வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் பகுதியை சேர்ந்த திருமலைவாசன் (22) என்பவர் சொமேட்டோ நிறுவனத்தில் உணவு விநியோக பிரிவில் வேலை செய்து வருகிறார். இவர் இரவு 10 மணிக்கு காட்பாடி பகுதியில் உணவு விநியோகம் செய்ய பைக்கில் சென்றுகொண்டிருந்தார்.
அப்போது பின்னால் வந்த 3 பேர் அவரது பைக் மீது திடீரென மோதியதாக தெரிகிறது. இதில் நிலைகுலைந்துபோன திருமலைவாசன் பைக்கில் வந்தவர்களை தட்டிக்கேட்டுள்ளார்.
அப்போது மற்றொரு பைக்கில் வந்த மேலும் 2 பேர் என 5 பேரும் சேர்ந்து திருமலைவாசனை சரமாரியாக தாக்கியுள்ளனர். தாக்குதலில் சுய நினைவை இழந்த திருமலைவாசன் மயங்கி விழுந்தார்.
அப்போதும் விடாமல் அந்த கும்பல் அவரை தாக்கிக்கொண்டே இருந்ததாக தெரிகிறது. அப்போது அவ்வழியே வந்த வாகன ஓட்டிகள் கும்பலை விரட்டி திருமலைவாசனை மீட்டனர்.
இதுகுறித்து காட்பாடி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ஆபத்தான நிலையில் இருந்த திருமலைவாசனை மீட்டு வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
சம்பவம் தொடர்பாக காட்பாடியை சேர்ந்த பார்த்திபன் என்ற இளைஞரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தாக்குல் நடத்திய மற்றவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
newstm.in