ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான பந்து வீச்சாளர் தரவரிசையில் முகமது சிராஜ் முதலிடம் பிடித்தார்

துபாய்,

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் அடிப்படையில் வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ளது.

இதன்படி பந்து வீச்சாளர்கள் தரவரிசையில், நியூசிலாந்துக்கு எதிரான முதல் இரண்டு ஒருநாள் போட்டியில் 5 விக்கெட்டுகள் வீழ்த்திய இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் (729 புள்ளி) ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஹேசில்வுட் (727 புள்ளி),நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் டிரென்ட் பவுல்ட் (707 புள்ளி) ஆகியோரை பின்னுக்கு தள்ளி முதல்முறையாக ‘நம்பர் ஒன்’ அரியணையை பிடித்துள்ளார். ஹேசில்வுட், டிரென்ட் பவுல்ட் முறையே 2-வது, 3-வது இடத்துக்கு சரிந்துள்ளனர். இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி 11 இடங்கள் உயர்ந்து 32-வது இடத்தை பெற்றுள்ளார்.

பேட்ஸ்மேன் தரவரிசையில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் (887 புள்ளி), தென்ஆப்பிரிக்காவிடன் வான்டெர் டஸன் (766 புள்ளி), தென் ஆப்பிரிக்காவின் குயின்டான் டி காக் (759 புள்ளி), ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் (747 புள்ளி), பாகிஸ்தானின் இமாம் உல்-ஹக் (740 புள்ளி) ஆகியோர் முறையே முதல் 5 இடங்களில் மாற்றமின்றி தொடருகின்றனர்.

நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரில் இரட்டை சதம், சதம் உள்பட 360 ரன்கள் குவித்த இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் சுப்மன் கில் (734 புள்ளி) 20 இடங்கள் எகிறி 6-வது இடத்தை தனதாக்கினார். இந்திய வீரர் விராட்கோலி (727 புள்ளி), ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவன் சுமித் (719 புள்ளி) ஆகியோர் முறையே ஒரு இடம் சரிந்து 7-வது, 8-வது இடத்தை பெற்றனர். நியூசிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் சதம் அடித்த இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா (719 புள்ளி) 2 இடம் முன்னேறி 9-வது இடத்தை தனதாக்கினார். இங்கிலாந்து வீரர் ஜானி பேர்ஸ்டோ (710 புள்ளி) ஒரு இடம் பின்தங்கி 10-வது இடத்தை பெற்றுள்ளார். இந்தியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் சதம் அடித்த நியூசிலாந்து வீரர் டிவான் கான்வே (138 ரன்கள்) 27 இடங்கள் உயர்ந்து 37-வது இடத்தை பிடித்து இருக்கிறார்.

ஆல்-ரவுண்டர்கள் தரவரிசையில் வங்காளதேச வீரர் ஷகிப் அல்-ஹசன் (389 புள்ளி) முதலிடத்தில் நீடிக்கிறார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.