ஷாருக்கானை பற்றி இன்னும் அவ்வளவாக தெரியாது : தொலைபேசியில் பேசிய நிலையில் அசாம் முதல்-மந்திரி

கவுகாத்தி,

நடிகர் ஷாருக்கான்-தீபிகா படுகோனே நடித்த ‘பதான்’ இந்திப்படம் நாளை (புதன்கிழமை) வெளியாகிறது. இதன் ஒரு பாடல் காட்சி சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், சமீபத்தில் அசாம் மாநிலம் கவுகாத்தியில் ஒரு தியேட்டருக்குள் புகுந்த பஜ்ரங்தள் அமைப்பினர், ‘பதான்’ பட சுவரொட்டிகளை கிழித்து தீயிட்டு எரித்தனர். படத்துக்கு எதிராக கோஷமிட்டனர்.

இதற்கு ஷாருக்கான் கண்டனம் தெரிவித்தார். அசாம் மாநில முதல்-மந்திரி ஹிமந்த பிஸ்வா சர்மா, ”ஷாருக்கான் யார்?” என்று கேட்டார். பின்னர், கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2 மணியளவில் அவருடன் ஷாருக்கான் தொலைபேசியில் பேசினார்.

‘பதான்’ வெளியீடு

இந்தநிலையில், ஷாருக்கானை பற்றி இன்னும் தனக்கு தெரியாது என்று ஹிமந்த பிஸ்வா சர்மா கூறியுள்ளார். நேற்று அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

கடந்த சனிக்கிழமை இரவு 7.40 மணிக்கு எனக்கு ஷாருக்கானிடம் இருந்து ஒரு குறுஞ்செய்தி வந்திருந்தது. அதில், ”நான் ஷாருக்கான். உங்களிடம் பேச விரும்புகிறேன்” என்று அவர் கூறியிருந்தார்.

என்னை பார்க்க நிறைய பேர் காத்திருந்ததால், அனைவரையும் அனுப்பி விட்டு, மறுநாள் அதிகாலை 2 மணியளவில், ‘இப்போது பேசலாம்’ என்று செய்தி அனுப்பினேன். உடனே அவர் தொலைபேசியில் பேசினார்.

தனது படம் வெளியாகப் போவதாகவும், அதற்கு எந்த பிரச்சினையும் ஏற்படாது என்று நம்புவதாகவும் கூறினார். படத்தின் பெயர் என்ன? என்று கேட்டேன். ‘பதான்’ என்று கூறினார். எந்த பிரச்சினையும் வராது என்று நான் கூறினேன்.

அந்த படத்தை விரும்புபவர்கள் பார்க்கலாம். விரும்பாதவர்கள் புறக்கணிக்கலாம். பிரச்சினை செய்து, அசாமுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்துவதை நான் விரும்பவில்லை.

இன்னும் தெரியாது

அதே சமயத்தில், ஷாருக்கானை இன்னும் எனக்கு அவ்வளவாக தெரியாது. ஏன் தெரிந்து வைத்திருக்க வேண்டும்? அவர் அவ்வளவு பிரபலம் என்று நிச்சயமாக தெரியாது.

எனக்கு பழைய நடிகர்களைத்தான் தெரியும். அமிதாப்பச்சன், தர்மேந்திரா, ஜிதேந்திரா படங்களை பார்த்திருக்கிறேன். 2001-ம் ஆண்டில் இருந்து 6 அல்லது 7 படங்கள்தான் பார்த்துள்ளேன். சினிமா ஈர்ப்பு, ஒவ்வொரு தலைமுறைக்கும் மாறுபடுகிறது.

முதலில், அசாமில் உள்ள 3 கோடி மக்களையும் எனக்கு தெரியாது. எனக்கு ஓட்டு போட்ட வாக்காளர்களை கூட தெரியாது.

சினிமா சுவரொட்டிகளை கிழிப்பது குற்றமல்ல. எந்த சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்ய முடியும்? அரசியல்வாதிகளின் சுவரொட்டிகளை கிழிப்பது பற்றி யாரும் பேசுவது இல்லை என்று அவர் கூறினார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.