Harris Jayaraj : ஒன்றா… ரெண்டா வார்த்தைகள்! – ஆட்ட நாயகன் ஹாரிஸ் ஜெயராஜுக்கு ஒரு ரசிகையின் கடிதம்!

ப்ரியங்கள் நிறைந்த ஹாரிஸ் ஜெயராஜ், பிறந்தநாள் வாழ்த்துகள். பல்வேறு மொழிகள், பலதரப்பட்ட கலாசாரங்கள் என பேதங்கள் கடந்து மக்களின் உணர்வுகளோடு பிணைந்திடும் தன்மை மற்ற கலைகளைவிட இசைக்கு உண்டு.

உங்களின் இசையும், பாடல்களும் எங்களுக்கு அப்படியான ஒன்றுதான். உங்களுக்குத் தெரியும். பெரும்பாலான தமிழ் மக்களுக்கு இசையென்பது பாடல்களுடன் கூடிய திரையிசைதான். `மின்னலே’, `மஜ்னு’, `12 பி’ என நீங்கள் இசையமைப்பாளராக அறிமுகமாகி பிறகு முன்னணி இசையமைப்பாளராக வளரத் தொடங்கியிருந்த நாட்களில்தான் மொபைல் போன் என்கிற வஸ்து எங்களுக்கு அறிமுகமானது.

‘மின்னலே’

`பாட்டு கேக்க இனிமையா இருக்கணும், சவுண்ட் தரமா இருக்கணும்!’ என ரிங்டோன் வைக்கத் தேடியபோது, `ஜூன் போனால் ஜூலை காற்றே’, `மூங்கில் காடுகளே’, `அன்பே என் அன்பே’ என்று உங்களின் பாடல்களே எங்கள் செல்போன்களின் முதல் ரிங்டோன். புதுமையான இசை, அழுத்தமான வரிகள், மென்மையான உணர்வுகள் என உங்கள் பாடல்கள் மீது உடனே காதல் கொண்டோம். இப்படி இசையமைப்பாளராக மெல்ல நுழைந்தீர்கள் எங்கள் வாழ்வில். ஓமகசியா போன்ற என்ன வார்த்தையென்றே கண்டுபிடிக்க முடியாத உங்கள் பாடல்களின் அர்த்தமில்லாத சொற்கள் (Gibberish), புதுமையாக இருந்தன. என்னவென்று புரியாமல் எங்களுக்குப் புரிந்த சொற்களைப் பாடி மகிழ்ந்தோம் . மற்றொருபுறம், உங்கள் பாடல்களின் அர்த்தமுள்ள சொற்கள் தெளிவாக எங்கள் மனங்களை ஆளுமை செய்தன. வார்த்தைகளை விழுங்காத உங்கள் பாடல்களுக்கு என்றுமே தனித்துவம் உண்டு.

இன்றும் என் நினைவில் இருக்கிறது ரேடியோவில் நான் முதன் முதலில் கேட்ட, `ஒன்றா ரெண்டா ஆசைகள் பாடல்!’ தன் காதல் கணவனிடம் தன் ஆசைகளை கோரும் காதலியின் பாடல். உங்கள் இசை, பாம்பே ஜெயஸ்ரீயின் குரல், `உனது கண்களில் எனது கனவினை காணப் போகிறேன்’ என்ற தாமரையின் வரிகள்.

சினிமா பாடல்களில் பெண்களின் மனதிற்கான பாடல்கள் சொற்பம். அதில் குறிப்பிடத்தகுந்த பாடல் அது. அதுவரை திருமணமானவுடன் அவர்களின் முதலிரவுப் பாடலென திரையில் வந்த பாடல்கள் எப்படியிருந்தன என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. ஒன்றா ரெண்டா ஆசைகள் பாடலில் கண்ணியமாக பெண்களின் ஆழ் மனதில் நிறைந்திருக்கிற காதலை அதே உணர்வோடு இசையில் கடத்தியிருந்தீர்கள். நீங்கள், இயக்குநர் கௌதம், பாடலாசிரியர் தாமரை இணைந்து தமிழ்திரையிசையில் நிகழ்த்திய அற்புதங்களில் அதுவும் ஒன்று. `காக்க காக்க’ படத்தில் சூர்யா சுடப்பட்டு விழுந்து கிடக்க, அவரின் கடிகாரத்தில் நகரும் நொடிப் பொழுதில் கனவாக `உயிரின் உயிரே’ பாடல் வருமே கிட்டத்தட்ட அப்படியான கணங்கள் எங்கள் வாழ்வில் ஏராளம். ஒருவகையில் பெண்களுக்கு திரைப்பாடல்கள் நெருங்கிய தோழியைப் போல, எதையும் பகிர்ந்துகொள்ளும் ப்ரியமான அம்மாவைப் போல.

