Varisu Deleted Scenes Exclusive: `சரத்குமாரின் நண்பன் பிரகாஷ் ராஜ்! விஜய்யின் கபடி!'- வம்சி ஷேரிங்ஸ்

விஜய் நடிப்பில் பொங்கலுக்கு வெளியாகியிருக்கும் ‘வாரிசு’ திரைப்படத்தின் இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி, அந்தப் படத்தில் பணியாற்றிய அனுபவத்தை நம்மிடம் பகிர்ந்திருக்கிறார்.

மேலும், அந்த பிரத்யேக நேர்காணலில் நீளம் காரணமாக நீக்கப்பட்ட காட்சிகளையும் அதிலிருக்கும் சுவாரஸ்யங்களையும் கூறியிருக்கிறார். இயக்குநர் வம்சியின் Uncut ‘வாரிசு’ இதோ…

இயக்குநர் வம்சி – நடிகர் விஜய்

பிரகாஷ்ராஜ் – சரத்குமார் பிளாஷ்பேக்!

படத்தின் அறிமுக காட்சியில் பிரகாஷ்ராஜும் சரத்குமாரும் உரையாடும்போது ‘ஃப்ரண்ட்’ என்ற வார்த்தையோடு தொடங்கும். இதற்குப் பின்னால் ஒரு சுவாரஸ்ய கதை உள்ளது. கதையில் பிரகாஷ் ராஜும் சரத்குமாரும் நல்ல நண்பர்கள். பிரகாஷ் ராஜ் ஒரு வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர். சரத்குமார் ஒரு நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர். இருவரும் ஒரே கல்லூரியில் படிக்கிறார்கள். இந்நிலையில் இருவரும் இணைந்து ஒரு சுரங்கத் தொழிற்சாலை துவங்கும்போது ஏற்படும் பிரச்சனையால் சரத்குமார் வெளியேறி தனியாக ஒரு நிறுவனத்தைத் துவங்குகிறார். இப்படி நல்ல நண்பர்கள் வாழ்நாள் எதிரிகளாக மாறியதால்தான், பிரபு “இரண்டு நண்பர்கள் எதிரியாய் மாறும்போது சண்டை போராக மாறுது” என்ற வசனத்தை பேசுகிறார்.

விஜய்- பிரகாஷ்ராஜ் மீட்டிங்….!

படத்தின் நாயகன் விஜய் பிரகாஷ் ராஜின் அலுவலகத்திற்கு சென்று பேசும் மாஸான சீன் ஒன்று இருந்தது. முதலில் மரியாதையோடு பிரகாஷ் ராஜை அணுகிப் பேசுவார் விஜய். அப்போது விஜய்யை சீண்டும் விதமாக ”உன்னை உங்க அப்பா பேச அனுப்பினாரா? உங்க அப்பாவிடம் போய் என் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்க சொல்லு” என்பது போல் பேசுகிறார் பிரகாஷ்ராஜ். இதற்கு பின்னர் தான் விஜய்யின் மேனரிஸம் முழுவதுமாக மாறி, ‘மாமே… எனக்கு 5 நிமிஷம்தான் மரியாதையா பேச வரும். நான் வந்து உன்கிட்ட பேசும்போது, நீ பெரிய மனுஷனா நடந்திருக்கணும். ஆனா, நடந்துக்கலை. ஆடலாம் மாமே… கபடி கபடி கபடி” என்று ‘கில்லி’ டோனில் விஜய் மாஸாக பேசும் டயலாக் கூட வைத்திருந்தோம்.

