2022 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை இன்று ஆரம்பம்

2022ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை இன்று ஆரம்பமாகிறது.

பரீட்சையை நடத்துவதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

இதற்கமைவாக நாடளாவிய ரீதியில் இரண்டாயிரத்து 200 பரீட்சை நிலையங்களில் இன்று பரீட்சை ஆரம்பமாகிறது.
இந்த முறை மூன்று லட்சத்து 31 ஆயிரத்து 709 பரீட்சாத்திகள் பரீட்சைக்கு தோற்றவுள்ளனர்.

317 பரீட்சை இணைப்பு மத்திய நிலையங்களும் நிறுவப்பட்டுள்ளன. பரீட்சை அனுமதிப் பத்திரங்கள் கிடைக்கப் பொறாதவர்கள் பரீட்சைகள் திணைக்களத்தின் இணையதளத்தில் பிரவேசித்து அதனை தரவிறக்கம் செய்துகொள்ள முடியும்.

இதேவேளை, கல்விப் பொதுத் தராதரப்பத்திர உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களின் வசதி கருதி விசேட போக்குவரத்து ஒழுங்குகள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன. இலங்கை போக்குவரத்துச் சபை, தேசிய போக்குவரத்து ஆணைக்குழு மற்றும் ரெயில்வே திணைக்களம் இணைந்து இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுக்கும்.

மேலதிகமாக ஆயிரத்து 617 பஸ்கள் பரீட்சை நடைபெறும் காலத்தில் சேவையில் ஈடுபடுத்த உள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இவ்வாறு சேவையில் ஈடுபடும் பஸ் வண்டிகளுக்கு ஒரு கிலோ மீற்றருக்கு 105 ரூபா நிவாரணம் வழங்கப்படுமென்று ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் நிலான் மெரென்ட் தெரிவித்துள்ளார்.

பரீட்சை கடமையில் ஈடுபடும் ஆசிரியர்கள் உட்பட ஏனைய ஊழியர்கள், மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர், இந்த பஸ் வண்டிகளில் பயணிக்க முடியும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.