
அரசியல் மேடைகளையும் இலக்கிய மேடைகளிலும் அனல் பறக்கும் தனது பேச்சால் தனி அடையாளம் பெற்றவர் பேச்சாளர் நாஞ்சில் சம்பத். மதிமுகவில் தனது அரசியல் பயணத்தை துவங்கிய இவர், அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், மதிமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார். அவருக்கு அதிமுகவில் கொள்கை பரப்பு துணை செயலாளர் பதவி அளிக்கப்பட்டது. பின்னர் 2016-ஆம் ஆண்டு அவர் அப்பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.
ஜெயலலிதா மறைவிற்கு பிறகு, சசிகலா, டிடிவி தினகரனுடன் இணைந்து பணியாற்றிய நாஞ்சில் சம்பத், அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இவர் தற்போது திமுக நடத்தும் விழா கூட்டங்களில் கலந்து கொண்டு பேசி வருகிறார்.திரைப்படங்களில் நடிப்பதோடு இலக்கிய நிகழ்வுகளிலும் பங்கெடுத்து வருகிறார்.

இந்நிலையில்,நேற்று சென்னையிலிருந்து ரயில் மூலம் நாகர்கோவில் வந்த அவருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டதுடன், மயக்கம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் ரயிலிலேயே திருவனந்தபுரம் சென்றதாக தெரிகிறது.
இதையடுத்து, அவரின் குடும்பத்தினர் திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்திருக்கின்றனர். பின்னர் நேற்று மதியம் சுமார் 2 மணியளவில் கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.