சிவசேனா: பால் தாக்கரே பிறந்தநாளில் முடிவுக்கு வந்த உத்தவ் தாக்கரேயின் தலைவர் பதவி – அடுத்தது யார்?!

`மண்ணின் மைந்தர்களின் உரிமையை நிலைநாட்டுவதற்காக’ என்று மறைந்த பால் தாக்கரேயால் உருவாக்கப்பட்ட சிவசேனா பல முறை விரிசல்களை சந்தித்தாலும், தற்போது ஏற்பட்டுள்ளது போன்ற ஒரு பிளவை சந்தித்தது கிடையாது. தற்போது சிவசேனாவின் பெரும்பாலான எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.பி.க்கள் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா அணிக்கு சென்றுவிட்டனர். இதனால் சிவசேனாவுக்கு இது சோதனைக்காலம் என்றுதான் சொல்லவேண்டும். கடந்த மே மாதம் சிவசேனாவில் ஏற்பட்ட பிளவு காரணமாக இப்போது யாரது அணி உண்மையான சிவசேனா என்ற கேள்வி எழுந்துள்ளது. இது தொடர்பாக வழக்கு சுப்ரீம் கோர்ட் மற்றும் தேர்தல் கமிஷன் என இரண்டிலும் இருக்கிறது.

தேர்தல் கமிஷன் ஏக்நாத் ஷிண்டே மற்றும் உத்தவ் தாக்கரேயின் மனுக்களை விசாரிக்க ஆரம்பித்திருக்கிறது. அடுத்த மாதத்தில் இவ்விவகாரத்தில் இறுதித்தீர்ப்பு கிடைக்கும் என்று உறுதியாக இருதரப்பினரும் நம்புகின்றனர். இம்மாதம் 30ம் தேதிக்குள் இருதரப்பினரும் தங்களிடம் இருக்கும் ஆவணங்கள் அனைத்தையும் தாக்கல் செய்யும் படி தேர்தல் கமிஷன் உத்தரவிட்டு இருக்கிறது. தற்போது சிவசேனா தலைவராக இருக்கும் உத்தவ் தாக்கரேயின் பதவிக்காலம் இன்றோடு முடிவுக்கு வருகிறது.

அதாவது இன்று பால் தாக்கரேயின் பிறந்த தினமாகும். பால் தாக்கரேயின் பிறந்த நாளில் உத்தவ் தாக்கரேயின் தலைவர் பதவிக்காலம் முடிவுக்கு வருகிறது. இதனால் உத்தவ் தாக்கரே தொடர்ந்து தலைவர் பதவியில் நீடிப்பாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. தேர்தல் கமிஷன் நடைமுறைகள் முடிவுக்கு வரும் வரை கட்சியில் தேர்தல் நடத்த முடியாது. கட்சியில் பெரும்பாலான எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.பி.க்கள் தங்களுக்கு ஆதரவாக இருப்பதால் ஏக்நாத் ஷிண்டேதான் கட்சி தலைவர் என்று ஏக்நாத் ஷிண்டே அணியினர் கூறுகின்றனர்.

தற்போது ஏக்நாத் ஷிண்டேயை அவரின் அணியினர் தங்களது கட்சியின் முதன்மை நிர்வாகி என்று அழைக்கின்றனர். ஆனால் கட்சியில் அப்படி ஒரு பதவியே இல்லை என்று உத்தவ் தாக்கரே கட்சியினர் வாதிடுகின்றனர். இது குறித்து உத்தவ் தாக்கரேயின் அணி எம்.பி.சஞ்சய் ராவத் கூறுகையில், “உத்தவ் தாக்கரேதான் கட்சியின் தலைவர், யார் கட்சியின் தலைவராக இருக்கவேண்டும் என்று முடிவு செய்ய கட்சிக்கு அதிகாரம் இருக்கிறது” என்று குறிப்பிட்டார்.

ஏக்நாத் ஷிண்டே, உத்தவ் தாக்கரே

இதே போன்று சிவசேனா(உத்தவ் அணி) முன்னாள் அமைச்சர் அனில் பரப் அளித்த பேட்டியில், “கட்சி தொண்டர்களுக்கும், கட்சி தலைவர்களுக்கும் உத்தவ் தாக்கரேதான் தலைவர். இதற்கு தேர்தல் கமிஷனில் சட்டப்பூர்வமாக அங்கீகாரம் பெறுவோம்” என்று தெரிவித்தார். சட்டமன்றத்தில் இன்று பால்தாக்கரேயின் படம் திறக்கப்பட இருக்கிறது. இதில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

இதில் கலந்து கொள்ளும்படி தாக்கரே குடும்பத்தை சேர்ந்த அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதில் உத்தவ் தாக்கரே தனது குடும்பத்தோடு கலந்து கொள்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதே சமயம் ராஜ் தாக்கரே இதில் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பால் தாக்கரே கட்டிக்காத்த சிவசேனாவுக்கு அவரது பிறந்த நாளில் உத்தவ் தாக்கரே தலைவராக இல்லாமல் போனது கட்சித்தொண்டர்களை மிகவும் கவலையடைய செய்துள்ளது. உத்தவ் தாக்கரே கட்சியினர் தங்களுக்கு சுப்ரீம் கோர்ட்டில் நீதி கிடைக்கும் என்று உறுதியாக நம்புகின்றனர்.

ஓரிரு மாதத்தில் மும்பை மாநகராட்சிக்கு தேர்தல் அறிவிக்கப்பட இருக்கிறது. அதற்குள் யாரது அணி உண்மையான சிவசேனா என்பதை தேர்தல் கமிஷன் முடிவு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. கட்சியின் சின்னமான வில் அம்பு யாருக்காவது ஒதுக்கப்படுமா அல்லது முடக்கப்படுமா என்றும் விரைவில் தெரிய வரும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.