தனது மண் பற்றிய ஒரு புலம்பெயர் தமிழனின் வரலாற்றுப் பார்வை





Courtesy: Anton Gnanaprgasam

 தான் வாழ்ந்த மண்ணின் நினைவுகளுடன் சதா சுற்றித்திரிகின்ற ஒரு வாழ்க்கைதான் புலம்பெயர் வாழ்க்கை.

தனது மண், தான் வாழ்ந்த கிராமம், தனது சமூகத்தின் மாண்பு, அவை பற்றிய நினைவுகள்தான் ஒவ்வொரு புலம்பெயர் தமிழனினதும் வாழ்க்கைவட்டம்.

எத்தனை உயர்வுகள், எப்படிப்பட்ட மாற்றங்கள், முதுமை.. என்று எதுவந்து சேருகின்றபோதிலும், தனது மனதின் ஆழத்தில் ஏதோ ஒரு மூலையில் காணப்படுகின்ற அவனது ஏக்கங்கள் என்பது, என்றைக்குமே மாறாத ஒன்றாகவே இருந்துவரும்.

அந்தவகையில், சுவிட்சலாந்தில் வசித்துவரும் அன்ரன் ஞானப்பிரகாசம் என்ற ஈழத்தமிழன் தனது கிராமமான மயிலிட்டி கிராமம் பற்றியும், மயிலிட்டியில் இருந்து ஒரு சந்தர்ப்பத்தில் யுத்தால் விழுங்கப்பட்டதுமான மயிலிட்டி காணிக்கை மாதா தேவாலயம் பற்றியும், அது சார்ந்த பல வரலாற்று உண்மைகளையும், அந்த கோவில் பற்றிய பல்வேறு நினைவுப் பதிவுகளையும் பதிவிட்டுள்ளார்.

ஏக்கத்துடன் கூடிய அவரது தேடல்கள் பற்றிய உணர்ச்சிகரமான பதிவுதான் இந்தக் கட்டுரை:

வரலாற்றுப் பின்னணி:

மயிலிட்டி காணிக்கை மாதா தேவாலய வரலாறு என்பது இன்றைக்கு சுமார் 500 வருடங்களுக்கு முந்திய ஒரு நெடிய வரலாறு.

யாழ்பாணத்தில் போர்த்துக்கேயர் காலத்தில் (1505-1658) கட்டப்பட்ட ஆரம்ப கிறிஸ்தவ தேவாலயங்களில் மயிலிட்டி தேவாலயமும் ஒன்று.

‘சம்மனசுகள் இராக்கினி’ எனும் தேவாலயமும், பாடசாலை, குருக்கள் தங்குமிடமும் என இரண்டு மாடிக் கட்டிடங்கள் மயிலிட்டியிலிருந்ததாக PHILLIPUS BALDAEUS என்னும் எழுத்தாளர் பதிவிட்டுள்ளார்.

(True and Exact Description of Great Island of Ceylon) 292ம் பக்கத்தில் உள்ளது.)

1658 முதல் 1796 வரையிலான ஒல்லாந்தர் ஆட்சிக் காலகட்டத்தில் போர்த்துக்கீசரினால் கட்டப்பட்ட பல கத்தோலிக்க தேவாலயங்கள் ஒல்லாதர்களினால் அழிக்கப்பட்டன.

அந்த நேரத்தில் மயிலிட்டி சம்மனசு இராக்கினி தேவாலயம் ஒல்லாந்தர் கட்டுப்பாட்டுக்கு கீழ் வந்ததைத் தொடர்ந்து, தேவாலயத்தில் இருந்த திருச்சொரூபங்கள் அனைத்தும் அகற்றப்பட்டு, அந்தத் தேவாலயத்தை தங்கள் கோட்டையாகவும் அவர்கள் மாற்றிக் கொண்டார்கள்.

அதன் காரணமாக அங்கு அந்தக் கத்தோலிக்க தேவாலயமும் வழிபாடுகளும் இல்லாமல் போனது.

குறிப்பிட்ட அந்தக்காலத்தில் தான் நூற்றுகணக்கான கத்தோலிக்கர்கள் வேதசாட்சியாக மன்னாரில் மரித்த சம்பவங்களும் இடம் பெற்றன.


