லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் உருவாகி வரும் ‘தளபதி 67’ படத்தின் அப்டேட்டுக்காக விஜய்யின் ரசிகர்கள் வெறித்தனமாக காத்து கொண்டுள்ளனர். இந்நிலையில், இந்தப் படத்தில் நடிகர் விக்ரம் குறித்து கேட்டதற்கு லோகேஷ் கனகராஜ் பதிலளித்துள்ளார்.
‘மாநகரம்’, ‘கைதி’ ஆகியப் படங்களின் மூலம் மாஸ் இயக்குநராக வலம் வந்த லோகேஷ் கனகராஜ், அடுத்ததாக இவரது இயக்கத்தில் விஜய் நடிப்பில் ‘மாஸ்டர்’ படம் உருவானப் போதே பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால் அந்தப் படம் முழுமையாக லோகேஷின் படமாக இல்லாமல், விஜய்யின் படமாகவும் பாதி அமைந்தது ரசிகர்களை சற்று வருத்தத்தில் ஆழ்த்தியது. இதனைத் தொடர்ந்து கமல்ஹாசன், விஜய் சேதுபதி, சூர்யா, பகத் ஃபாசில் ஆகியோர் நடிப்பில் உருவான ‘விக்ரம்’ படம் முழுக்க முழுக்க லோகேஷின் யுனிவர்ஸ் படமாக அமைந்ததால், மாபெரும் வெற்றிபெற்றதுடன், தமிழ் சினிமாவில் 440 கோடி ரூபாய் வசூலைப் பெற்று சாதனைப் படைத்தது.
இதையடுத்து அவரின் அடுத்தப் படத்துக்கு ரசிகர்கள் காத்துக் கொண்டிருந்த நிலையில் தான், விஜய்யுடன் இணைந்து ‘தளபதி 67’ படத்தை லோகேஷ் இயக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானதும், விஜய் ரசிகர்கள் குஷியில் ஆழ்ந்தனர். மேலும் இந்தப் படத்தில் பெரிய நட்சத்திர பட்டாளமே விஜய்க்கு வில்லனாக நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியான நிலையில், நாளுக்கு நாள் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறி வருகிறது.
Exclusive: #Thalapathy67 Updates on February 1st, 2nd & 3rd pic.twitter.com/eoj3UeEC7s
— Thalapathy67 Fan Page (@Vijay67Off) January 25, 2023
இதற்கிடையில் கோவையில் தனியார் கல்லூரியில் நடந்த ‘மைக்கேல்’ பட புரமோஷன் நிகழ்ச்சியில் லோகேஷ் பேசியபோது, “வருகின்ற பிப்ரவரி ஒன்று, இரண்டு, மூன்று, நாட்களை குறித்து வைத்துக் கொள்ளுங்கள். அப்டேட் வருகிறது. இப்போதைக்கு அவ்வளவுதான் என்னால் சொல்ல முடியும்” என கல்லூரி மாணவர்கள் மத்தியில் தெரிவித்துடன் மாணவர்கள் விசில் அடித்து கரகோஷம் எழுப்பி அவருடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
இந்நிலையில், விஜய்க்கு வில்லனாக விக்ரம் நடிப்பதாக வெளியான தகவல் குறித்து கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. அதில் ‘ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் நடிகர் விக்ரம் நடிக்க வேண்டியிருந்தநிலையில், தற்போது ‘தளபதி 67’ படத்தில் விக்ரம் நடிக்க உள்ளதாக கேள்விப்பட்டோமே, அது உண்மையா’ என்று கேட்கப்பட்டதற்கு, ‘நானும் கேள்விப்பட்டேன்’ என்று லோகேஷ் கனகராஜ் பதிலளித்துள்ளார். மேலும் அவர் பேசுகையில், “நானும் இதுமாதிரி நிறைய கேள்விப்படுகிறேன். ஆனால் நீங்களே தெரிந்துக்கொள்வீர்கள். எல்லா அப்டேட்டும் வந்துடும். இங்கேயே எல்லாவற்றையும் சொல்லிவிட்டால், பிறகு சஸ்பென்ஸ் எதுவும் இருக்காது, பொறுத்திருந்து பாருங்கள்” என்று தெரிவித்துள்ளார்.
விஜய்யின் ‘தளபதி 67’ படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே துவங்கியுள்ள நிலையில், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், மன்சூர் அலிகான் உள்ளிட்டோர் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.