உத்தரப் பிரதேசத்தில் 4 மாடி கட்டிடம் இடிந்து 3 பேர் உயிரிழந்த சம்பவத்தில் சமாஜ்வாடி எம்எல்ஏவின் மகனை போலீசார் கைது செய்துள்ளனர்.
உத்தரப் பிரதேசத்தின் லக்னோ நகரில் ஹஜ்ரத்கஞ்ச் பகுதியில் 4 மாடி கட்டிடம் ஒன்று நேற்று திடீரென இடிந்து விழுந்தது. இந்த சம்பவத்தில் 3 பேர் உயிரிழந்தனர். பலர் கட்டிட இடிபாடுகளில் சிக்கி கொண்டனர். இந்த கட்டிடம், சமாஜ்வாடி கட்சியின் எம்எல்ஏ ஷாகித் மன்சூர் என்பவரின் மகன் நவாஷிஷ் ஷாகித் மற்றும் மன்சூரின் மருமகனான முகமது தாரீக் ஆகியோரால் விலைக்கு வாங்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து, சமாஜ்வாடி எம்எல்ஏவின் மகனை போலீசார் கைது செய்து விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். ஒரு மணிநேர விசாரணைக்கு பின் இன்று அதிகாலை 1.30 மணியளவில் லக்னோவுக்கு அவரை கொண்டு சென்றனர். அந்த கட்டிடத்திற்கு நவாஷிஷ் மகளின் பெயரை சூட்டியுள்ளனர். கட்டிடம் முறையான அனுமதியின்றி சட்டவிரோத வகையில் கட்டப்பட்டுள்ளது என மாநில டிஜிபி சவுகான் கூறியுள்ளார்.
முதல்வர் ஆதித்யநாத் உத்தரவின்பேரில் 3 பேர் கொண்ட கமிட்டி விசாரணை நடத்தி வருகிறது. கட்டிடம் இடிந்ததற்கான காரணம் தெரியவில்லை. ஒரு வாரத்தில் இந்த குழு அறிக்கையை சமர்ப்பிக்கும் என தகவல் தெரிவிக்கின்றது. போலீசார், ராணுவம் இணைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளது. அறிவியல்பூர்வ வழியில் மீட்புப் பணி நடந்து வருகிறது. உள்ளே சிக்கியவர்களை உயிருடன் மீட்கும் நம்பிக்கை உள்ளது என டிஜிபி கூறியுள்ளார்.