குளச்சல் அருகே நள்ளிரவு பரபரப்பு: 45 வயது இந்தோனேசியா காதலியை திருமணம் செய்த 62 வயது போதகர்

* உறவினர்கள் கடும் எதிர்ப்பு
* வீட்டில் பூட்டி சிறைவைப்பு

குளச்சல்: கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே 45வயது மதிக்கதக்க இந்தோனேசியா காதலியை திருமணம் செய்த 62 வயது போதகருக்கு உறவினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதற்கிடையே உறவினர்களால் சிறை வைக்கப்பட்ட மனைவியை போலீசார் உதவியுடன் போதகர் மீட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே பருத்திவிளை பகுதியை சேர்ந்த 62 வயதான ஒருவருக்கு திருமணம் ஆகவில்லை. அவர் தனது தாயாருடன் வீட்டில் வசித்து வந்தார். வீடு வீடாக சென்று மத போதனைகளில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு தாயார் இறந்து விட்டார். இதனால் தனிமையில் வாழ்ந்து வந்தார்.

இதற்கிடையே அவருக்கு முகநூல் மூலம் இந்தோனேசியாவை சேர்ந்த சுமார் 45 வயது மதிக்கதக்க ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அதன்படி முகநூல் வழியாக அந்த பெண்ணுடன் அடிக்கடி மத போதனையில் ஈடுபட்டுள்ளார். ஒரு கட்டத்தில் அந்த பெண்ணை காதலிக்க தொடங்கி உள்ளார். இந்நிலையில் கடந்த டிசம்பர் 21ம் தேதி இந்தோனேசிய பெண்ணை நாகர்கோவிலுக்கு அழைத்து வந்தார். பின்னர் நாகர்கோவில் பகுதியில் உள்ள ஒரு தேவாலயத்தில் திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார். வயது கடந்த இந்த திருமணத்திற்கு உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்ததாக தெரிகிறது.

அதைத்தொடர்ந்து நேற்றிரவு உணவு வாங்குவதற்காக போதகர் வீட்டை விட்டு வெளியே சென்று உள்ளார். அப்போது உறவினர்கள் வீட்டுக்கு வந்துள்ளனர். திடீரென போதகரின் உறவினர்கள் இந்தோனேசியா பெண்ணை வீட்டின் அறையில் வைத்து பூட்டி சிறை வைத்துள்ளனர். வெளியே சென்ற போதகர் வீட்டிற்கு உள்ளே செல்ல முடியாத அளவில் கதவுகளை பூட்டியதோடு முன்பக்க கேட்டையும் இழுத்து மூடி உள்ளனர். இது ஒருபுறம் இருக்க வீடு திரும்பிய போதகரால் உள்ளே செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்தவர் போலீஸ் அவசர அழைப்பு எண் 100 க்கு போன் செய்தார்.

தனது மனைவியை உறவினர்கள் அறையில் பூட்டி சிறை வைத்துள்ளதோடு, தன்னை வெளியேற்றி விட்டதாகவும் மனைவியின் உயிருக்கு ஆபத்து உள்ளதாகவும், 2 பேரையும் காப்பாற்றுமாறும் புகார் கூறினார். உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். தொடர்ந்து போதகரின் உறவினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள் இந்தோனேசிய பெண்ணை வெளியே விட மறுத்ததோடு போதகரையும் வீட்டிற்கு உள்ளே அனுமதிக்க மறுத்துவிட்டனர். இது தெடர்பாக போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். நள்ளிரவு சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு திரண்டனர்.

இருப்பினும் போலீசார் தொடர்ந்து நள்ளிரவு வரை இரு தரப்பினருடரும் பேச்சுவார்த்தை நடத்தினர். சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாகியும் உடன்பாடு ஏற்படவில்லை. இதையடுத்து போலீசார், கேட்டின் பூட்டை உடைத்து உள்ளே செல்ல நேரிடும் என்று எச்சரித்தனர். இதையடுத்து போதகரின் உறவினர்கள் கேட்டை திறந்து போலீசாரின் விசாரணைக்கு சம்மதித்தனர். இதனையடுத்து போலீசார் போதகரை வீட்டிற்குள் அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விசாரணைக்காக இரு தரப்பினரும் குளச்சல் காவல் நிலையத்தில் ஆஜராகும் படி கூறினர்.

மேலும் அங்கு அசம்பாவிதங்கள் நடக்காமலிருக்க போலீசார் நிறுத்தபட்டனர். 62வயதில் இந்தோனேசியா முகநூல் காதலியை திருமணம் செய்து வீட்டிற்கு அழைத்து வந்த மத போதகரை நள்ளிரவில் வெளியே தள்ளி இந்தோனேசியா இளம்பெண்ணை அறையில் பூட்டி சிறை வைத்த குடும்பத்தினரால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.