32 வார கருவை கலைக்க மறுத்த மருத்துவமனை.. நீதிமன்றத்தை நாடிய பெண்.. நீதிபதி சொன்ன கருத்து!

’ஊனமுற்ற கருவைக் கலைப்பதற்கான உரிமை, கர்ப்பிணிப் பெண்ணுக்கே உண்டு’ என மும்பை உயர்நீதிமறம் தெரிவித்துள்ளது.
’உடல் மற்றும் மனநல குறைபாடுகளுடன் குழந்தை பிறக்க வாய்ப்புள்ளதால், தன்னுடைய கருவைக் கலைக்க அனுமதிக்க வேண்டும்’ என 32 வார கர்ப்பிணிப் பெண் ஒருவர் மும்பை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். அதாவது, கருவில் கடுமையான பிரச்சினைகள் இருப்பதாகவும், உடல் மற்றும் மனநல குறைபாடுகளுடன் குழந்தை பிறக்கும் என்றும் சோனோகிராஃபி மூலம் அந்த பெண்ணிற்கு தெரியவந்துள்ளது. இதையடுத்து, அந்தப் பெண் தன்னுடைய கருவைக் கலைக்க முன்வந்துள்ளார். ஆனால், மருத்துவ நிர்வாகம் சம்மதிக்கவில்லை எனத் தெரிகிறது. இதையடுத்தே அந்த பெண் தனது கர்ப்பத்தை கலைக்கக் கோரி உயர்நீதிமன்றத்தை அணுகினார்.
இந்த மனு, நீதிபதிகள் கெளதம் படேல் மற்றும் எஸ்.ஜி.டிகே ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு, கடந்த ஜனவரி 20ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது தீர்ப்பளித்த நீதிமன்றம், ‘இந்த விஷயத்தில், கர்ப்பத்தைத் தொடர்வதையும் கலைப்பதையும் தேர்வு செய்யும் உரிமை, அந்தக் கருவைச் சுமக்கும் பெண்ணுக்கே உண்டு’ எனத் தீர்ப்பு கூறியது. இதுகுறித்து நீதிமன்றம் இன்று தந்திருக்கும் நகலில், ’கருவில் கடுமையான பாதிப்புகள் இருப்பதாக பரிசோதனை அறிக்கைகள் தெரிவித்தாலும், கருவை கலைக்கக் கூடாது என்ற மருத்துவக் குழுவின் கருத்தை ஏற்க முடியாது. கருவில் பாதிப்பு இருப்பதை அறிந்தே, அந்தப் பெண் இத்தகைய முடிவை எடுத்துள்ளார்.
image
இந்த முடிவு அந்தப் பெண்ணின் விருப்பத்தை உடையது. ஆகையால் இதைத் தொடர்வதும் கலைப்பதும் அந்தப் பெண்ணுக்கே மட்டுமே உரிமை உண்டு. இதில் எதைத் தேர்ந்தெடுக்கிறார் என்பது அவரது முடிவைப் பொறுத்தது. ஆரோக்கியமான குழந்தை பிறக்காது என அந்தப் பெண்ணுக்கே நன்கு தெரிகிறது. ஆகையால், அவரது உரிமையில் மருத்துவ வாரியம் தலையிடுவது முறையல்ல. இதனால் குழந்தைக்கும் அந்தப் பெண்ணுக்கும் எதிர்காலத்தில் பாதிப்பை ஏற்படுத்தும். குடும்ப வாழ்க்கையிலும் சிக்கலை உருவாக்கும். மருத்துவ வாரியத்தின் இந்தக் கருத்தை ஏற்றுக்கொண்டால் மனுதாரர் மற்றும் அவரது கணவரின் மகிழ்ச்சி பாதிக்கப்படும். இதனால், அவர்களது குடும்பத்தில் ஏற்படும் விளைவுகளை எண்ணிப் பார்க்க முடியாது.
மேலும் மனுதாரரின் கரு, மைக்ரோசெபாலி மற்றும் லிசென்ஸ்பாலி ஆகிய இரண்டிலும் கண்டறியப்பட்டுள்ளது. இந்தச் சோதனையிலேயே குழந்தையின் எதிர்காலம் குறித்து சொல்லப்பட்டுள்ளது. மேலும், தம்பதியரின் சமூக மற்றும் பொருளாதார நிலையை மருத்துவ வாரியம் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. மருத்துவ வாரியத்தின் பரிந்துரையைப் பின்பற்ற வேண்டுமானால், மனுதாரர் காலவரையற்ற எதிர்காலத்தைத் தாங்கிக் கொள்ள வேண்டும்” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.