போடி – சென்னை ரயிலில் முழுவதும் முன்பதிவு பெட்டிகள்: தேனி மாவட்ட மக்கள் அதிருப்தி

போடி: சென்னையில் இருந்து மதுரை வரை வரும் அதிவேக ரயில் பிப்ரவரி 19 முதல் போடி வரை நீட்டிக்கப்பட உள்ளது. இந்த ரயிலில் அனைத்தும் முன்பதிவு பெட்டிகளே உள்ளன. ஆகவே பொதுப்பெட்டிகளையும் இதில் இணைத்து இயக்க வேண்டும் என்று தேனி மாவட்ட பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மதுரை – போடி இடையே 90 கிமீ தொலைவிலான அகலப் பாதையில் தற்போது தேனி வரை சிறப்பு பயணிகள் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. கடந்த மாதம் போடி வரை பணிகள் முடிந்தநிலையில் பிப்.19-ம் தேதி முதல் மதுரை-தேனி ரயில் போடி வரை நீட்டிக்கப்பட உள்ளது. அதேபோல் வாரம் மூன்று நாட்களுக்கு போடியில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கும்(20602), சென்னையில் இருந்து போடிக்கும் (20601) ரயில் இயக்கப்படும் என்று தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

சென்னை ரயிலைப் பொறுத்தளவில் மதுரை வரை இயங்கும் அதிவேக ரயிலே (20601) போடிக்கு நீட்டிக்கப்பட உள்ளது. மதுரையில் இருந்து கிளம்பும் இந்த ரயில் திண்டுக்கல், கரூர், சேலம், காட்பாடி, பெரம்பலூர் ஆகிய நிறுத்தங்களில் நின்று செல்கின்றன. மேலும் தூங்கும் வசதியுடன் கூடிய பெட்டிகள் 4ம், மற்ற அனைத்தும் ஏசி பெட்டிகளுடனும் இயங்கி வருகின்றன. முன்பதிவற்ற பெட்டிகள் இதில் இல்லை.

12 ஆண்டுகளுக்குப் பிறகு போடிக்கு ரயில்வசதி கிடைத்துள்ளது தேனி மாவட்ட மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இருப்பினும் முன்பதிவற்ற பெட்டி இந்த ரயிலில் இல்லாததால் பயணிகளுக்கு ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது.

ரயில்வே ஆலோசனைக் குழு உறுப்பினர் கேஎஸ்கே நடேசன் கூறுகையில், “தேனி மாவட்டத்திற்கான புதிய ரயில் போக்குவரத்து மகிழ்ச்சியை அளிக்கிறது. இருப்பினும் சென்னை ரயிலில் பொதுப்பெட்டிகள் இணைப்பது அவசியம். திடீர் பயணங்களுக்கு இது உறுதுணையாக இருக்கும். தேனி போன்ற விவசாய மாவட்டத்தில் முழுவதும் ஏசி மற்றும் முன்பதிவு பெட்டிகளுடன் கூடிய ரயில் இயக்கம் வரவேற்பைப் பெறாது. மேலும் மகால் எக்ஸ்பிரஸை போடிக்கு நீட்டிப்பதுடன், பெங்களூருக்கும் ரயில் இயக்க வேண்டும். இதன் மூலம் இந்தியாவின் அனைத்து பகுதிகளுக்கும் ரயிலில் செல்லும் நிலை ஏற்படும்” என்றார்.

இதுகுறித்து மதுரை ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், “பொதுப்பெட்டி இணைப்பது குறித்து பொதுமக்களிடம் இருந்து கோரிக்கைகள் வந்துள்ளன. இதுகுறித்து சென்னை அலுவலகத்திற்கு தகவல் அனுப்பி இருக்கிறோம். விரைவில் இது சம்பந்தமான உத்தரவு வரும்” என்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.