முதல்-அமைச்சர் கோப்பைக்கான சென்னை மாவட்ட விளையாட்டு போட்டி: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சென்னை,

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி இணைந்து நடத்தும் முதல்-அமைச்சர் கோப்பைக்கான சென்னை மாவட்ட விளையாட்டு போட்டிகள் (2022-23) சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள மே தின பூங்கா விளையாட்டு மைதானம் மற்றும் தியாகராயநகரில் உள்ள கண்ணதாசன் மைதானம் ஆகிய இடங்களில் நேற்று தொடங்கியது. தொடக்க விழாவில் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

பொதுப்பிரிவு, பள்ளி, கல்லூரி, மாற்றுத் திறனாளிகள் மற்றும் அரசு ஊழியர்கள் என்று 5 பிரிவுகளில் மாவட்ட அளவில் கபடி, பேட்மிண்டன், கூடைப்பந்து, சிலம்பம், கால்பந்து, செஸ், கூடைப்பந்து உள்பட 42 வகையான போட்டிகள் நடைபெறுகிறது.

பரிசுத்தொகை

மாவட்ட அளவிலான போட்டியில் தனிநபர் பிரிவில் முதல் 3 இடங்களை பிடிப்பவர்களுக்கு முறையே ரூ.3 ஆயிரம், ரூ.2 ஆயிரம், ரூ.ஆயிரமும், இரட்டையர் போட்டியில் முதல் 3 இடங்களை பெறுபவர்களுக்கு ரூ.6 ஆயிரம், ரூ.4 ஆயிரம், ரூ.2 ஆயிரமும் பரிசுத்தொகையாக வழங்கப்படுகிறது. அணிகள் பிரிவில் முதல் 3 இடங்களை பிடிக்கும் அணிகளுக்கு விளையாட்டு வீரர்களின் எண்ணிக்கையை பொறுத்து ரொக்கப்பரிசுத் தொகை வழங்கப்படும். அத்துடன் இப்போட்டியில் அதிக அளவில் பதக்கம் பெறக்கூடிய பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளின் பயிற்சியாளர்களின் பெயர் தமிழ்நாடு அரசின் சிறந்த பயிற்சியாளர் மற்றும் சிறந்த உடற்கல்வி ஆசிரியர், உடற்கல்வி இயக்குனர் ஆகிய விருதுக்கு பரிந்துரை செய்யப்படும்.

தொடக்க விழா நிகழ்ச்சியில் பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, தயாநிதி மாறன் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் வேலு, கருணாநிதி, துணை மேயர் மு.மகேஷ்குமார், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்யா மிஸ்ரா, எஸ்.டி.ஏ.டி.உறுப்பினர் செயலாளர் கார்த்திகேயன், பெருநகர சென்னை மாநகராட்சி துணை கமிஷனர் சினேகா, நிலைக்குழு தலைவர் சிற்றரசு உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.