வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: 1960 ம் ஆண்டு போடப்பட்ட சிந்து நதிநீர் பங்கீடு ஒப்பந்தத்தை மாற்றியமைக்க வேண்டும் என பாகிஸ்தானுக்கு இந்தியா நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இந்த நோட்டீஸ், சிந்து நதிநீர் பங்கீடு ஆணையத்தின் சம்பந்தப்பட்ட ஆணையர்கள் மூலமாக கடந்த 25ம் தேதி வழங்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்கு செல்லும் சிந்து நதி மற்றும் அதன் துணை ஆறுகளின் தண்ணீரை பங்கீடு செய்வதற்காக, கடந்த 1960 ம் ஆண்டு இரு நாடுகளுக்கு இடையே, சிந்து நதி நீர் ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன் அடிப்படையில் நீரை பகிர்ந்து கொள்வது, நீர் மின் நிலையங்கள் அமைப்பது தொடர்பாக ஆலோசனை செய்ய இரு நாட்டிலும் சிந்து நிதி நீர் ஆணையம் ஏற்படுத்தப்பட்டது.
இந்நிலையில், இந்த ஒப்பந்தத்தை மாற்றியமைக்கப்பட்டது தொடர்பாக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இது குறித்து,மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது: இந்த நோட்டீஸ் வழங்கப்படுவதற்கான முக்கிய நோக்கம், ஒப்பந்தத்தின் விதிமீறல்களை சரி செய்வதற்கு பேச்சுவார்த்தைக்கு வர பாகிஸ்தான் அரசுக்கு 90 நாட்களுக்கு வாய்ப்பு அளிப்பதே ஆகும். இந்த நடைமுறை கடந்த 62 ஆண்டுகளில் கற்று கொண்ட பாடங்களை நடைமுறைப்படுத்துவதற்கு உதவும்.
சிந்து நதிநீர் பங்கீடு ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதில் இந்தியா எப்போதும் சிறந்த கூட்டாளியாக இருந்துள்ளது. ஆனால், ஒப்பந்த ஷரத்துகளை மீறுவதிலும், அதனை நடைமுறைப்படுத்துவதிலும் பாக்., அரசின் செயல்பாடுகள் தான், இந்தியாவை ஒப்பந்தத்தை மாற்றியமைப்பதற்கான நோட்டீஸ் அனுப்பும்படி நிர்பந்தத்தை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த 2015 ல் இந்தியாவின் கிஷ்ங்கங்கா மற்றும் ரடில் நீர்மின் திட்டங்களுக்கான தொழில்நுட்ப ஆட்சேபங்களை ஆய்வு செய்ய ஒரு நடுநிலை நிபுணரை நியமிக்க வேண்டும் என பாக்., அரசு கோரிக்கை விடுத்தது.
பின்னர்,2016ல் தன்னிச்சையாக இந்த கோரிக்கையை திரும்ப பெற்ற பாக்., அரசு தனது ஆட்சேபனை தொடர்பாக நடுவர் நீதிமன்றத்தை நாடியது. இது ஒப்பந்தத்திற்கு முரணானது. பரஸ்பர இணக்கமான வழியை கண்டறிய இந்தியா பல முறை முயற்சித்த போதிலும், 2007 முதல் 2022 வரையிலான நிரந்தர சிந்து நதி ஆணையத்தின் 5 கூட்டங்களின் போது, இந்த பிரச்னையை விவாதிக்க பாகிஸ்தான் மறுத்துவிட்டது.
பாகிஸ்தானின் தொடர்ச்சியான வலியுறுத்தலினால், உலக வங்கி ,சமீபத்தில் நடுநிலை நிபுணர் மற்றும் நடுநிலை நீதிமன்றம் ஆகிய இரண்டின் மீதும் நடவடிக்கைகளை துவங்கியது. ஆனால், இந்த நடவடிக்கைகள் சிந்து நதிநீர் பங்கீடு ஒப்பந்தத்தின் எந்த ஷரத்தையும் உள்ளடக்கி இல்லை. பாக்., அரசின் இவ்வாறான தொடர் எதிர்நடவடிக்கைகளால் நதிநீர் பங்கீடு ஒப்பந்தத்தை மாற்றி அமைக்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்பும் கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement