கோகுல்ராஜ் கொலை வழக்கு | திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயிலில் நீதிபதிகள் ஆய்வு

திருச்செங்கோடு: கோகுல்ராஜ் கொலை வழக்கு தொடர்பாக திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயிலில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் என்.ஆனந்த் வெங்கடேஷ் ஆய்வு செய்தனர். அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோயிலில் உள்ள சிசிடிவி கேமிரா அமைந்துள்ள பகுதியை நீதிபதிகள் ஆய்வு செய்தனர்.

கோயிலில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகள் சரியாக ஆய்வு செய்யப்படவில்லை என்று வழக்கில் சம்பந்தப்பட்ட யுவராஜ் தரப்பு தெரிவித்திருந்தது. இந்நிலையில் இன்று காலை நீதிபதிகள் கோயிலில் சிசிடிவி கேமரா அமைந்துள்ள பகுதிகளில் ஆய்வு செய்தனர். கோகுல்ராஜ் வழக்கில் இந்த சிசிடிவி காட்சிகள் தான் முக்கிய ஆதரமாக உள்ளன. முன்னதாக இந்த வழக்கில் சுவாதி உண்மையைச் சொல்ல மறுத்த நிலையில் நீதிபதிகள், சத்தியம் என்றைக்கு வேண்டுமானாலும் சுடும் என்று கூறிய நீதிபதிகள், தவறான தகவலை அளித்ததாக கூறி சுவாதி மீது குற்றவியல் நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நீதிபதிகள் வருகையை ஒட்டி கோயில் சுற்றுவட்டாரத்தில் 200க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்தனர்.

வழக்கு பின்னணி: சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ். பட்டியலினத்தை சேர்ந்தவர். இவர் தன்னுடன் படித்த நாமக்கலைச் சேர்ந்த வேறு சமூக பெண்ணுடன் பழகியுள்ளார். இருவரும் 23.6.2015-ல் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயிலில் சந்தித்துள்ளனர். அதன் பிறகு கோகுல்ராஜ் வீடு திரும்பவில்லை. மறுநாள் தலை வேறு, உடல் வேறாக கோகுல்ராஜின் உடல் நாமக்கல் மாவட்டம் கிழக்கு தொட்டிப்பாளையம் ரயில் தண்டவாளத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.

கோகுராஜை ஆணவக் கொலை செய்ததாக சேலம் சங்ககிரியைச் சேர்ந்த தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ் உட்பட 15 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் யுவராஜ் உட்பட 10 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கியும், 5 பேரை விடுதலை செய்தும் மதுரை மாவட்ட வன்கொடுமை தடுப்பு சட்ட வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றம் 2022 மார்ச் 8-ல் தீர்ப்பளித்தது.

வீடியோவில் இருக்கும் பெண் நான் இல்லை.. யுவராஜ் உட்பட 10 பேரும் தண்டனையை ரத்து செய்யக் கோரி உயர் நீதிமன்ற கிளையில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தனர். விடுதலையான 5 பேருக்கு தண்டனை வழங்கக் கோரி கோகுல்ராஜ் தாயார் சித்ரா, சிபிசிஐடி தரப்பில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கின் முக்கிய சாட்சியாக இருந்து பிறழ்சாட்சியாக மாறிய இளம் பெண் சுவாதியை (கோகுல்ராஜ் உடன் படித்தவர்) உயர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்படுத்த போலீஸாருக்கு உயர் நீதிமன்ற கிளை உத்தரவிட்டிருந்தது.

அதன்படி, கடந்த நவம்பர் 25-ம் தேதியன்று, சுவாதியை போலீஸார் ஆஜர்படுத்தினர். அப்போது அவரிடம், 23.6.2015-ல் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயில் கேமராவில் பதிவான காட்சி போடப்பட்டு, அந்தக் காட்சியில் இருக்கும் பெண் நீங்கள் தானா?, பக்கத்தில் இருப்பவர் யார்? என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை நிதிபதிகள் எழுப்பியிருந்தனர்.
வீடியோவில் இருக்கும் பெண் நான் இல்லை. அந்த ஆண் கோகுல்ராஜ் போல் தெரிகிறது. அதை உறுதியாக சொல்ல முடியாது என்று பதிலளித்திருந்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.