ராமேசுவரம், ஸ்ரீரங்கம், குமரியில் ஆயிரக்கணக்கானோர் தை அமாவாசையையொட்டி புனித நீராடல்

ராமநாதபுரம்/திருச்சி/ நாகர்கோவில்: தை அமாவாசையையொட்டி ராமேசுவரம் அக்னி தீர்த்தக் கடல், ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம், குமரி முக்கடல் சங்கமம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆயிரக்கணக்கானோர் புனித நீராடி முன்னோருக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.

ஆடி, தை அமாவாசை நாட்களில் புண்ணிய நதிகளில் நீராடி முன்னோருக்கு தர்ப்பணம் அளிப்பது அவர்களது ஆன்மாக்களுக்கு செய்யும் கடமையாகும் என்பது ஐதீகம். அந்த வகையில், தை அமாவாசையான நேற்று, புண்ணியத் தலமான ராமேசுவரம் அக்னி தீர்த்தக் கடலில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க ராமநாதபுரம் மாவட்டம் மற்றும் தமிழகம், வெளிமாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதலே கூடினர்.

அக்னி தீர்த்தக் கடலில் புனித நீராடி தர்ப்பணம் கொடுத்த பிறகு, கோயிலுக்குள் உள்ள 22 தீர்த்தங்களிலும் நீராடினர். பின்னர் பக்தர்கள் 2 மணி நேரத்துக்கும் மேலாக வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

தை அமாவாசையையொட்டி அக்னி தீர்த்தக் கடற்கரையில் ராமர், சீதா, லட்சுமணர் பஞ்ச மூர்த்திகளுடன் எழுந்தருளி தீர்த்தவாரி நடைபெற்றது. இதை ஏராளமான பக்தர்கள் தரிசித்தனர். பக்தர்கள் கூட்டம் காரணமாக பாம்பன் பாலம், ராமேசுவரம் நகர் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

அம்மா மண்டபம்: ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறையில் உள்ளூர் மற்றும் வெளியூர்களிலிருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கானோர் திரண்டு, காவிரி ஆற்றில் புனித நீராடி தங்களது முன்னோருக்கு தர்ப்பணம் அளித்தனர்.

காவிரிப் பாலம் பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருவதால், புறவழிச்சாலையை சுற்றிக் கொண்டு அம்மா மண்டபம் செல்ல வேண்டிய நிலை இருப்பதால், இந்த ஆண்டு ஓயாமரி பகுதி ராணிமங்கம்மாள் படித்துறை, சிந்தாமணி, அய்யாளம்மன் படித்துறை பகுதிகளில் ஏராளமானோர் புனித நீராடி தர்ப்பணம் அளித்தனர்.

பின்னர், ஸ்ரீரங்கம், திருவானைக்காவல், சமயபுரம் உள்ளிட்ட கோயில்களில் வழிபட்டனர்.

முக்கடல் சங்கமத்தில்..: கன்னியாகுமரியில் நேற்று அதிகாலை 3 மணியில் இருந்தே தமிழகம் மற்றும் கேரளாவில் இருந்து ஏராளமானோர் குவியத் தொடங்கினர். முக்கடல் சங்கமத்தில் நீராடிய பக்தர்கள் தர்ப்பைப்புல், எள், பச்சரிசி, பூக்கள் போன்றவற்றைக் கொண்டு பலிகர்ம பூஜை செய்து, தலையில் சுமந்து சென்று கடலில் கரைத்தனர்.

கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் அதிகாலை 3.30 மணிக்கு சிறப்பு பூஜை மற்றும் வழிபாடுகள் நடைபெற்றன. இரவில் முக்கடல் சங்கமத்தில் பகவதியம்மனுக்கு ஆராட்டு நடைபெற்றது. பின்னர் ஆண்டின் 5 நாட்கள் மட்டுமே திறக்கப்படும் கிழக்கு வாசல் திறக்கப்பட்டு கோயிலுக்குள் அம்மன் பிரவேசிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நாகர்கோவில், வள்ளியூர் மற்றும் பிற பகுதிகளில் இருந்து கன்னியாகுமரிக்கு சிறப்பு பேருந்து வசதிகள் செய்யப்பட்டிருந்தன. கடலில் நீராடி பலிதர்பணம் செய்த பக்தர்கள் குளிப்பதற்கான குளியலறை வசதி, கழிப்பறை, குடிநீர் வசதிகள் போதிய அளவு ஏற்படுத்தி கொடுக்கவில்லை என பக்தர்கள் ஆதங்கப்பட்டனர்.

நாகர்கோவில் – கன்னியாகுமரி சாலை, திருநெல்வேலி – காவல் கிணறு – கன்னியாகுமரி சாலை, கன்னியாகுமரி கிழக்கு கடற்கரை சாலை ஆகியவற்றில் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.