மட்டக்களப்பு மாவட்டத்தின் விவசாய ஆரம்பக் குழுக் கூட்டம் : சிறுபோகம் தொடர்பான கலந்துரையாடல்

மட்டக்களப்பு மாவட்டத்தின் இவ்வருடத்திற்கான (2023) விவசாய ஆரம்பக் குழுக் கூட்டம் இன்று (25) மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் இறுதியாக இடம்பெற்ற பெரும்போகத்தின் முன்னேற்றம் தொடர்பாக ஆராயப்பட்டதுடன் 2023ஆம் ஆண்டுக்கான எதிர்வரும் சிறுபோக விவசாயத்தை ஆரம்பிப்பதற்கான கலந்தாலோசனை வழங்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்டம் விவசாயத்தை பெரும்பான்மைத் தொழிலாகக் கொண்ட மாவட்டமாகும். விவசாயத்தில் சேதன பசளை பயன்படுத்தப்பட்டதனால் பாதிப்புக்களை அனுபவித்து, அசேதனப் பசளை அறிமுகப்படுத்தப்பட்டதனால் தற்போது ஓரளவு முன்னேற்றமடைந்து வரும் நிலையில், இம்முறை சிறுபோகத்தை நாம் ஆரம்பிக்க எதிர்பார்ப்பதாக அரசாங்க அதிபர் தனது உரையில் தெரிவித்தார்.

பெரும் போகத்தின் முன்னேற்றம், எதிர் நோக்கிய பிரச்சினைகள், விவசாயிகள் வழங்கிய உழைப்பு பற்றிய கருத்துக்களை பலரும் முன்வைத்தார்கள்.

இதன் போது பெரும்போகத்தை மேற்கொள்வதற்கு வங்கிகளால் வழங்கப்பட்ட கடன் மற்றும் நிதி ஆதரவு தொடர்பில் தெளிவுபடுத்தப்பட்டது.

அதில் மத்திய வங்கியினால் அங்கீகரிக்கப்பட்ட உரமானியத்திற்கான நிதி உதவு தொகை இலங்கை வங்கி, பிரதேச அபிவிருத்தி வங்கி, தேசிய சேமிப்பு வங்கி மற்றும் ஹற்றன் நெஷனல் வங்கி ஆகிய வங்கிகளுக்கு ஊடாக விவசாயிகளை சென்றடைந்திருந்தன.
ஆயினும் மக்கள் வங்கியில் கணக்கு வைத்துள்ள விவசாயிகள் இதுவரை தமக்கு உரமானியம் கிடைக்காமை குறித்து அரசாங்க அதிபரிடம் முறையிட்டமை அவதானத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இக்கூட்டத்தில் பயிர்ச்செய்கை விவசாயிகளின் பிரச்சினைகளும், எரிபொருள் விநியோகம் மற்றும் யூரியா உரம், சேதனப்பசளை விநியோகம் தொடர்பாக எதிர்நோக்கிய சவால்கள் மற்றும் 2023ஆம் ஆண்டின் சிறுபோகத்திற்கு வசதியளித்தல் என்பன குறித்து கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளர் கே. ஜெகன்நாத் விளக்கமளித்தார்.

பெரும்போகத்தில் எரிபொருள் விநியோகம் தமக்கு இலகுவாகக் கிடைத்ததாகவும் பெற்றோலை பெற்றுக்கொள்வதில் அவ்வப்போது சிக்கல் காணப்படுவதாகவும் விவசாயிகள் முன்வைத்தனர்.

மாவட்டத்தில் பெரும்போகப் பயிர்ச்செய்கையின் திட்டத்தின் முன்னேற்ற அறிக்கை, விவசாயிகள் எதிர்கொண்ட தொழில்நுட்பம் சார்ந்த பிரச்சினைகளும் அவற்றிற்கான தீர்வுகளும் ஒரு ஏக்கர் நெற்செய்கைக்கான செலவு மதிப்பீடு, சிறுபோக பயிர்சசெய்கைக்கான தொழில்நுட்ப நடவடிக்கைகள், நெல் வெட்டு இயந்திரத்திற்கான செலவு, என்பன குறித்தும் கருத்துக்கள் பரிமாறப்பட்டன.

இதன்போது பிரதி விவசாய பணிப்பாளர் (விரிவாக்கம்) வீ. பேரின்பாராஜா பெரும்போகத்தில் 22திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டதுடன் இவ்வருடத்திற்கு 35மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

அத்துடன் இம்முறை மழை காரணமாக நெல்லை உலரவைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. எனினும் சிறுபோகத்திற்கான நெல்லை மார்ச் முதலாம் திகதியிலிருந்து வழங்க முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.

மட்டக்களப்பு பிராந்திய நீர்ப்பாசன பணிப்பாளர் என்.நாகரெத்தினம் உரையாற்றுகையில்;
உன்னிச்சை குளத்தில் 95% நீர் காணப்படுகின்றது. மேலும் உலக வங்கியினால் 27 மில்லியன் ரூபா அபிவிருத்தி திட்டங்களுக்காக கிடைத்துள்ளதுடன், பெரும்போகத்தில் நிருவகிக்கப்பட்ட 10 நீர்ப்பாசன அபிவிருத்தித் திட்டங்கள் சிறுபோக விவசாயத்திற்கு உதவும் என எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.

இதன் போது உற்பத்தி செலவு அதிகரித்துள்ள இக்காலகட்டத்தில் சிறு போகத்தில் பெறப்படவுள்ள நெல்லுக்கான விலை நிர்ணயம் தொடர்பாகவும் அரசாங்க அதிபரால் ஆலோசனை வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்டத்தின் மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்ஷினி ஸ்ரீகாந்த், மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திருமதி நவரூபரஞ்சினி முகுந்தன், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திருமதி சசிகலா புண்ணியமூர்த்தி, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எல். ஆர். குமாரசிறி, மாவட்ட், மாவட்டத்தின் அனைத்து பிரதேச செயலாளர்கள், உயர் அதிகாரிகள், விவசாய மற்றும் கால்நடை அமைப்புக்களின் குழுத்தலைவர்கள், மற்றும் விவசாய உறுப்பினர்கள் எனப் பலரும் பங்குபற்றினர்.


M M Fathima Nasriya

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.