தஞ்சாவூர்: தஞ்சாவூர் ஓவியத்தின் மூலம் தேசிய அளவில் சில்ப் குரு விருதை, துணைக் குடியரசு தலைவரிடமிருந்து பெற்ற கும்பகோணத்தை சேர்ந்த ஓவியரை, அவரது இல்லத்துக்கே சென்று இன்று (ஜன.23) எம்எல்ஏ சாக்கோட்டை க.அன்பழகன் பாராட்டினார்.
இந்திய கைவினைப் பொருட்கள் மற்றும் ஜவுளித் துறையில் மதிப்புமிக்க பங்களிப்புக்காக ஆண்டுதோறும் சில்ப் குரு விருது தேசிய அளவில் வழங்கப்படுகிறது. 2017, 2018, 2019 ஆகிய மூன்று ஆண்டுகளுக்கான சில்ப் குரு மற்றும் தேசிய விருதுகள் கடந்த ஆண்டு நவ.18-ம் தேதி வழங்கப்பட்டன.
இதில், தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் காமராஜர் நகரைச் சேர்ந்த “தஞ்சாவூர் ஓவியக் கலைஞர்” வி.பன்னீர்செல்வம்(59) 2019-ம் ஆண்டுக்கான சில்ப் குரு விருதை குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் வழங்கினார். இதைத் தொடர்ந்து கடந்த வாரம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை வி.பன்னீர்செல்வம் சந்தித்து, சில்ப் குரு விருதை காட்டி, முதல்வரிடம் வாழ்த்துப் பெற்றார்.
இந்நிலையில், கும்பகோணத்துக்கு பன்னீர்செல்வம் அவரது இல்லத்துக்கு வந்ததும், அவரது இல்லத்துக்கு கும்பகோணம் எம்எல்ஏ சாக்கோட்டை க.அன்பழகன் நேரில் சென்று பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தார். அவருடன் கும்பகோணம் ஒன்றியக்குழு துணைத் தலைவர் டி.கணேசன் உடனிருந்தார்.

பின்னர் வி.பன்னீர்செல்வம் கூறும்போது, ” நான் கும்பகோணத்தில் கடந்த 40 ஆண்டுகளாக தஞ்சாவூர் பாணி ஓவியங்களை வரைந்து வருகிறேன். என்னிடம் 30 பெண்கள் வேலை பார்த்து வருகின்றனர். மேலும் மாணவர்கள் பலருக்கும் தஞ்சாவூர் பாணி ஓவியங்களை பயிற்சியாக வழங்கி வருகிறேன்.
நான் ஏற்கெனவே தேசிய விருது, மாநில அளவில் பூம்புகார் விருது உள்ளிட்ட பல விருதுகள் பெற்றுள்ளேன். கைவினைத் துறையில் மிக உயரிய விருதான சில்ப் குரு விருதை துணை குடியரசு தலைவர் மூலம் பெற்றேன். இந்த விருது மூலம் தஞ்சாவூர் ஓவியம் இன்னும் பிரபலமடையும் வாய்ப்புள்ளது.
தொடர்ந்து கடந்தவாரம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் சில்ப் குரு விருதை காட்டி வாழ்த்து பெற்றேன். தற்போது கும்பகோணம் எம்எல்ஏ சாக்கோட்டை க. அன்பழகன், எனது இல்லத்துக்கே வந்து, தஞ்சாவூர் பாணி ஓவியங்கள் வரைவதை பார்த்தும், பாராட்டினா்” என்றார்.