ஸ்ரீவாணி அறக்கட்டளை மூலம் வரும் வருவாயை ஆந்திர அரசுக்கு வழங்கவில்லை – திருப்பதி தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரி விளக்கம்

திருமலை: திருப்பதி ஏழுமலையானை, ரூ.10,000 நன்கொடை வழங்கி ஸ்ரீவாணி அறக்கட்டளை மூலம் பக்தர்கள் தரிசிக்கின்றனர். இதில் 50 சதவீத நிதி ஆந்திர அரசுக்கு வழங்குவதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது.

இதுகுறித்து தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி, நேற்று திருமலையில் உள்ள அன்னமைய்யா பவனில் கூறியதாவது:

கடந்த 2019-ம் ஆண்டு ‘ஸ்ரீவாணி அறக்கட்டளை’ தொடங்கப்பட்டது. ஒரு லட்ச ரூபாய்க்கும் கீழ் நன்கொடை வழங்கும் பக்தர்களுக்காக இந்த அறக்கட்டளை தொடங்கப்பட்டது. அப்படி ஒரு பக்தர், ரூ.10,000 நன்கொடை வழங்கினால், அவருக்கு விஐபி பிரேக் தரிசனம் வாயிலாக ரூ.500 டிக்கெட் வாங்கிக் கொண்டு சுவாமியை தரிசிக்க இந்த ஸ்ரீவாணி அறக்கட்டளை வகை செய்கிறது. மேலும் ஏழுமலையான் கோயில்களை பின்தங்கிய பகுதிகள் எங்கும் கட்டித்தர வேண்டும் என்கிற நல்லெண்ணத்திலும், சிதில மடைந்துள்ள பழங்கால கோயில் களை புதுப்பிக்கவும், தீப, தூப, நைவேத்தியத்திற்காக நிதியுதவி வழங்கவும் இந்த அறக்கட்டளை தொடங்கப்பட்டது.

ஆனால், சிலர் சமூக வலைதளங்கள் மூலம் தவறான தகவலை பரப்பி வருகின்றனர். குறிப்பாக, இந்த அறக்கட்டளை மூலம் வரும் வருவாயை தேவஸ்தானம் தனது ஊழியர்களுக்கு மாத ஊதியமாகவும், ஆந்திர அரசுக்கு அவ்வப்போது நிதி வழங்குவதாகவும் பொய்யான தகவல்களை பரப்பி வருகின்றனர். இது மிகவும் கண்டிக்கத்தக்கது. இவ்வாறு புரளிகளை பரப்புவோர் மீது கண்டிப்பாக சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இதையெல்லாம் பக்தர்கள் நம்ப வேண்டாம்.

இந்த ஸ்ரீவாணி அறக்கட்டளை நிதி மூலம், ஆந்திரா, தெலங் கானா, கர்நாடகா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் எஸ்சி, எஸ்டி, பிசி மற்றும் மீனவர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் ஏழுமலையானுக்கு 2,068 கோயில்கள் கட்டப்பட்டு வருகின்றன. சமரசதா சேவா அறக்கட்டளை மூலம் ரூ.32 கோடி யில் 320 கோயில்களும், ஆந்திர அரசின் இந்து சமய அறநிலையத் துறை சார்பில் பழுதடைந்த 150 கோயில்களை ரூ.130 கோடி செலவில் புதுப்பித்தல் பணிகளும் நடைபெற்று வருகின்றன. இதுதவிர தீப, தூப, நைவேத்தியங்கள் இன்றி உள்ள கோயில்களுக்காக ரூ. 2.5 கோடியை ஸ்ரீவாணி அறக்கட்டளை மூலம் வழங்கி வருகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.