'எங்களுக்கு தான் இரட்டை இலை!' – மாஜி அமைச்சர் செங்கோட்டையன் ஆரூடம்!

ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் எங்களுக்கு தான் இரட்டை இலை சின்னம் கிடைக்கும் என எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளரும், முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன் தெரிவித்து உள்ளார்.

ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏவாக இருந்த திருமகன் ஈவெரா, உடல்நலக் குறைவால் அண்மையில் உயிரிழந்தார். இதை அடுத்து ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.

இதை அடுத்து, ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதிக்கு பிப்ரவரி மாதம் 27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்றும், வாக்கு எண்ணிக்கை மார்ச் மாதம் 2 ஆம் தேதி நடைபெறும் என்றும் இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் வரும் 31 ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது. இதையொட்டி அனைத்து கட்சிகளும் தேர்தலை சந்திக்க சுறுசுறுப்பாகி வருகிறது.

ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில், காங்கிரஸ் கட்சி போட்டியிட உள்ளது. இதில், மறைந்த திருமகன் ஈவெராவின் தந்தை ஈவிகேஎஸ். இளங்கோவன் களமிறங்க உள்ளார்.

இதே போல், கடந்த முறை தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி வேட்பாளர் போட்டியிட்ட நிலையில், இந்த முறை அதிமுக போட்டியிடுவதாக ஜி.கே.வாசன் அறிவித்தார். அதிமுகவை பொறுத்தவரை, ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் என இருதரப்பினர் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளதால் சின்னம் யாருக்கு கிடைக்கும் என்ற எதிர்ப்பார்ப்பு நிலவி வருகிறது.

இந்நிலையில், “எங்கள் தரப்பிற்கு தான் இரட்டை இலை சின்னம் கிடைக்கும்,” என, எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளரும், முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன் தெரிவித்து உள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக உறுதியாக வெற்றி பெறும். ஈரோடு கிழக்கு தொகுதி அதிமுகவின் கோட்டை என்பதை மீண்டும் நிரூபிப்போம். 1972 திண்டுக்கல் தேர்தல் போல் ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் தமிழகத்தில் திருப்புமுனையாக அமையும்.

திமுக தேர்தல் பணி குழுவில் அமைச்சர்கள் இடம் பெற்றிருப்பது வழக்கம் தான். நாங்களும் பணி குழு அமைத்து தேர்தல் பணியை துவக்குவோம். மக்கள் சரியாக இருக்கிறார்கள். மனம் மாறி இருக்கிறார்கள். அதிமுகவினர் வீடு, வீடாக சென்று வாக்கு சேகரிப்பார்கள். இரட்டை இலை சின்னம் எங்களுக்கு தான் கிடைக்கும். எடப்பாடி பழனிசாமி தலைமையில்அதிமுக வலிமையுடன் போட்டியிட்டு வெற்றி பெறும். அதிமுக வேட்பாளரை எடப்பாடி பழனிசாமி விரைவில் அறிவிப்பார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.