சுயலாபத்துக்காக அதிமுகவை அடகுவைத்து தவிக்கின்றனர்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

பூந்தமல்லி: மதுரவாயல் தெற்கு பகுதி திமுக சார்பில் பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், அன்று சுயலாபத்துக்காக ஆட்சியை அடகு வைத்தவர்கள், இன்று கட்சியை அடகுவைத்து தவித்து கொண்டிருக்கின்றனர் என அதிமுகவை பற்றி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
 
சென்னை தெற்கு மாவட்டம், மதுரவாயல் தெற்கு பகுதி திமுக சார்பில், நேற்று மாலை போரூர் அருகே காரம்பாக்கத்தில் உள்ள நவரத்தினமால் ஜெயின் திடலில் பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு பகுதி செயலாளரும் மதுரவாயல் எம்எல்ஏ காரம்பாக்கம் க.கணபதி தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் இளைஞரணி செயலாளரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், பொருளாளர் டி.ஆர்.பாலு எம்பி, துணை பொது செயலாளர் அந்தியூர் செல்வராஜ் எம்பி, அமைச்சர் மா.சுப்பிரமணியன் உள்பட பலர் பங்கேற்று சிறப்புரையாற்றினர்.
 
இக்கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: என்னுடைய அரசியல் வாழ்க்கைக்கு முதல் உரை எழுதியது மதுரவாயல் தொகுதிதான். நான் பேசியதை டி.ஆர்.பாலு ஞாபகம் வைத்துள்ளார். அவரது அனுபவம், நினைவாற்றல் குறிப்பிடத்தக்கது. அதனால்தான் அவர் பொருளாளராக உள்ளார். தமிழ்நாட்டில் பேராசிரியர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இக்கூட்டங்கள் மூலமாக பலகோடி மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன. கலைஞர்-பேராசிரியரின் நட்பு 3 தலைமுறைகளாக நீடித்து வருகிறது. கலைஞருக்கு பிறகு மு.க.ஸ்டாலின்தான் எனக் கூறி பெருமைப்படுத்தியவர் பேராசிரியர்.
 
அன்று சுயலாபத்துக்காக டெல்லியிடம் ஆட்சியை அடகுவைத்தவர்கள், இன்று கட்சியை அடகுவைத்து தவித்துக் கொண்டிருக்கின்றனர். அண்ணாவின் பெயரில் கட்சி நடத்துபவர்கள், இன்று அவரது பெயரையே மறந்துவிட்டனர். நாம் ஆளுநருக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். தமிழகத்தின்மீது அக்கறை உள்ளவர்கள் யார் என்பதை அவர் அடையாளம் காட்டியுள்ளார். ஒன்றிய பாஜ ஆட்சி அமைந்து 9 ஆண்டுகள் ஆகிறது. அவர்கள் செய்தது என்னவென்று பார்த்தால், மக்களிடையே பிரிவினையை தவிர வேறு எதுவும் செய்யவில்லை. வடமாநிலங்களில் எம்பி, எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குகின்றனர், அது தமிழ்நாட்டில் நடக்காது.
 
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக 40 தொகுதிகளையும் கைப்பற்ற வேண்டும். அதன் முன்னோட்டமாக, ஈரோடு கிழக்கு தொகுதியில் நடைபெறும் இடைத்தேர்தலில் நாம் காங்கிரஸ் கட்சியை அமோக வெற்றி பெற செய்ய வேண்டும். நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கியதை தொடர்ந்து, எதிர்க்கட்சியினர் எதிர்மறை பிரசாரத்தை துவங்கியுள்ளனர். அதை நாம் முறியடிக்க வேண்டும். இந்த கூட்டம்தான், நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்துக்கான முதல் கூட்டம்.
 
ஒடிசா மாநிலத்தில் விளையாட்டு துறைக்கு பட்ஜெட்டில் ரூ.1500 கோடி ஒதுக்குகின்றனர். ஆனால், தமிழகத்துக்கு ரூ.25 கோடிதான். இந்தாண்டு பட்ஜெட்டில் விளையாட்டு துறைக்கு அதிக நிதி ஒதுக்கும்படி முதல்வரிடம் டி.ஆர்.பாலு பரிந்துரை செய்ய வேண்டும். இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
 
இக்கூட்டத்தில் தமிழச்சி தங்கபாண்டியன் எம்பி, எம்எல்ஏக்கள் அரவிந்த் ரமேஷ், ஏஎம்வி.பிரபாகர் ராஜா, துணைமேயர் மு.மகேஷ்குமார், தலைமை செயற்குழு உறுப்பினர் க.தனசேகரன், மாநில வர்த்தகர் அணி செயலாளர் காசிமுத்துமாணிக்கம், சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் ராமாபுரம் வி.ராஜேஷ், நிர்வாகிகள் பாலவாக்கம் சோமு, வேளச்சேரி மணிமாறன், எஸ்.குணசேகரன், பாலவாக்கம் விஸ்வநாதன், மு.மனோகரன், வாசுகி பாண்டியன், எஸ்.பாஸ்கரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.