‘தமிழ் நாய்டு.. கேரேளா..’ – ஒன்றிய அரசு இணையதளத்தால் சர்ச்சை.!

1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி சுதந்திரம் அடைந்த இந்தியா, 1950 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 26 ஆம் தேதி குடியரசு நாடானது. அதன்படி, இந்தியத் திருநாட்டின் 74வது குடியரசு தினம் நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது.

தலைநகர் டெல்லியில் குடியரசு தின விழா ஏற்பாடுகள் சிறப்பான முறையில் செய்யப்பட்டன. இந்தியா கேட் முதல் ராஷ்டிரபதி பவன் வரையிலான இரண்டு கிலோமீட்டர் நீளம் கொண்ட கடமைப் பாதையில் அலங்காரங்கள், அணிவகுப்பு, பாதுகாப்பு என சிறப்பான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டது. தேசிய போர் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார்.

பின்னர் கடமைப் பாதைக்கு பிரதமர் வருகை புரிந்தார். அங்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு மற்றும் எகிப்து அதிபர் அப்துல் பதஏ எல்-சிசியை பிரதமர் மோடி, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், முப்படைகளின் தலைமை தளபதி அனில் சவுகான் ஆகியோர் வரவேற்றனர். பின்னர் கடமைப் பாதையில் தேசியக் கொடியை குடியரசு தலைவர் ஏற்றினார்.

இந்த விழாவில் துணை குடியரசு தலைவர், மத்திய அமைச்சர்கள், அதிகாரிகள், ராணுவ வீரர்கள் கலந்து கொண்டனர். தேசியக் கொடிக்கு பீரங்கி குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து முப்படைகளின் அணிவகுப்பு தொடங்கியது. இதில் பல படைப்பிரிவு வீரர்கள் அணிவகுத்து சென்றனர். கேப்டன் அமன்ஜீத் சிங் தலைமையிலான அர்ஜுன் பீரங்கி அணிவகுத்து சென்றது.

இதையடுத்து 75 பேர் கொண்ட படை பின்னால் வந்தது. NAG ஏவுகணை அமைப்பின் தலைவர் லெப்டினன்ட் சித்தார்தா தியாகி தலைமையில் 17 பேர் கொண்ட ரெஜிமென்ட் அணிவகுத்து சென்றது. கேப்டன் நவீன் தட்டர்வால் தலைமையில் விரைவு அதிரடி போர் வாகனம் சென்றது. கூடவே 3 லடாக் ஸ்கவுட் ரெஜிமண்ட் படை அணிவகுத்தது.

லெப்டினன்ட் பிரஜ்வால் காலா தலைமையில் 861வது ஏவுகணை ரெஜிமெண்ட்டை சேர்ந்த பிரமோஸ் சென்றது. கேப்டன் சுனில் தசரதே தலைமையில் ’தி அமிர்தசரஸ் ஏர்ஃபீல்ட்’ என்ற 27 ஏர் டிஃபன்ஸ் ஏவுகணை ரெஜிமெண்ட் அணிவகுத்தது. இதையடுத்து முப்படை வீரர்கள் அணிவகுத்து சென்றனர்.

கப்பற்படையை சேர்ந்த வீரர்கள் பேண்ட் வாசித்த படியே அணிவகுத்தனர். ஜெய் பாரதி எனப்படும் இந்திய கப்பற்படையின் பாடல் டியூனை வாசித்துக் கொண்டே சென்றனர். பாரா ரெஜிமெண்ட், பஞ்சாப் ரெஜிமெண்ட், ராஜ்புதனா ரெஜிமெண்ட் உள்ளிட்டவையும் வரிசையாக சென்றன. மேலும் பல்வேறு கலாச்சாரங்களை பிரதிபலிக்கும் வகையிலான அணிவகுப்பும் நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து பல்வேறு மாநிலங்களின் அலங்கார அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழ்நாடு அரசு சார்பில் சங்க காலம் தொட்டு சமூக வளர்ச்சிக்கும், மேம்பாட்டுக்கும் உதவிய சாதனை பெண்களை போற்றும் வகையில் கரகாட்டம், கர்நாடக சங்கீத இசையுடன் அலங்கார ஊர்தி பங்கேற்றது. தமிழ்நாடு அரசின் அலங்கார ஊர்தியில் ஆத்திச்சூடியை இயற்றிய ஒளவையார், ஆங்கிலேயர்களுக்கு எதிராக வீரத்துடன் போராடிய வீர மங்கை வேலு நாச்சியார் ஆகியோரின் உருவங்கள் அலங்கார ஊர்தியில் இடம்பெற்று இருந்தன.

அதேபோல் அலங்கார ஊர்தியின் மையப்பகுதியில் கர்நாடக இசை பாடகியான எம்.எஸ்.சுப்புலட்சுமி, பரத நாட்டிய கலைஞர் பால சரஸ்வதி, தமிழ்நாட்டின் முதல் மருத்துவரான முத்துலட்சுமி ரெட்டி, மூவலூர் ராமாமிர்த அம்மையார், வேளாண் துறையில் சாதித்து வரும் பாப்பம்மாள் ஆகியோரின் உருவங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

அதேபோல் தமிழ்நாட்டின் பெருமையான தஞ்சை பெரிய கோவிலின் மாதிரி வடிவம் அலங்கார ஊர்தியின் பின்பகுதியில் நிறுவப்பட்டுள்ளது. அதேபோல் அலங்கார ஊர்தியில் கொம்பு, மேளம், நாதஸ்வரம், தவில், புல்லாங்குழல் வாசித்தபடி இசைக் கலைஞர்கள் வாசித்தனர். அவர்களோடு கரகாட்ட கலைஞர்களும் ஆடி சென்றனர்.

ஹெல்மெட் அணியாமல் பின்னாள் அமர்வு பயணிப்பவர்களுக்கு அபராதம்

கடந்த ஆண்டு டெல்லியில் நடைபெற்ற குடியரசு தின விழா அணிவகுப்பில் தமிழ்நாடு அரசின் அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுக்கப்பட்டது. தமிழ்நாட்டைச் சேர்ந்த சுதந்திர போராட்ட வீரர்களை மையப்படுத்தி அலங்கார ஊர்தியாக அது வடிவமைக்கப்பட்டு இருந்தது. இதற்கு அனுமதி மறுக்கப்பட்டதால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அந்த அலங்கார ஊர்தியை தமிழகம் முழுவதும் வலம் வரச்செய்தது குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில் குடியரசு தின அணிவகுப்பில் கலந்து கொண்ட அலங்காரா ஊர்திகளில் எது உங்கள் மனம் கவர்ந்தது என மக்கள் வாக்களிக்குமாறு ஒன்றிய அரசு கேட்டுள்ளது. அதன்படி https://www.mygov.in/group-poll/vote-your-favorite-tableau-republic-day-2023/ என்ற இணையதளம் சென்று மக்கள் வாக்களிக்கலாம். ஆனால் அந்த இணையதளத்தில் தமிழ்நாடு என்ற மாநிலத்தின் பெயருக்கு பதிலாக தமிழ் நாய்டு எனவும் கேரளாவிற்கு பதிலாக கேரேளா எனவும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.