காக்க காக்க – ஒன்றா இரண்டா

மனமெங்கும் நிறைந்திருக்கிற ப்ரியத்தை, ஆழ் மனதின் தவிப்பை, வெளிப்படாத கண்ணீரை, கடக்க முடியாத கசப்பை, மீளா துயரத்தை என அனைத்தையும் இசையால் மட்டுமே கடக்கிற வாய்ப்பு வரமா? சாபமா? என்பது தெளிவாகப் புலப்படவில்லை. ஒரே திரையிசைப் பாடல் கேட்கும் பலரையும், `இது எனக்கான பாடல்!’ என உணருகிற இடத்தில் அந்த பாடல் வெற்றியடைகிறது. உங்களின் இசை பல நேரங்களில் அப்படியிருந்திருக்கிறது.

உறக்கமற்ற நீண்ட இரவுகளில் `வசீகரா’, `உன் சிரிப்பினில்’, `அனல் மேலே பனித்துளி’, `செல்லமே செல்லமே’, `வெண்பனியே’, இந்த பாடல்களின் மாயம் மட்டுமே உறக்கம் கொடுக்கிறது.

அனைத்தையும் விட்டுவிட்டு தனிமையில் திக்கற்ற பயணம் என்றால் `சலித்து போனேன் மனிதனாய் இருந்து, பறக்க வேண்டும் பறவையாய் திரிந்து திரிந்து’ என `மூங்கில் காடுகளே’ பாடல், ப்ரியமானவருடனான ஒரு நெடும்பயணம் என்றால் `என்னைக் கொஞ்சம் மாற்றி’ என வாழ்வில் எங்கும் நீக்கமற நிற்கிறது உங்கள் இசை. காதல் எனகிற ஒற்றை சொல் நிகழ்த்துகிற மாயத்தை கச்சிதமாக வெளிக்கொணர இங்கு பாடல்களும் இசையும் தான் பெரும் பங்கெடுத்துக் கொள்கின்றன. அதில் உங்களுக்கும் பெரும்பங்குண்டு. ஒரு தலைக்காதல், காதல் தோல்வி, காதலின் தவிப்பு, காதலர்களின் பயணம், காதலில் திளைப்பது என காதலின் பல படிநிலைகளைப் பாடலாக்கியிருக்கிறீர்கள். காதல், உறவு முறிவுக்குப் பிறகு பதைபதைப்புடன் தோன்றும் அடுத்த காதலை ஏற்கலாமா? மறுக்கலாமா? என்கிற மனநிலையையும் நீங்கள் உங்கள் இசையின் மூலம் மொழிப்படுத்தியிருக்கிறீர்கள். ஒரு பெண் தன் மனதெங்கும் தேக்கி வைத்திருக்கிற சொல்லாத காதலை, அதன் தோல்வியை `யாரோ மனதிலே’ பாடல் வெளிப்படுத்தியிருக்கும் பகிர்ந்திட முடியாத அந்த ரணத்தை,

காற்று வந்து மூங்கில் என்னை…

பாடச் சொல்கின்றதோ…

மூங்கிலுக்குள் வார்த்தை இல்லை…

ஊமை ஆகின்றதோ…

என்ற வரிகளும் உங்கள் இசையும் சேர்ந்து அந்த ரணத்தைக் கடத்தியிருக்கும்.

மஞ்சள் வெயில் பாடல்

`மஞ்சள் வெயில் மாலையிலே’ பாடலின் இறுதியில் கமல் விமானம் ஏறும் வரை வரும் உங்களின் பின்னணி இசை ஆணின் தவிப்பையும், `உயிரிலே எனது உயிரிலே’ பாடலின் துவக்கத்தில் வரும் இதயத்துடிப்பு போன்ற இசை பெண் மனதின் பதைபதைப்பையும் அப்படியே பிரதிபலித்தது. `உனக்கென்ன வேணும் சொல்லு!’ பாடலில் தன் மகளை தேசமெங்கும் தூக்கிச் செல்கிற தகப்பனின் வாஞ்சையை அத்தனை அழகாக இசையாக்கியிருப்பீர்கள்.

