பணம் கேட்டு பலரும் தொல்லை அடிச்சும் கேட்பாக… பெயரை மட்டும் சொல்லாதீக…: கேரளா லாட்டரியில் ரூ.16 கோடி, ரூ.10 கோடி பரிசு பெற்றவர்கள் கெஞ்சல்

திருவனந்தபுரம்: கேரளாவில் அரசு லாட்டரி  விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதன் மூலம் அரசுக்கு பல கோடி வருமானம்  கிடைத்து வருகிறது. கடந்த வருடம் ஓணத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட பம்பர்  லாட்டரியில் ரூ.25 கோடி முதல் பரிசாக அறிவிக்கப்பட்டது. இந்த லாட்டரியில் முதல் பரிசான ரூ.25 கோடி திருவனந்தபுரத்தை சேர்ந்த ஆட்டோ  டிரைவரான அனூப்  என்பவருக்கு  கிடைத்தது. 25 கோடி கிடைத்த அவரது பேட்டி  மற்றும் புகைப்படங்கள் அனைத்து டிவிக்களிலும், பத்திரிகைகளிலும் வெளியானது.  உறவினர்கள் உள்பட ஏராளமானோர் அவரிடம் பணம் கேட்டு தொல்லை கொடுக்கத்  தொடங்கினர்.
தமிழ்நாட்டில் இருந்து கூட ஏராளமானோர் பணம் கேட்டு நேரடியாக  அவரது வீட்டுக்கு சென்றனர். இதனால் அவர் தன்னுடைய வீட்டை விட்டு வேறு  வீட்டுக்கு குடிபோகும் நிலை ஏற்பட்டது. எனக்கு முதல் பரிசு 25 கோடி  கிடைத்திருக்க வேண்டாம் என்று  அவர் கதறி அழுது ஒரு வீடியோவையும்  வெளியிட்டார்.
இந்நிலையில் கடந்த நவம்பர் 20ம் தேதி பூஜா பம்பர்  குலுக்கல் நடைபெற்றது. இதன் முதல் பரிசு ரூ.10 கோடி ஆகும்.  முதல் பரிசுக்கான  டிக்கெட் திருச்சூரில் விற்பனையானது. ஆனால் 2 மாதங்கள் ஆன பிறகும் அந்த  அதிர்ஷ்டசாலி யார் என தெரியாமல் இருந்தது.

இந்நிலையில் கடந்த 19ம்தேதி  கிறிஸ்துமஸ், புத்தாண்டு பம்பர் குலுக்கல் நடைபெற்றது.  இதன் முதல் பரிசு ரூ.16 கோடியாகும். பாலக்காட்டில் விற்ற டிக்கெட்டின் இந்த  அதிர்ஷ்டசாலியும் யார் என கண்டுபிடிக்க முடியாமல் இருந்தது. இந்நிலையில்  அந்த இரண்டு அதிர்ஷ்டசாலிகளும் தங்களது பெயர், விவரங்களை வெளியிட வேண்டாம்  என்று கேரள லாட்டரித் துறைக்கு கோரிக்கை விடுத்த விவரம் தற்போது  வெளியாகியுள்ளது. இருவரது  கோரிக்கையை ஏற்று அவர்களது பெயர், விவரங்களை வெளியிட வேண்டாம் என்று கேரள  லாட்டரித் துறை தீர்மானித்துள்ளது. தகவல் உரிமை சட்டத்தின் கீழ்  கேட்கப்பட்டாலும் அவர்களது விவரங்கள் வெளியிடப்பட மாட்டாது என்றும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.