உயரிய விருதாகக் கருதப்படும் ‘தி அகாடமி அவார்ட்ஸ்’ எனப்படும் ஆஸ்கர் விழா ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் 95வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா வருகிற மார்ச் மாதம் நடைபெறவுள்ளது. தற்போது ஆஸ்கர் இறுதிப் பரிந்துரைப் பட்டியலுக்கு முந்தைய தகுதிப் பட்டியலுக்காக (Eligible List) தேர்வு செய்யப்பட்டுள்ள 301 படங்களின் பெயர்களைத் தேர்வுக் குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
அதன்படி விவேக் அக்னிஹோத்திரி இயக்கி சர்ச்சையைக் கிளப்பிய ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படமும், ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த ‘காந்தாரா’ திரைப்படமும், பார்த்திபனின் ‘இரவின் நிழல்’ படமும், மாதவன் இயக்கி நடித்த ‘ராக்கெட்ரி’ படமும் இந்தப் பட்டியலில் இடம்பிடித்துள்ளன.

இதுதவிர ஆலியா பட் நடித்த ‘கங்குபாய் கத்தியவாடி’ படமும் இதில் இடம்பெற்றுள்ளது. ஏற்கெனவே தேர்வான ‘RRR’, இந்தியா சார்பில் அதிகாரபூர்வமாக ஆஸ்கர் தேர்வுக்கு அனுப்பப்பட்ட குஜராத்திப் படமான ‘Chhello Show’ படமும் இந்தத் தகுதிப் பட்டியலில் இடம்பிடித்துள்ளன. இவற்றுடன் ‘மீ வசந்த்ராவ்’, ‘தி நெக்ஸ்ட் மார்னிங்’, கிச்சா சுதீப் நடித்த ‘விக்ராந்த் ரோனா’ உட்பட மொத்தம் 10 இந்திய திரைப்படங்கள் இப்பட்டியலில் இடம்பிடித்துள்ளன.
மேலும் இப்பட்டியலில் ‘அவதார்: தி வே ஆஃப் வாட்டர், ‘பிளாக் பாந்தர்: வகாண்டா பாரெவர்’, ‘ஆப்டர்சன்’ (Aftersun) போன்ற ஹாலிவுட் படங்களும் இடம்பெற்றுள்ளன.
இதனைத் தொடர்ந்து ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ இயக்குநர் விவேக் அக்னிஹோத்திரி தனது ட்விட்டர் பக்கத்தில் தனது படம் ஆஸ்கர் விருதுகளுக்கான தகுதிப் பட்டியலில் இடம்பிடித்துள்ள செய்தியைப் பகிர்ந்து இந்திய சினிமாவிற்கு இது சிறப்பான ஓர் ஆண்டு எனத் தெரிவித்திருக்கிறார்.
BIG ANNOUNCEMENT: #TheKashmirFiles has been shortlisted for #Oscars2023 in the first list of @TheAcademy. It’s one of the 5 films from India. I wish all of them very best. A great year for Indian cinema.
— Vivek Ranjan Agnihotri (@vivekagnihotri) January 10, 2023
அந்த மஹா சமுத்திரத்தில் இந்த எளியவனின் படம் எலிஜிபில் லிஸ்ட் வரை வந்ததே வரம் தான்.அதுவும் ஒரு R (upee) கூட செலவழிக்காமல், RRR-க்கெல்லாம் பல cR செலவழித்து campaign செய்கையில்!!! https://t.co/PLMuiIeHap
— Radhakrishnan Parthiban (@rparthiepan) January 10, 2023
‘இரவின் நிழல்’ திரைப்படமும் இந்தத் தகுதிப் பட்டியலில் இடம்பெற்றுள்ளதைத் தொடர்ந்து பார்த்திபனும் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி ட்வீட் ஒன்றைப் பதிவிட்டுள்ளார். அதில், “அந்த மஹா சமுத்திரத்தில் இந்த எளியவனின் படம் எலிஜிபில் லிஸ்ட் வரை வந்ததே வரம்தான். அதுவும் ஒரு R(upee) கூட செலவழிக்காமல், RRR-க்கெல்லாம் பல cR செலவழித்து campaign செய்கையில்!” என்று குறிப்பிட்டுள்ளார்.
ரிஷப் ஷெட்டியின் ‘காந்தாரா’ திரைப்படம் சிறந்த படம் மற்றும் சிறந்த நடிகர் ஆகிய இரண்டு பிரிவுகளில் தேர்வாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.