அது எப்படி உங்களால் இவ்வளவு நேர்த்தியாகக் கட் சாங்ஸ், இன்டெர்ளூட்ஸ் உருவாக்க முடிகிறது. `தாம் தூம்’ படத்தில் வருகிற `ஆழியிலே முக்குளிக்கும் அழகே’, `உன்னாலே உன்னாலே’ படத்தின் `சிறு சிறு உறவுகள்’, கலாப காதலா என்கிற சொற்களை மட்டும் வைத்து `காக்க காக்க’ படத்தில் நீங்கள் செய்திருந்த அந்த இசைக் கோர்வை, `உள்ளம் கேட்குமே’ படத்தில் வருகிற `லைக்கோ லைமா’ பாடல், ஓ சூப்பர் நோவா, குளுகுளு வெண்பனி போல, என இதற்கென உங்களைத் தனியாக சிலாகித்ததுண்டு. நீங்களும் மறைந்த இயக்குநர் ஜீவாவும் இணைந்த படங்களுக்கும் அதன் பாடல்களுக்கும் இன்று வரை தனி ரசிகர் படை உண்டு.

ஹாரிஸ் ஜெயராஜ்

நீங்கள் ஏன் பாடல்கள் பாடுவதில்லை என பல நேரங்களில் வருந்தியதுண்டு. ஆனால் பாடல்களுக்கு நீங்கள் தேர்வு செய்யும் பாடகர்கள், அந்த பாடலுக்கு அவ்வளவு பொருத்தமாக இருப்பர். `வேட்டையாடு விளையாடு’ படத்தில் ஹீரோ அறிமுகப் பாடல் அதுவரை இல்லாத ஒரு புதுமையான கிளாஸான இன்ட்ரோ சாங். அதைப் பாடுவதற்கு திப்பு, தேவன் என வித்தியாசமான பாடகர்கள் தேர்வைச் செய்திருப்பீர்கள். ஆலாப் ராஜு, நகுல், சைந்தவி, மதுமிதா, நிகில் மேத்யூ, சுசித்ரா போன்ற நல்ல பாடகர்களை அறிமுகமும் செய்துள்ளீர்கள்.

படத்திற்கு ஹீரோ என்ட்ரி மட்டுமில்லாமல் ஹீரோயின் என்ட்ரி என கவனத்தை ஈர்க்கும் பாடல்கள் இருக்கும். விஜய்க்கு `துப்பாக்கி’, விக்ரமிற்கு `அந்நியன்’, `சாமி’, அஜித்திற்கு `என்னை அறிந்தால்’, ஜீவாவிற்கு `கோ’, விஷாலுக்கு `செல்லமே’ சூர்யாவின் `காக்க காக்க’, `அயன்’, `வாரணம் ஆயிரம்’ என பல நடிகர்களின் முக்கிய படங்களில் உங்களின் இசை பக்கபலமாக அமைந்திருக்கிறது.

முழுக்க முழுக்க ஆக்ஷன் நிறைந்த படத்தில் காதல் பாடல் என்றாலும் சரி, படம் முழுக்க வெரைட்டியான பாடல்கள் என்றாலும் சரி அதை நேர்த்தியாக உங்களால் கொடுத்திட முடியும். சிங்கிள் ட்ராக் ஹிட்டாகி வியூஸ் கணக்குப் பார்க்கிற வாடிக்கை இன்று இருக்கிறது. ஆனால், ஆல்பம் ஹிட் என்பதை உங்கள் கொள்ளையாகவே வைத்திருந்தீர்கள். வெஸ்டர்ன் பாடல்கள், கர்நாடக இசை, துள்ளலான பாடல்கள் என்று மட்டுமில்லாமல், `தூது வருமா’, `நெருப்பே சிக்கி முக்கி நெருப்பே’, `தீயே தீயே’, `அக நக’ போன்ற பாடல்களில் உங்களின் காக் -டெயில் இசையாலும் அசத்தியிருக்கிறீர்கள்.

இரண்டாம் உலகம்

`இரண்டாம் உலகம்’, `அனேகன்’ போன்ற வித்தியாசமான கதைக்களம் கொண்ட படங்களிலும் பாடல்கள் சோரம் போனதில்லை. `என் காதல் தீ’, `மன்னவனே’ என இரண்டாம் உலகம் படத்தில் பெரிதாக கவனம் பெறாமலே போன பாடல்களும் தனிரகம். `டங்கா மாரி ஊதாரி’ என இறங்கி அடித்து, `ஆத்தாடி ஆத்தாடி’ என பவதாரணியின் குரல்களில் லயிக்க வைத்து என அனேகன் படத்தில் வெரைட்டி காட்டினீர்கள். உங்களின் வித்தியாசமான இசைக் கருவிகள், கலக்கலான மிக்ஸிங் இவையெல்லாம் தனிரகம். காதல், தனிமை, டிராவல், கொண்டாட்டம், திருமண கனவுகள், ரெட்ரோ, என எங்களின் எல்லா விதமான உணர்வுகளிலும், தருணங்களிலும் உங்கள் இசை உடன் நிற்கிறது.