கண்டெடுக்கப்பட்ட மாத திருச்சொரூபம்

மயிலிட்டி ‘பெரியநாட்டுதேவன் துறை’ எனும் இடத்தில் சங்கரியார் ஒழுங்கைக்கும் சென் மேரிஸ் ஒழுங்கைக்கும் இடைப்பட்ட பகுதில் உள்ள திரு.சந்தியாப்பிள்ளை அவர்களின் வளவிலிருந்து, புதைக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்ட மாதா தி திருச்சொரூப மே காணிக்கைமாதா திருச்சொரூபம் என்று திரு சந்தியாப்பிள்ளையின் முன்னோர்கள் கூறியாகவும் பதிவுகள் தெரிவிக்கின்றன.

போர்த்துக்கீசருக்குப் பயந்து யோசுவா முனிவர் என்ற பாதிரியார் இரகசியமான முறையில் அருகேயிருந்த நாற்சார் வீட்டில் மீன் விற்கும் பெண் வேடம் பூண்டு வாழ்ந்து வந்து வழிபாடுள் நடத்தியதாக யாழ் ஆயர் இல்லத்தின் வரலாற்று பதிவுகளில் சந்தியாப்பிள்ளை அவர்கள் எழுதியுள்ளார்.

1796 முதல் 1948 வரையிலான ஆங்கிலேயர் காலத்தில்தான் அந்தத் தேவாலயம் மீண்டும் காணிக்கை மாதா தேவாலயமாக அமைக்கப்பெற்றது.

புங்குத் தேவாலயமாக..
மயிலிட்டிஇ பலாலி மக்கள் இணைந்தே ஆந்தத் தேவாலயத்தில் தங்கள் பங்குத் தேவாலயமாக சிறப்பாக வழிபாடுகள் நடத்தி வந்தனர்.

1952ல் பலாலி மக்களில் ஒரு பகுதியினர் ஆரோக்கியமாதா தேவாலயத்தை கட்டி தங்களுக்கு என தனியாக தேவாலயம் கட்டத் தீர்மானித்த போது ஏனைய பலாலி மக்கள் அதனை ஏற்க மறுத்து இன்று வரை தங்கள் பங்குக் தேவாலயமாக காணிக்கை மாதா தேவாலயத்தின் பங்குதாரர்களாகவுள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆரோக்கிய மாதா தேவாலயம் கட்டப்பட்ட பின்பும் ஆசனக் தேவாலயமாக காணிக்கைமாதா தேவாலயமே திகழ்ந்தவந்தது.

கொடிமரம், திருவிழா

வருடா வருடம் தை மாதம் 24ம் திகதி கொடிமரம் ஏற்றப்பட்டு மாசி 1 நற்கருணை ஆராதணையும், மாசி 2ல் திருவிழாவும் சிறப்பாக நடைபெறும்.

திருநாள் திருப்பலி முடிவடைந்ததும் கூடு சுத்தும் நிகழ்வு தேவாலயத்திருந்து புறப்பட்டு சென்மேரிஸ் ஒழுங்கையை அடைந்து பின் கடற்கரை வழியாக பலாலிவரை உள்ள பங்கு மக்களின் தொழில்துறைகள் வீடுகள் ஆசீர் வதிக்கப்பட்டு பின் பிரதான வீதீயை அடைந்து தேவாலயம் வரையுள்ள தொழிகள், வீடுகள் எல்லாம் ஆசீர்வதிக்கப்பட்டு அன்னை தேவாலயம் வந்து, இறிதி ஆசீர்வாதம் பங்குத் தந்தை கையில் ஏந்தி தலைக்கு மேல் அன்னையின் திருச்சொரூவத்தை உயர்த்தி ஆசீர்வதிக்கும் போது மக்கள் எல்லோரும் முழந்தால் படியிட்டு மதபேதமின்றி கண்ணீர் பொங்க அந்த ஆசீர்வாதத்தை பெறுவதை இன்று நினைத்தாலும் கண்கள் குளமாகின்றன.


கப்பல்பாட்டு

கூடு சுற்றும் போது கப்பல்பாட்டு படிப்பது ஆரம்பதிலிருந்தே காணிக்கைமாதா தேவாலத்தில் சிறப்பாகவிருக்கும்.பயணம் மிக நீண்டதாகவிருந்தாலும் பக்தியுடன் செபமாலை செல்லிக் கொண்டு மக்கள் செல்வார்கள்.கூட்டுக்கு மேல் சேளம் பொரிகச்சான் எறிவது மக்கள் வளக்கமாகவிருந்தது.

மாதாவின் சுந்றுப்பிரகாசம் முடிந்தபின் விருந்துச்சாப்பாடு மிகச் சிறப்பாக நடைபெற்றுவந்தது.

