ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் | காங்கிரஸ் வேட்பாளர் யார்?- மேலிடப் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் ஆலோசனை

சென்னை: ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் யாரை வேட்பாளராக நிறுத்துவது என்பது குறித்து மேலிடப் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் ஆலோசனை நடத்தி வருகிறார். காங்கிரஸ் கட்சி மூத்த நிர்வாகிகளுடன் தனித்தனியாக இந்த ஆலோசனை நடைபெற்று வருகிறது.

ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ திருமகன் ஈவெராவின் மறைவைத் தொடர்ந்து அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 31-ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. பிப்.27-ம் தேதி வாக்குப்பதிவும் மார்ச் 2-ல் வாக்கு எண்ணிக்கையும் நடைபெற உள்ளன.

அத்தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் வாய்ப்பு காங்கிரஸுக்கு வழங்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் வேட்பாளர் தொடர்பாக ஓரிரு நாளில் அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. இந்நிலையில் தான் காங்கிரஸ் கட்சி சார்பில் யாரை வேட்பாளராக நிறுத்துவது என்பது குறித்து மேலிடப் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் ஆலோசனை நடத்தி வருகிறார்.

முன்னதாக நேற்று மறைந்த எம்எல்ஏ திருமகன் ஈவெராவின் தந்தை ஈவிகேஎஸ் இளங்கோவன் அளித்தப் பேட்டியில், “ஈரோடு கிழக்கு தொகுதியில் நான் போட்டியிடவில்லை. இளைஞர்கள் வர வேண்டும். எனது குடும்பத்தில் இருந்து வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்று கட்சி கூறினால் இளைய மகன் சஞ்சய் சம்பத்திற்கு வாய்ப்பு தருமாறு கட்சி தலைமையிடம் கோரிக்கை வைத்துள்ளேன். வேறு சிலரும் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளனர். வேட்பாளர் விவகாரத்தில் காங்கிரஸ் தலைமை எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவேன்” என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.