குடியரசு தின அணிவகுப்பில் எத்தனை அலங்கார ஊர்திகள்? மத்திய அரசு தகவல்!

குடியரசு தின விழா கொண்டாட்டங்கள் டெல்லியில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்படும். குடியரசு தின விழாவையொட்டி, அன்றைய தினம் டெல்லி ராஜபாதையில் நடைபெறும் விழாவில், பல்வேறு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் கலாச்சாரங்களை குறிக்கும் மாதிரிகள் இடம்பெற்ற ஊர்திகள் அணிவகுப்பு நடைபெறும்.

அந்த வகையில், நாட்டின் 74ஆவது குடியரசு தின விழாவையொட்டி நடைபெறும் அணிவகுப்பில் இடம்பெறக் கூடிய பல்வேறு மாநிலங்களின் அலங்கார ஊர்திகள் தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளன. மொத்தம் ஏழு கட்டமாக நடைபெற்ற தேர்வுகளின் அடிப்படையில் இந்த ஊர்திகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

இந்த நிலையில், குடியரசு தின அணிவகுப்பில் நாட்டின் வளமான கலாச்சார பாரம்பரியம், பொருளாதார முன்னேற்றம் மற்றும் வலுவான பாதுகாப்பு ஆகியவற்றை சித்தரிக்கும் 23 அலங்கார ஊர்திகள் இடம்பெறுகின்றன. 17 ஊர்திகள் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலிருந்தும், பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளின் சார்பில் 6 ஊர்திகளும் இந்த அணிவகுப்பில் இடம்பெறுகின்றன என்று மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.

அசாம், அருணாச்சலப் பிரதேசம், திரிபுரா, மேற்கு வங்கம், ஜம்மு – காஷ்மீர், லடாக், தாத்ரா நகர் ஹவேலி, டாமன் – டையூ, குஜராத், ஹரியானா, உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், ஜார்க்கண்ட், மகாராஷ்டிரா, ஆந்திரப் பிரதேசம், தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் 17 அலங்கார ஊர்திகள், நாட்டின் புவியியல் மற்றும் வளமான கலாச்சார பன்முகத்தன்மையை சித்தரிக்கும் வகையில் குடியரசு தின அணிவகுப்பின் போது காட்சிப்படுத்தப்படும்.

கலாச்சார அமைச்சகம், உள்துறை அமைச்சகத்தின் மத்திய ஆயுதக் காவல் படைகள், உள்துறை அமைச்சகத்தின் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகத்தின் மத்திய பொதுப்பணித் துறை, பழங்குடியினர் நல அமைச்சகம், வேளாண் மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்தின் இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கவுன்சில் ஆகியவை சார்பில் 6 அலங்கார ஊர்திகளும் குடியரசு தின அணிவகுப்பில் இடம்பெறும். இவை கடந்த சில ஆண்டுகளில் செய்த பணிகள் மற்றும் சாதனைகள் அந்தந்த அலங்கார ஊர்திகளில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும்.

பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து அலங்கார ஊர்திகள் தொடர்பாக பெறப்பட்ட முன்மொழிவுகளை நிபுணர் குழு ஆய்வு செய்தது. அலங்கார உறுதியின் கருப்பொருள், விளக்கக்காட்சி, அழகியல் மற்றும் தொழில்நுட்பக் கூறுகள் குறித்து மாநிலங்களின் பிரதிநிதிகளுடன், நிபுணர் குழு உறுப்பினர்கள் பல சுற்று கலந்துரையாடல்களை மேற்கொண்டு ஆய்வு செய்து, அதன் அடிப்படையில், குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்கும் அலங்கார ஊர்திகளின் தேர்வு நடைமுறை மேற்கொள்ளப்பட்டது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

முன்னதாக, குடியரசு தினவிழா அணிவகுப்பில் கர்நாடக மாநில அரசின் அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுக்கப்பட்டு, பின்னர் வழங்கப்பட்டது. அதேபோல், கடந்த ஆண்டு அனுமதி வழங்கப்படாத தமிழ்நாடு ஊர்திக்கு இந்த ஆண்டு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.