படத்திற்குப் பாடல்கள் முகவரி தரும். நீங்கள் உங்கள் தனித்துவமான இசையால் பாடல்களுக்கு நிரந்தர முகவரி கொடுத்தீர்கள். `உனக்குள் நானே’ பாடலின் வயலின் இசை, `விழி மூடி யோசித்தால்’ பாடலின் விசில், அந்த பாடலுக்கான உயிராகிப் பேயின. இது மட்டுமல்லாமல் பின்னணி இசையிலும், கோரஸ் ஹம்மிங் ஆகியவற்றிற்கும் தனிக் கவனம் செலுத்தி அதை மெருகேற்றுகிறீர்கள். `காக்க காக்க’ படத்தில் ஜோதிகா விபத்தில் சிக்கி மருத்துவமனையில் சிகிச்சையிலிருக்க அதில் தொடங்கும் பின்னணி இசை ஒரு உதாரணம். `மின்னலே’ படத்தில் மழையில் சிறுவர்களோடு ரீமா சென் துள்ளி குதித்தாட, எஸ்டிடி பூத்தின் மழைநீர் சிதறும் கண்ணாடியைத் துடைத்தபடி மாதவன் பாரக்கையில், `பூப் போல் பூப் போல்’ என் நெஞ்சைக் கொய்தவள்! என பின்னணியில் இசை என அந்த காட்சி அத்தனை கவிதையாக இருக்கும்.

மின்னலே படத்தின் `பூப் போல் பூப் போல்’ பாடல்

`வாரணம் ஆயிரம்’ படம் முழுக்க தந்தையின் காதல், மகனின் காதல், பயணம், அழுகை என எத்தனை பாடல்கள், எத்தனை பின்னணி இசை. பெண்கள் தங்கள் காதலை தெரிவிக்கும் கௌதமின் தனித்துவக் காட்சிகளில், உங்கள் பின்னணி இசையும் அழுத்தம் கூட்டியிருக்கின்றன. ஆக்ஷன் பரபரக்கும் `காக்க காக்க’, `வேட்டையாடு விளையாடு’, `அந்நியன்’, `கஜினி’, `தொட்டி ஜெயா’, `துப்பாக்கி’ படங்களின் பின்னணி இசை அந்த ஜானர் படங்களின் இசையிலிருந்து வித்தியாசம் காட்டியது.

உங்கள் மீது வைக்கப்படும் விமர்சனங்களுக்கும் உங்கள் பாடல் மூலம் பதிலளித்து தமிழ் திரையுலகில் உங்களுக்கென்று தனி இசை முத்திரை பதித்துள்ளீர்கள். `பளபளக்குற பகலா நீ’ எனத் தொடங்கும் காலை, `ஒரு சிறு வலி இருந்ததுவே இதயத்திலே’ என முடியும் நள்ளிரவாக, தீயின்றி புகையின்றி உங்கள் இசையால் வேள்வி செய்து உடன்நிற்கிறீர்கள். `ஓ மனமே’ பாடலில் மனமுடைந்து, தாய் அருகில் படுத்து அழும் ஆர்யாவை அணைத்து, கண்ணீர் துடைத்து அரவணைப்பாள் அவள் அம்மா. இசையும் அந்த வேலையைத்தான் நமக்குச் செய்வதாகத் தோன்றுவதுண்டு.

Harris Jayaraj

உங்கள் இசை அதை எனக்குச் செய்திருக்கிறது. பிடிக்காத காரணங்களைப் பட்டியலிடுவது போல அத்தனை எளிதானதல்ல பிடித்தவற்றை அடுக்குவது எனக்கும் அதே தான். `பேசிப் பேசி தீர்த்த பின்னும் ஏதோ ஒன்று குறையுதே!’ என்ற வரிகளைப் போலதான் இந்தக் கடிதமும். உங்களின் பியானோ வழியே மீட்டிய மெல்லிசைக்கு நீங்கள் கொடுத்திருக்கிற இடைவெளி போதும் ஹாரிஸ். ஆல்பம் ஹிட்டுக்காக அஸ்கு லஸ்க்காவாக காத்திருக்கும் ரசிகர்கள் சார்பில் பிறந்தநாள் வாழ்த்துகள்.

சந்தியா கால மேகங்கள் வானில் ஊர்வலம் போகட்டும்!

ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் உங்களுக்குப் பிடித்தமான பாடலை கமென்ட் செய்யுங்க.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.