'ஹிஜாப் அணிந்திருக்கும்போது நான் நானாக இல்லை' – ஈரான் செஸ் வீராங்கனை

மாட்ரிட்,

ஈரான் நாட்டின் தெஹ்ரான் நகரில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 13-ம் தேதி ஹிஜாப் சரியாக அணியவில்லை என்று கூறி குர்திஸ்தான் மாகாணத்தை சேர்ந்த மாஷா அமினி (வயது 22) என்ற இளம்பெண்ணை ஈரான் அறநெறி போலீசார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட மாஷா அமினியை போலீசார் தாக்கியதில் அவர் கோமா நிலைக்கு சென்றார். பின்னர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாஷா செப்டம்பர் 16-ம் தேதி உயிரிழந்தார்.

இதையடுத்து, ஈரானில் ஹிஜாப் அணிவதற்கு எதிராக பெண்கள் போராட்டத்தில் குதித்தனர். மாத கணக்கில் நடைபெற்ற போராட்டத்தின் வெற்றியாக இஸ்லாமிய மத சட்டங்கள் சரியாக பின்பற்றப்படுவதையும், பொதுவெளியில் பெண்கள் ஹிஜாப் ஆடை அணிவதை உறுதிபடுத்தும் ‘அறநெறி போலீஸ்’ பிரிவை ஈரான் கலைத்துள்ளது.

அதேவேளை, ஹிஜாப் எதிர்ப்பு போராட்டக்காரர்கள் மீது பாதுகாப்பு படையினர் தாக்கியதில் இதுவரை 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும், போராட்டத்தில் ஈடுபட்டபவர்களை கைது செய்து அதில் சிலருக்கு ஈரான் அரசு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டு வருகிறது.

இதனிடையே, ஈரான் விளையாட்டு வீராங்கனைகள் உள்ளூர்/சர்வதேச விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கும்போது ஹிஜாப் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆனால், கஜகஸ்தானில் கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற சர்வதேச செஸ் விளையாட்டு போட்டியில் ஈரான் செஸ் வீராங்கனை சாரா ஹதீம் (வயது 25) ஹிஜாப் அணியாமல் பங்கேற்றார்.

இதனால், நாடு திரும்பிய உடன் அவரை கைது செய்ய ஈரான் அரசு திட்டமிட்டது. இதையடுத்து, சாரா ஹதீம் தனது கணவர் மற்றும் 10 மாத குழந்தையுடன் ஸ்பெயின் நாட்டிற்கு தப்பிச்சென்றார் .

இந்நிலையில், ஸ்பெயின் தஞ்சமடைந்துள்ள சாரா ஹதீம் முதல் முறையாக ஸ்பெயின் செய்தித்தாள் நிறுவனத்திற்கு பேட்டியளித்தார்.

அந்த பேட்டியில் அவர் கூறுகையில், கஜகஸ்தானில் சர்வதேச செஸ் போட்டிக்கு முன் கேமராக்கள் இருந்தால் மட்டுமே நான் ஹிஜாப் அணிவேன். ஏனென்றால் நான் ஈரான் நாட்டிற்காக விளையாடுகிறேன்.

ஆனால், ஹிஜாப் அணிந்திருக்கும்போது நான் நானாக இல்லை. நான் நன்றாக உணருவதில்லை. ஆகையால், அந்த சூழ்நிலைக்கு நான் முற்றுப்புள்ளி வைக்க எண்ணினேன். இதனால், இனிமேல் ஹிஜாப் அணியப்போவதில்லை என முடிவெடுத்தேன்’ என்றார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.