குடியரசு தினத்தில் தடை செய்யப்பட்ட சீக்கிய அமைப்பால் அச்சுறுத்தல்: சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல்

புதுடெல்லி: குடியரசு தினத்தில் அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் வீடியோ வெளியிட்ட தடை செய்யப்பட்ட அமைப்பின் தலைவன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வரும் 26ம் தேதி நாடு முழுவதும் குடியரசு தினம் கொண்டாடப்படும் நிலையில், சீக்கியர் ஃபார் ஜஸ்டிஸ் அமைப்பின் தலைவன் குருபத்வந்த் சிங் பன்னு, சமூக ஊடகங்களின் மூலம் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளான். அதில், ‘இந்திய ஆக்கிரமிப்பிலிருந்து பஞ்சாபை இந்தாண்டு விடுவிப்போம். வரும் 26ம் தேதியன்று மக்கள் வீட்டுக்குள்ளேயே இருங்கள்; இல்லையெனில் எங்களது அமைப்பினரால் தடுக்கப்படுவீர்கள்.

டெல்லி எங்கள் இலக்காக இருக்கும்; அங்கு நாங்கள் காலிஸ்தானின் கொடியை ஏற்றுவோம். செங்கோட்டையில் காலிஸ்தானின் கொடியை ஏற்றுபவருக்கு 5,00,000 டாலர் பரிசு வழங்கப்படும்’ என்று தெரிவித்துள்ளான். இவனது மிரட்டல் வீடியோ விவகாரம் தொடர்பாக போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வரும் நிலையில், வழக்கறிஞர் வினீத் ஜிண்டால் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் தனியாக மனு தாக்கல் செய்துள்ளார்.

அதில், ‘சமூக ஊடங்களில் வெளியாகி உள்ள வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளேன். தேச விரோத செயல்களில் ஈடுபடுவதை ஊக்குவிக்கும் குர்பத்வந்த் சிங் பண்ணு என்பவன், இந்தியாவில் அறிவிக்கப்பட்ட பயங்கரவாதி ஆவான். அவனது அமைப்பும் தடை செய்யப்பட்ட அமைப்பாகும். டெல்லி மக்களை கொன்றுவிடுவதாக மிரட்டல் விடுக்கும் குர்பத்வந்த் சிங் பண்ணு மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார். இம்மனு மீதான விசாரணை விரைவில் நடக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.