பாலிவுட் பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள் மற்றும் வி.ஐ.பி-க்கள் தங்களது கணக்குகளை பார்த்துக்கொள்ள தனியாக மேனேஜர் வைத்துக்கொள்வது வழக்கம். அந்த வகையில், கிரிக்கெட் வீரர் உமேஷ் யாதவ் தனது சொத்துகள், ஃபைனான்ஸ் மற்றும் கணக்குகளைப் பார்த்துக்கொள்ள நாக்பூரைச் சேர்ந்த சைலேஷ் தத்தா என்பவரை தனது மேலாளராக நியமித்திருந்தார். உமேஷ் யாதவ் கிரிக்கெட்டில் அதிக நேரத்தை செலவிட்டதால் இந்தப் பணியை தன்னுடைய நண்பரான சைலேஷ் தத்தாவை நம்பி ஒப்படைத்தார். ஆனால் கடந்த ஓர் ஆண்டுக்கும் மேலாக இந்தப் பணியை உமேஷ் யாதவ் தன்னுடைய நண்பர் சைலேஷ் தத்தாவிடம் கொடுக்கவில்லை. சைலேஷ் தத்தாவின் வங்கிக் கணக்குக்கு உமேஷ் யாதவ் தனது வங்கிக் கணக்கிலிருந்து ரூ.44 லட்சத்தை மாற்றிக்கொடுத்தார்.

சொத்து வாங்குவதற்காக இந்தப் பணத்தை உமேஷ் யாதவ் கொடுத்தார். ஆனால், நாக்பூரில் உமேஷ் யாதவ் பெயரில் சொத்து வாங்குவதற்கு பதில் தன்னுடைய பெயரில் சொத்து வாங்கிக்கொண்டார். இது குறித்து தெரியவந்ததும், பணத்தை திரும்பக் கொடுக்கும்படி தத்தாவிடம் உமேஷ் யாதவ் கேட்டார். ஆனால், தத்தா பணத்தையும் கொடுக்கவில்லை, வாங்கிய சொத்தையும் உமேஷ் யாதவ் பெயருக்கு மாற்றிக்கொடுக்கவில்லை.

இதனால் உமேஷ் யாதவ் இது குறித்து போலீஸில் புகார் செய்தார். போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரித்து வருகின்றனர். குற்றவாளி தப்பிச் சென்றுவிட்டார். அவரை போலீஸார் தேடி வருகின்றனர். உமேஷ் யாதவும் நாக்பூரில்தான் வசித்து வருகிறார்.