அந்த ஊரிலுள்ள மீன்பிடிப் படகுகள் மாரிகாலம் வந்ததும் சிலமாதங்கள் மீன்பிடிப்பதற்காக தீவுப்பகுதிகளுக்குச் சென்று அங்கு தங்கியிருந்கு மீன் பிடிப்பது வழக்கம்.

அங்கு மிகத்தரமான மீன்கள் சிறப்பான முறையில் பதப்படுத்தி கருவாடாக விருந்துக்கென்றடு கொண்டுவந்து ஆலயத்தில் கொடுப்பார்கள்.
இதில் எமது சைவ மத உறவுகளும் பாரம்பரியமாகப் பங்களிப்பது வழக்கம்.


மாதா கோயில் மணி

முழு மயிலிட்டிக் கிராமமுமே மாதாகோயில் அலங்கார மாதாகோயில் மணியை அடிப்படையாகவைத்துத்தான் இயங்கும்.

காலை 5.30 மணி, நன்பகல் 12.00மணி, மாலை 18.00 மணி போன்ற நேரங்களில் ஒலியெழுப்பும்.
இந்த மணிஓசை கேட்டதும் மாணவர்கள் மீன்பிடிப்பவர்கள், தோட்டம் செய்பவர்கள், உத்தியோகம் பார்ப்பவர்கள், என்னும் இதர தொழில்களைச் செய்பவர்கள் தங்கள் கடமைகளை செய்வார்கள்.


மாதா கோயில் தண்ணீர்

எமது ஊரில் உள்ள பொரும்பகுதி மக்கள் மாதா கோயில் தண்ணீரைத்தான் குடிப்பதற்கு பயன்படுத்துவார்கள். தாய்நாட்டில் வாழ்ந்த காலத்தில் எந்த வெளி ஊர்ப் பயணம் செய்தாலும் திரும்ப எப்ப சென்று மாதா கோயில் தண்ணீர் அருந்த வேண்டும் என்ற அவாவில் இருந்த காலம் கடந்து, இன்று உலகில் பல்வேறு நாடுகள் சென்றாலும் எப்பொழுது நாம் இனி மாதா கோயில் தண்ணீரை அருந்துவோம்..

எமது மரணத்தின் முன்பாது ஒருதடவை அந்த மாதாகோவில் தண்ணிரை அருந்திவிடுவோமா என்ற ஏக்கத்தில் வாழ்ந்து வருகின்றோம்.

கூத்துப் பாட்டு

எம் மண்ணின் கலைவடிவத்தில் ஒண்றான கூத்து, மாசி 2ம் திகதி இரவு எம் பங்கைச் சேர்ந்த அண்ணாவிமார் மிகச்சிறப்பான முறையில் வடிவமைத்து மேடையேற்றிய அந்தக் காட்சிகள் காலத்தால் அழியாதவை.
எம் நெஞ்சில் இன்று மட்டுமல்ல மரணம் வரை மறையாத நினைவுகள் அவை.


உறவுகள் பல ஊர்களிலிருந்தும் வருதல்

மாசிச்திருநாள் கொண்டாடுவதற்கு பல்வேறு பகுதிகளில் வாழும் எம் உறவுகள், குறிப்பாக முல்லைத்தீவு, தாளையடி, செம்பியம்பற்று, நாகர்கோயில், கற்கோவளம், பருத்தித்துறை, வல்வெட்டித்துறை, வலித்தூண்டல் என்னும் பலபகுதிகளிலிருந்து வருகை தந்து, உறவினர்கள் வீடுகளில் தங்கி ஊரே விழாக் கோலத்தில் மிகவும் மகிழ்ச்சியாக விளங்கும்.

அந்தக் கண் கொள்ளாக் காட்சி இனி எப்ப வரும் தாயே! எப்ப வரும் தாயே! ஏக்கம் ஒன்றுதான் விஞ்சிக்கிடக்கின்றது.


மாதா கோயில் வெளிச்சம்

எம் நாட்டில் ஆழ்கடல் மீன்பிடியில் சிறந்து விளங்கியவர்கள் மயிலிட்டி மீனவர்கள் என்ற உண்மை இன்று உள்ள எம் சந்ததியில் பலருக்கு தெரிய வாய்பு இல்லை.

