பாலியல் புகார் எதிரொலி மல்யுத்த கூட்டமைப்பு செயல்பட ஒன்றிய அரசு அதிரடி தடை: அவசர பொதுக்குழு கூட்டம் ரத்து

அயோத்தி: வீராங்கனைகளின் பாலியல் புகார் விவகாரத்தை தொடர்ந்து, இந்திய மல்யுத்த கூட்டமைப்பு செயல்பட ஒன்றிய விளையாட்டு அமைச்சகம் அதிரடி தடை விதித்துள்ளது. இதனால், கூட்டமைப்பின் அவசர பொதுக்குழு கடைசி நிமிடத்தில் நேற்று ரத்து செய்யப்பட்டது. இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும், பாஜ எம்பியுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மல்யுத்த வீராங்கனைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்துவதாகவும், சர்வாதிகாரமாக செயல்படுவதாகவும், வினேஷ் போகத், பஜ்ரங் புனியா, சாக்சி மாலிக் உள்ளிட்ட நாட்டின் முன்னணி மல்யுத்த வீரர், வீராங்கனைகள் குற்றச்சாட்டு சுமத்தினர்.

இதுதொடர்பாக வீரர், வீராங்கனைகள் டெல்லியில் 3 நாள் தர்ணா போராட்டம் நடத்தியதைத் தொடர்ந்து, ஒன்றிய விளையாட்டு அமைச்சர் அனுராக் தாக்கூர் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த விவகாரம் தொடர்பாக மேற்பார்வை குழு அமைத்து விசாரிப்பதாக அமைச்சர் உறுதி அளித்ததால், வீரர், வீராங்கனைகள் போராட்டத்தை கைவிட்டனர்.  அதைத் தொடர்ந்து கூட்டமைப்பின் உதவி செயலாளர் வினோத் தோமரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து விளையாட்டு அமைச்சகம் நேற்று முன்தினம் உத்தரவிட்டது. இந்நிலையில், மல்யுத்த கூட்டமைப்பு தினசரி செயல்பாடுகளை மேற்கொள்ளவும் விளையாட்டு அமைச்சகம் அதிரடி தடை விதித்துள்ளது.

மேற்பார்வை குழு அமைத்து, அக்குழு செயல்பாடுகளை கைவசம் எடுத்துக் கொள்ளும் வரை கூட்டமைப்பு சார்பில் எந்த பணிகளையும் மேற்கொள்ளக் கூடாது என இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. அதோடு குற்றச்சாட்டுக்கு ஆளான பிரிஜ் சிங் கூட்டமைப்பு செயல்பாடுகளில் இருந்து விலகி இருக்குமாறும் விளையாட்டு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இதனால், அயோத்தியில் நேற்று நடந்த இருந்த கூட்டமைப்பின் அவசர பொதுக்குழு கடைசி நிமிடத்தில் ரத்து செய்யப்பட்டது. இந்த விவகாரத்தில் பிரிஜ் மீதான பிடி இறுகத் தொடங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.