ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில், எங்களுடைய எதிர் தரப்பு கண்ணுக்கு எட்டிய தூரம் வரை காணப்படவே இல்லை என்று தமிழ்நாடு
காங்கிரஸ்
கமிட்டியின் தலைவர்
கே.எஸ்.அழகிரி
கூறியுள்ளார்.
சென்னை சாந்தோமில் காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளர்கள் இல்லத் திருமண விழாவில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி கலந்துகொண்டார்.
அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “ஈரோடு கிழக்கு தொகுதியில் களத்தில் நாங்கள் பணியாற்றுகிறோம். மகத்தான வெற்றி எங்களுக்கு இருக்கிறது. எங்களுடைய தோழமைக் கட்சிகளினுடைய தோழர்கள் அங்கு பம்பரமாகச் சுழன்று பணியாற்றுகிறார்கள்.
ஆனால், எங்களுடைய எதிர் தரப்பு கண்ணுக்கு எட்டிய தூரம் வரை காணப்படவே இல்லை. எனக்கு அது மிக ஆச்சரியமாக இருக்கிறது. நாங்களும் ஈரோட்டில் தேடித்தேடிப் பார்க்கிறோம்” என்றார்.
மேலும் அவர், “சிலர் ரொம்ப அடக்கமாகப் பேசுகின்றனர். அடக்கமே தெரியாதவர்கள் ரொம்ப அடக்கமாக பேசுகிறார்கள். அதற்கான காரணம் எனக்கு தெரியவில்லை. இந்த தேர்தல் அவர்களுக்கு ஒரு நல்ல படிப்பினையைத் தந்திருக்கிறது என்று கருதுகிறேன்” என்று அவர் கூறினார்.
அழகிரி அடக்கமே தெரியாதவர்கள் அடக்கமாக பேசுகின்றனர் எனக் கூறுவது அண்ணாமலையைத் தான் என்கிறார்கள். பாஜக இடைத்தேர்தலில் போட்டியிட முன்வராமல் அதிமுக பெரிய கட்சி, அங்கு வெற்றி பெற்றவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள் என ஒதுங்கிக் கொண்டதை அழகிரி மறைமுகமாக குறிப்பிடுகிறார் என்கிறார்கள்.