விஜய் – பிரகாஷ்ராஜ்

பிரகாஷ்ராஜ் – சரத்குமார் மீட்டிங் 

“விஜய் – பிரகாஷ் ராஜிடம் ‘என் அப்பாக்கிட்ட என்ன இல்லை… பணம், பவர் எல்லாமே இருக்கு. ஆனா, அந்த மனுஷன் கேட்டது என்ன தெரியுமா? நிம்மதியான சாவு’ என்று விஜய் கூறிவார். அதன் பிறகு, விஜய்யுடன் வந்து சரத்குமாரை பிரகாஷ்ராஜ் சந்திக்கும் சீன் ஒன்று இருந்தது. பயங்கர எமோஷனான சீன் அது. அப்போது ஒரு சிகரெட்டை பற்றவைத்து சரத்குமாரிடம் கொடுத்து, இருவரும் உரையாடத் துவங்குவார்கள். “உனக்கு ஞாபகம் இருக்கா… நம்ம நட்பு இந்த சிகரெட்டில் இருந்துதான் ஆரம்பமானது. என் வாழ்க்கையில் உன்னை சந்திக்கவில்லை என்றால் என் அப்பாவுடைய மகனாக மட்டுமே இருந்திருப்பேன். உன்னை ஜெயிக்கணும்னு நான் நினைச்ச பிறகுதான், எனக்கான ஒரு அடையாளம் கிடைச்சது. அதற்கு நன்றி. உன் இளைய மகனை சந்தித்த பிறகு, வாழ்வின் இறுதி நிமிடங்களில் நிம்மதி எவ்வளவு முக்கியம் என்பதை புரிந்துகொண்டேன். இப்போது உன்னைச் சந்தித்துப் பேசவில்லை என்றால், நான் இறக்கும் தருவாயில் நிம்மதி இருக்காது. என்னை மன்னிச்சிடு நண்பா” என்று சரத்குமாரிடம் மன்னிப்பு கேட்பார் பிரகாஷ் ராஜ்.

குஷ்புவின் போர்ஷன் : 

வீட்டில் ஜெமினி கணேசன் புகைப்படம் மாட்டப்பட்டிருக்கும். ஆனால், ஆரம்பத்தில் அந்த இடத்தில் மாட்டப்பட்டிருந்தது வேறொரு நடிகரின் போட்டோ. அவர்தான் கதையில் சரத்குமாரின் தம்பி. அவர் காதலித்த பெண்தான் குஷ்பு. ஒரு நாள், சிக்னலில் குஷ்புவை சந்திக்கிறார் விஜய். அவரை பின்தொடர்ந்து செல்லும் அவர், குஷ்புவின் நர்சரிக்கு செல்கிறார். அங்கு வைக்கப்பட்டிருக்கும் புகைப்படங்களைக் கண்டு வருத்தமடைகிறார். விஜய் நிற்பதைக் கண்ட குஷ்புக்கு என்ன வேண்டும் எனக் கேட்கும்போது, ‘செடிகள் வேண்டும்’ எனக் கூறுகிறார். அப்போது இருவருக்கும் இடையே உரையாடல் துவங்குகிறது.

விஜய் – குஷ்பு

‘இதற்கு முன்னாள் உன்னைச் சந்தித்திருக்கிறேனா?’ எனக் கேட்கும் குஷ்புவிடம் இல்லை என மறுக்கிறார் விஜய். அவரது நர்சரியில் தனது சித்தப்பாவின் புகைப்படங்கள் மாட்டியிருப்பதை கவனிக்கிறார். ஒரு நாள், அவருக்கு ஒரு பிரச்னை வருகிறது. அதனை விஜய் தீர்த்து வைக்கிறார். சூப்பரான ஆக்‌ஷன் காட்சி அது. அப்போது தான் விஜய்க்குத் தான் யார் என்று தெரியும் என்பது குஷ்புவுக்கு புரிகிறது. பிறகு வீட்டிற்கு வந்து, தன் சித்தப்பாவின் படத்திற்கு முன் நின்று ‘இன்னும் சித்தப்பா இறந்த வருத்தத்திலிருந்து அவர் மீளவில்லை’ என ஜெயசுதாவிடம் கூறுகிறார். தன் தம்பிக்கு ஒரு பணக்கார வீட்டு பெண்ணை திருமணம் செய்து வைத்தால் தனது பிஸினஸிற்கு உதவியாக இருக்கும் என்று நினைத்து, தனது தம்பியின் காதலை எதிர்க்கிறார். அதனால், விரக்தியில் தற்கொலை செய்துகொள்கிறார், சரத்குமாரின் தம்பி. தனது பிஸினஸிற்காக சொந்த தம்பியையே இழந்த தனது அப்பாவை விஜய்க்கு பிடிக்காமல் போனது. ஏற்கெனவே, அப்பா – மகனுக்கு இடையில் கருத்து வேறுபாடு இருக்க, இந்த சம்பவம் இன்னும் பிரிவை உண்டாக்குகிறது.

இப்படியான நல்ல சீன் படத்தில் இடம்பெறாமல் போனது வருத்தமே. இது போன்ற நல்ல காட்சிகள் டெலீட்டட் சீன்ஸ் லிஸ்டில் கண்டிப்பாக இடம்பெறும் என உறுதியளித்திருக்கிறார் இயக்குநர் வம்சி.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.