மீனவர்கள் ஆழ்கடலிருந்து திரும்பி வரும் போது முதலில் காங்கேசன்துறை சீமேந்து தொழிச்சாலை சுடர் தெரியும். பின் வெளிச்சம் தெரியும். அதன் பின்னர் காணிக்கைமாதா கோயில் சுடர் தெரிந்து பின் வெளிச்சம் தெரியும்.

மாதா கோயில் வெளிச்சம் தான் எமது ஊரின் கலைங்கரை வெளிச்சம்.
அதன் பின்னர்தான் அரசினால் கட்டப்பட்ட காங்கேசன்துறை கலங்கரை வெளிச்சம் தெரியும் என்ற செய்தி ஆழ்கடல் மீன்பிடிக்கச்செல்லும் கடலோடிகளுக்குத் தெரியும்.


கொடிமரம் முறிந்த சம்பவம்

1990ல் மாசித்திருநாள் முடிந்தபின் கொடி மரம் இறக்கப்படும். அப்போது கொடிமரம் முறிந்த நிகழ்வு ஒன்று நடந்தது.

இதைப் பலர் தீயஅறிகுறி எனவும், சிலர் 100 ஆண்டுகளாக இருந்து சமண்டல் மரம் பழுதடைந்து விட்டது என தமக்குள் பேசிக் கொண்டார்கள்.


விரட்டியடிக்கப்பட்ட மக்கள்

15.06.1990 வெள்ளிக் கிழமை ஒரேநாளில்  அறிவிற்பு ஏதும் இன்றி சிங்கள அரசினால் விரட்டப்பட்ட அந்தக் கொடுமை எம் ஊரில் நிகழ்ந்தது.

உடுத்த துணியுடனும் கையில் கிடைத்த பையுடனும் தெறித்து ஓடிய எம் உறவுகள் இன்று வரை முழுமையாகக் கூடு திரும்ப முடியாது வாழ்ந்து வருகின்றோம்.

மயிலிட்டி ஓர் துறைமுகப் பட்டணமாக விளங்கிய மண். பல காலங்களில் பல் வேறு பட்ட போர்களுக்கு முகம் கொடுத்த வீரம் செறிந்தத மண். அரேபியர்கள், போர்த்துக்கேயர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர் இவர்களின் இறங்கு துறையாக மயிலிட்டி பட்டணம் விளங்கி வந்தது.

யுத்த காலத்தில் சிறிலங்கா இராணுவமும் எமது துறைமுகத்தை தமது இறங்கு துறையாகப் பாவித்த வரலாறு உள்ளது.

மறைக்கப்பட்ட மாதாவின் திருச் சொரூபம்

1990இல் கட்டுக்கடங்காமல் போன யுத்தத்தில் மயிலிட்டி மண்ணும், மாதா கோயிலும் பல்வேறு நெருக்கடிகளுக்கு முகம்கொடுக்கவேண்டி ஏற்பட்டது.

மக்கள் விரட்டி வெளியேற்றப்பட்டு, அந்த நிலம் இராணுவ ஆக்கிரமிப்புக்கு உள்ளானதைத் தொடர்ந்து, வழிபாடுகள் என்பது இராணுவத்தின் தயவில்தான் தங்கியிருந்தது.

அவர்கள் விரும்பினால் மக்களை வழிபட அனுமதிப்பார்கள். விரும்பாவிட்டால் அணுமதிக்கமாட்டார்கள்.

தேவாலயம் முற்றாக அழிக்கப்படல்

அதன் பின் தேவாலய சுற்றுப்புறப்பகுதில் இருந்த அனைத்துப் கட்டிடங்களும் சிறிலங்கா இராணுவத்தால் முற்றாக தரைமட்டமாக்கப்பட்டது.

அதில் தேவாலயம், அதன் அருகேயிருந்த மருதடிப் பிள்ளையார் கோயில், மிகவும் பழைமை வாய்ந்த மிகப் பெரிய மருதமரம் மற்றும் பொது மக்களின் கட்டிடங்களும் தகர்தப்பட்டன.

போர்த்துக்கீசர் காலத்தில் நிறுவப்பட்டு ஒல்லாந்தர் காலத்தில் மறைக்கப்பட்ட தாய் மீண்டும் வந்தது போல், சிறிலங்கா இராணுவ ஆக்கிரமிப்பு காலத்தில் மறைக்கப்பட்ட எம் அன்னை நிச்சயம் மீண்டும் வருவார் என்று காத்திருக்கின்றார்கள் அந்த பிரரேச மக்கள்.  

– அன்ரன் ஞானப்பிரகாசம்



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.