"நான் சினிமாவை விட்டு விலக வேண்டும் என்று நினைக்கிறார்களா?"- ராஷ்மிகா மந்தனா வருத்தம்

கன்னட திரையுலகில் ஆரம்பித்த ராஷ்மிகா மந்தனாவின் திரையுலகப் பயணம் தெலுங்கு, தமிழ், மலையாளம் என பாலிவுட் வரை சென்றிருக்கிறது. எனவே அடுத்தடுத்து பல படங்களில் நடித்து ரொம்பவும் பிஸியான நடிகையாக திரையுலகில் வலம் வருகிறார்.

இந்நிலையில் அண்மையில் பாலிவுட்டில் அமிதாப் பச்சனுடன் `good bye’, தமிழில் விஜய்யுடன் `வாரிசு’ என வெளியாகிய நிலையில் தற்போது பாலிவுட்டில் அவர் நடித்த `Mission Majnu’ திரைப்படம் கடந்த ஜனவரி 20-ம் தேதி வெளியாகியுள்ளது. இப்படி ஒருபுறம் பிஸியாக நடித்துக் கொண்டிருந்தாலும் அவரைப் பற்றிய பல வதந்திகளும், பல விமர்சனங்களும் சமூகவலைதளங்களில் பரவி வருகின்றன. இதனால் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் ராஷ்மிகா, தனக்கு எதிராக வெறுப்பான கருத்துகளும், வதந்திகளும் தன்னை மிகவும் மன ரீதியாகப் புண்படுத்துவதாக வருத்தம் தெரிவித்துள்ளார்.

ராஷ்மிகா மந்தனா

இது பற்றி கூறியுள்ள அவர், “எனக்கு எதிராக வெறுப்பான கருத்துகள் பரப்புகின்றனர். அது ஏன் என்று எனக்குப் புரியவில்லை. அதிக உடற்பயிற்சி செய்தால் ஆணைப்போல இருப்பதாகச் சொல்கிறார்கள். உடற்பயிற்சி செய்யாவிட்டால் உடல் பருமனுடன் குண்டாக இருக்கிறேன் என்கிறார்கள். எதுவும் பேசாமல் இருந்தால் திமிரு என்கிறார்கள். நான் என்னதான் செய்வது? நான் சினிமாவை விட்டு விலக வேண்டும் என்று நினைக்கிறார்களா? என்னிடம் உங்களுக்கு என்னதான் பிரச்சினை.

உங்கள் வார்த்தைகள் மன ரீதியாக என்னை மிகவும் புண்படுத்துகின்றன. இந்தி பாடலை உயர்வாகவும், தென்னிந்தியப் பாடல்களை அவமதிக்கும் வகையிலும் நான் பேசியதாகக் கூறியிருக்கிறார்கள். நான் அப்படி எதுவும் பேசவே இல்லை. வாரிசு படத்தில் எனக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என்று கூறுகிறார்கள். நான் வாரிசு படத்தில் ஒரு அங்கமாக இருக்க வேண்டும் என்றுதான் விரும்பினேன். காரணம் எனக்கு விஜய் அவர்களை மிகவும் பிடிக்கும்” என்று தனது வருத்ததைப் பதிவு செய்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.