பி.பி.சி டாக்குமென்டரி குறித்த கருத்துக்கு எதிர்ப்பு; ஏ.கே.அந்தோணியின் மகன் காங்கிரஸிலிருந்து விலகல்

குஜராத் கலவரம் குறித்த பி.பி.சி டாக்குமென்டரியை கேரள மாநிலத்தில் சி.பி.எம், காங்கிரஸ் கட்சிகளின் இளைஞர் மற்றும் மாணவர் அமைப்பினர் பொது இடங்களில் வெளியிட்டு வருகின்றனர். டாக்குமென்டரியில் பிரதமர் மோடி குறித்து அவதூறான கருத்துகள் இடம்பெற்றிருப்பதாகக் கூறி பா.ஜ.க போராட்டம் நடத்தி வருகிறது. திருவனந்தபுரத்தில் டி.ஒய்.எஃப்.ஐ சார்பில் டாக்குமென்டரி வெளியிட்ட பகுதியில் போராட்டம் நடத்திய பா.ஜ.க-வினர்மீது வஜ்ரா வாகனங்கள் மூலம் தண்ணீர் பிய்ச்சி அடித்த சம்பவங்களும் நடைபெற்றன. காங்கிரஸ், சி.பி.எம் கட்சியினர் பி.பி.சி டாக்கிமென்டரியை வெளியிடுவதற்கு எதிராக முன்னாள் மத்திய அமைச்சரும், கேரள முன்னாள் முதல்வருமான ஏ.கே.ஆன்றணியின் மகன் அனில் கே.ஆன்றணி ட்விட்டரில் கருத்து தெரிவித்திருந்தார்.

ஏ.கே.அந்தோணி

அனில் கே.அந்தோணி தனது ட்விட்டரில், “டாக்குமென்டரிக்கு துணைபுரிவது அபாயமான ஒரு வழக்கத்தை ஏற்படுத்தும். இது தேசத்தின் அதிகாரத்தை துர்பலபடுத்தும்” என குறிப்பிட்டிருந்தார். அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி சோசியல் மீடியா & டிஜிட்டல் கம்யூனிகேஷன் செல்லின் தேசிய ஒருங்கிணைப்பாளர் பதவி வகித்துவந்த அனில் கே.அந்தோணியின் இந்தக் கருத்துக்கு, கேரள மாநில காங்கிரஸ் கட்சியில் பலத்த எதிர்ப்பு கிளம்பியது.

அனில் கே.அந்தோணி

அதையடுத்து, “ஐ.டி செல்லில் யாராவது சொல்வதற்கு காங்கிரஸ் கட்சி பொறுப்பு ஏற்காது” என கேரள மாநில காங்கிரஸ் தலைவர் கே.சுதாகரன் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், அனில் கே.அந்தோணி காங்கிரஸ் கட்சியின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் தான் விலகுவதாக அறிவித்திருக்கிறார். அனில் கே.அந்தோணியின் ராஜினாமாவை ஏற்றுக்கொள்வதுடன், அவர்மீது நடவடிக்கையும் எடுக்க வேண்டும் என கேரள இளைஞர் காங்கிரஸார் வெளிப்படையாகவே கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.