“அதிமுக, பாமகவைப் பயன்படுத்தி தமிழ்நாட்டில் பாஜக வேரூன்ற முயற்சி” – திருமாவளவன்

சென்னை: “அதிமுக, பாமக ஆகிய இரண்டு கட்சிகளைப் பயன்படுத்தி பாஜக தமிழ்நாட்டில் எப்படியாவது வேரூன்றிவிட வேண்டும் என்று பகிரங்க முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது” என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், சென்னையில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: “அதிமுக, பாமக ஆகிய இரண்டு கட்சிகளைப் பயன்படுத்தி பாஜக தமிழ்நாட்டில் எப்படியாவது வேரூன்றிவிட வேண்டும் என்று பகிரங்க முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. அதிமுக தொண்டர்களும், பாமக தொண்டர்களும் இதில் விழிப்பாக இருக்க வேண்டும். தங்களுடைய சுயநலத்துக்காக தலைவர்கள், அந்த இயக்கத்தையே அடகுவைக்கக்கூடிய நிலையில் இருக்கிறார்கள்.

இந்த மண்ணில் பாஜகவை வளர்ப்பதற்கு அவர்கள் துணைபோகிறார்கள். அது அனைத்து வகையிலும் பிற்படுத்தப்ப்டட, மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரை பாதிக்கச் செய்யும் என்பதை விடுதலை சிறுத்தைகள் கட்சி சுட்டிக்காட்ட விரும்புகிறது” என்று அவர் கூறினார்.

முன்னதாக, வேங்கைவயல் குறித்து நேற்று அவர் கூறும்போது, “வேங்கைவயல் பிரச்சினை குறித்து இதுவரை பாஜக வாய்திறக்கவில்லை, ஆறுதல் சொல்லக்கூட தயாராக இல்லை. பாதிப்புக்கு உள்ளானவர்கள் இந்துக்கள்தான். ஆனாலும், அமைதி காக்கிறார்கள். எதிர்க்கட்சியாக இருக்கக்கூடிய யாரும் வேங்கைவயல் பற்றி பேசவில்லை. யாருக்கு அச்சப்படுகிறார்கள் என்று தெரியவில்லை. மனிதாபிமானம் இருக்கிறதா, இல்லையா என்று ஐயப்படக்கூடிய வகையில் இருக்கிறது.

வேங்கைவயல் விவகாரத்தில் இரண்டு முறை போராட்டம் நடத்தி இருக்கிறோம். சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்திருக்கிறோம். சிபிசிஐடி விசாரணையில் உண்மையான குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என்று முதல்வர் உறுதிஅளித்துள்ளார். ஒரு மாதம் ஆகியும் யாரும் கைது செய்யப்படாமல் இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. பட்டியல் சமூகத்தை சார்ந்த ராம்நாத் கோவிந்த், பழங்குடி சமூகத்தை சார்ந்த திரவுபதி முர்முஆகியோரை குடியரசுத் தலைவராக அமர வைத்தோம் என்றுபாஜகவினர் பெருமை பேசுகிறார்கள். ஆனால், நாடு முழுவதும் வன்கொடுமை தலைவிரித்து ஆடுகிறது. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் 10 சதவீதம் பேர்கூட இதுவரை தண்டிக்கப்படவில்லை என்பது வெட்கக்கேடான ஒன்று” என்று அவர் கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.