்றும் பொருளாதார குற்றப் பிரிவில் மாற்றிமாற்றி வாக்குமூலம்  அளித்துள்ளனர். இதைப் பார்த்தாலே அவர்கள் பொய் சொல்கிறார்கள் என்பது தெளிவாக தெரியும்.

நான் அனைத்து நடிகைகளிடமும் கண்ணியமாகவும், மரியாதையாகவுமே நடந்திருக்கிறேன். இதுதொடர்பான சாட்டிங் ஸ்கிரீன் ஷாட்களை வெளியிடும் மலிவான நிலைக்கு என்னை தள்ள வேண்டாம். அது உங்களை யாரென்று தோலூரித்துக் காட்டிவிடும்” என்று  சுகேஷ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரத்தில் அடுத்தடுத்து வெளியாகும் வாக்குமூலங்களும், தகவல்களும் மிகவும் அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளன. ஒவ்வொரு நாளும் வெளியாகும் புதிய தகவல்கள் இந்த விவகாரத்தில் எவ்வளவு கோடி ரூபாய் பணம் விளையாடி இருக்கிறது என்பதை தெளிவாக காட்டுகிறது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.