தாடிக்கொம்பு அருகே ஜல்லிக்கட்டில் 500 காளைகள் சீறிப்பாய்ந்தன

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், தாடிக்கொம்பு அருகே உலகம்பட்டியில் அமைந்துள்ள 100 ஆண்டு பழமையான புனித பெரிய அந்தோணியார் திருத்தல தேர்த்திருவிழாவை முன்னிட்டு ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டிற்கான ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடைபெற்றது. இப்போட்டியில் 500 காளைகளும், 400 மாடுபிடி வீர்களும் கலந்து கொண்டனர். முன்னதாக, மருத்துவ குழுவினரின் உடல் பரிசோதனை செய்த பிறகே  மாடுபிடி வீரர்களும், காளைகளும் வாடிவாசல் பகுதிக்கு அனுமதிக்கப்பட்டனர்.

மேலும் காளைகளை அடக்குவதற்கு, தலா 25 பேர் கொண்ட குழுவினர், 15 குழுக்களாக பிரித்து போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர். இப்போட்டியில் சீறிப்பாய்ந்து வெற்றிபெற்ற காளைகளுக்கும், காளைகளை அடக்கிய வீரர்களுக்கும் கட்டில், அண்டா, டிவி, கடிகாரம் உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன. ஜல்லிக்கட்டு போட்டிக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், டவுன் டிஎஸ்பி கோகுலகிருஷ்ணன், தாடிக்கொம்பு சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் தலைமையில் 250 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

விழாவில் திண்டுக்கல் திமுக ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன், மாநில வர்த்தக அணி இணைச் செயலாளர் ஜெயன், அகரம் பேரூராட்சி தலைவர் மணி என்ற நந்தகோபால், துணைத்தலைவர் ஜெயபால், இளைஞரணி அமைப்பாளர் கதிரேசன், சுரேஷ், அகரம் பேரூராட்சி கவுன்சிலர்கள் ருத்ரேஸ்வரன், கிளாரா மேரி, கண்ணன், முத்துமாயன், உலகம்பட்டி ஊர் முக்கியஸ்தர்கள், நாட்டாமைகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.