ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 27 ஆம் தேதி இடைதேர்த்தல் நடக்கவுள்ளது. இந்நிலையில், அரசியல் கட்சிகள் அனைத்தும் வேட்பாளரை தேர்ந்தெடுப்பது, பிரச்சாரத்துக்கு தயாராகுவது குறித்த ஆலோசனைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
கடந்த 2021-ம் ஆண்டு தேர்தலில் தி.மு.க. கூட்டணி சார்பில் காங்கிரசில் போட்டியிட்ட திருமகன் ஈவெரா 67,300 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். சில தினங்களுக்கு மாரடைப்பால் அவர் உயிரிழந்ததால் இடைதேர்த்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், திமுக கூட்டணியில் மீண்டும் காங்கிரசுக்கு ஈரோடு கிழக்கு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.
எனவே காங்கிரஸ் சார்பில் முன்னாள் மத்திய அமைச்சரும் மறைந்த திருமகன் ஈவெராவின் தந்தையுமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போட்டியிடுவாரா என்ற எதிர்பார்ப்பு நிலவியது. இல்லையென்றால் அவரது மனைவி வரலட்சுமி, 2-வது மகன் சஞ்சய் சம்பத், மறைந்த திருமகன் ஈவெராவின் மனைவி பூர்ணிமா ஆகியோரில் ஒருவர் வேட்பாளராக தேர்வு செய்யப்படலாம் என்று கூறப்பட்டது.
தற்போது அதற்கான பேச்சு வார்த்தை நடந்து வரும் நிலையில் மறைந்த திருமகன் ஈவெராவின் மனைவி பூர்ணிமா அல்லது மகன் சஞ்சய் சம்பத்துக்கு வாய்ப்பு வழங்கப்பட கடைசிகட்ட ஆலோனை நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஈவிகேஎஸ் இளங்கோவன் கடந்த முறை தேனி மக்களவை தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டார்.
அவருக்கு எதிராக அதிமுக சார்பில் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் களம் கண்டு வெற்றி பெற்றார். மக்களவை தேர்தலில் திமுக கூட்டணி போட்டியிட்டு தோல்வியடைந்த ஒரே தொகுதியானது தேனி. இந்நிலையில், ஈரோடு இடைத்தேர்தலில் திருமகனின் குடும்ப உறுப்பினர்களுக்கு யாருக்காவது வாய்ப்பு வழங்கப்படும் என்பதில் மாற்று கருத்து இல்லை. எனவே, இளங்கோவனின் மகன் சஞ்சய் சம்பத்துக்கு அந்த வாய்ப்பு வழங்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் கடந்த முறை அதிமுக கூட்டணியில் தமாக போட்டியிட்ட நிலையில் இந்த இடைத்தேதலில் அதிமுகவுக்கு வழிவிட்டுள்ளது. இதனால் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுகவுக்கும் காங்கிரசுக்கும் நேரடி போட்டி நிலவி வருகிறது. ஒரு பக்கம் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடவுள்ளதால் தேர்தல் களம் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இருக்கும்