"எல்லோருடனும் சமமாகவும், எளிமையாகவும் பழகுவார்!" – ஈ.ராமதாஸ் நினைவுகள் பகிரும் மன்சூர் அலிகான்

இயக்குநரும், வசனகர்த்தாவும், நடிகருமான ஈ.ராமதாஸ் இன்று அதிகாலை மாரடைப்பால் மரணம் அடைந்தார். கவுண்டமணி உட்படத் திரையுலகில் பலரின் நெருங்கிய நண்பராகவும் திகழ்ந்தவர் ராமதாஸ். மன்சூர் அலிகான் தயாரிப்பில் ‘ராவணன்’, ‘வாழ்க ஜனநாயகம்’ என இரண்டு படங்களை இயக்கியவர்… சமீபத்தில் வெளியான சந்தானத்தின் ‘ஏஜென்ட் கண்ணாயிரம்’, ஜீவாவின் ‘வரலாறு முக்கியம்’ ஆகிய படங்களிலும் நடித்திருந்தார்.

ஈ.ராமதாஸின் மறைவு குறித்து இங்கே மனம் திறக்கிறார் மன்சூர் அலிகான்.

‘ஏஜென்ட் கண்ணாயிரம்’ படப்பிடிப்பில் ராமதாஸ்

“இன்னிக்கு காலையில வெளியூர்ல படப்பிடிப்பில் இருந்தேன். ஈ.ராமதாஸ் சாரின் மகன் போன் செய்து, அவர் தவறின விஷயத்தைச் சொன்னார். மனசு சங்கடமாகிடுச்சு. படப்பிடிப்பை அப்படியே விட்டுட்டு உடனே சென்னைக்குக் கிளம்பி வந்துட்டு இருக்கேன். எல்லார்கிட்டேயும் உரிமையோடு பழகக்கூடியவர். ரொம்ப எளிமையா இருப்பார். கடவுள் பக்தி நிறைந்தவர். அவர் இயக்குநராக அறிமுகமான ‘ஆயிரம் பூக்கள் மலரட்டும்’ படத்துல மோகன் ஹீரோ. அந்தப் படத்துல ஒரு பாடல்ல நான் க்ரூப் டான்ஸ் ஆடியிருப்பேன். அப்பவே அவர் என்கிட்ட பிரியமா பழகுவார்.

அதன் பிறகு அவரோட அனல் பறக்கும் அரசியல் வசனங்களைப் பேசி நடிச்சிருக்கேன். மனசுல பட்டதைத் துணிந்து எழுதுவார். இயல்பாகவே நகைச்சுவை உணர்வு அதிகம் உள்ளவர். அதை எழுத்திலும் கொண்டு வந்துடுவார்.

மன்சூர் அலிகான்

நான் தயாரிச்ச ‘ராவணன்’, ‘வாழ்க ஜனநாயகம்’ இரண்டிலும் அவர்தான் இயக்குநர். அவரோட வேலை செய்த நாள்களை மறக்க முடியாது. என்னோட படங்களாக இருந்தாலும் சரி, வெளி தயாரிப்பாக இருந்தாலும் சரி, இயக்குநர்கள் என்ன சொல்றாங்களோ அதைச் செய்துடுவேன். அதனாலேயே அவருக்கு என்னை ரொம்ப பிடிச்சுப்போச்சு. சீன் நல்லா வந்தால், பாராட்டுகளை அவர் முகம் பிரதிபலிச்சிடும். அவரோட பலம் அவரது எளிமையும் அன்பும். அவரது இழப்பு வேதனைக்குரியது. நல்ல மனிதரை இழந்துருக்கேன்…” என்கிறார் மன்சூர் அலிகான்.

மறைந்த ஈ.ராமதாஸுக்கு மனைவியும், இரண்டு மகன்களும் உண்டு. அவரது மூத்த மகன் ஆஸ்திரேலியாவிலும், இளைய மகன் சென்னையிலும் பணியாற்றி வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.