சென்னை: கொடுங்கையூர் குப்பைக் கிடங்கில் உள்ள குப்பைகளை பயோ-மைனிங் முறையில் அகழ்ந்தெடுக்கும் பணிகளை மேற்கொள்ள தமிழக அரசு நிர்வாக அனுமதி அளித்துள்ளது.
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தினசரி சராசரியாக 5,100 மெட்ரிக் டன் குப்பைகள் சேகரிக்கப்படுகின்றன. இவை பெருங்குடி மற்றும் கொடுங்கையூரில் உள்ள குப்பை கொட்டும் கிடங்குகளில் கொட்டப்பட்டு வருகின்றன.
பெருங்குடி குப்பை கொட்டும் கிடங்கில் சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் பல ஆண்டுகளாக கொட்டப்பட்டு வரும் குப்பைகளை ரூ.354 கோடி மதிப்பீட்டில் பயோ-மைனிங் முறையில் பிரித்தெடுத்து நிலத்தை மீட்டெடுக்க ஏற்கனவே பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகள் டிசம்பர் 2023க்குள் நிறைவு பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் சுமார் 343 ஏக்கர் பரப்பளவில் உள்ள கொடுங்கையூர் குப்பைக் கொட்டும் கிடங்கில் சுமார் 252 ஏக்கர் நிலப்பரப்பில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக கொட்டப்பட்டு வரும் சுமார் 66.52 இலட்சம் மெட்ரிக் டன் குப்பைகளை பயோ-மைனிங் முறையில் அகழ்ந்தெடுக்கும் பணிகளை மேற்கொள்ள தமிழக அரசு நிர்வாக அனுமதி அளித்துள்ளது.
தூய்மை இந்தியா திட்ட நிதி, மாநில அரசின் நிதி மற்றும் சென்னை மாநகராட்சி நிதி ஆகியவற்றின் பங்களிப்போடு ரூ.641 கோடி மதிப்பீட்டில் பயோ-மைனிங் முறையில் குப்பைகளை பிரித்தெடுத்து நிலத்தை மீட்டெடுக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. அண்ணா பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப வல்லுநர்களை உள்ளடக்கிய திட்ட கண்காணிப்புக் குழுவின் (Project Monitoring Committee) மூலம் இந்தப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இப்பணிகள் இரண்டு ஆண்டுகளுக்குள் நிறைவு பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.