திருப்பதி திருமலையில் பக்தர்களின் வசதிக்காக தங்கும் விடுதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளில் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. எப்போது கூட்டம் வந்தாலும் அதனை சமாளிக்கும் வகையில் உணவுக்கூடங்கள் முதல் கழிப்பறைகள் வரை எப்போதும் தயார் நிலையிலேயே இருக்கும். காரணம், அங்கு நாள்தோறும் 30 முதல் 50 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்வதாக கூறப்படுகிறது. இதனால், அவர்களின் வசதிக்காக தேவஸ்தானம் சார்பிலும், நன்கொடையாளர்ளின் சார்பிலும் பல்வேறு வசதிகள் செய்யப்படுகின்றன. அந்தவகையில், தானியங்கி பூந்தி இயந்திரம் திருப்பதி தேவஸ்தானத்தில் நிறுவப்பட உள்ளது.
இதற்கு நாட்டின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான ஜியோ சுமார் 50 கோடி ரூபாயை நன்கொடையாக கொடுக்க உள்ளது. இது குறித்து திருப்பதி திருமலையில் செய்தியாளர்களை சந்தித்த அறங்காவலர் குழு தலைவர் சுப்பா ரெட்டி ஜியோ நிறுவனத்தின் 50 கோடி ரூபாய் நிதி உதவியுடன் திருப்பதி மலையில் தானியங்கி பூந்தி தயாரிப்பு இயந்திரம் நிறுவப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார். அவர் பேசும்போது, ” தொன்றுதொட்டு நடைமுறையில் இருக்கும் வழக்கமான முறையில் கோயிலுக்கு வெளியே தற்போது தயார் செய்யப்படும் பூந்தி கன்வேயர், பெல்ட் மூலம் கோவிலுக்கு உள்ளே அனுப்பப்படுகிறது.
அங்கு பிரசாதம் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் பூந்தியை கைகளால் உருண்டை பிடித்து லட்டு தயார் செய்கின்றனர். அந்த லட்டுகள் மீண்டும் கன்வேயர் பெல்ட் மூலம் லட்டு விநியோக கவுண்டருக்கு கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. திருப்பதி மலையில் பக்தர்களுக்கு விற்பனை செய்வதற்காக நாள் ஒன்றுக்கு மூன்று லட்சத்திற்கும் அதிகமான லட்டுகள் தயார் செய்யப்படுகின்றன. இந்த பணியில் 500-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
மனித சக்தியை மட்டுமே பயன்படுத்தி பூந்தி தயாரிக்கும் போது காலதாமதம், பொருட்கள் வீணாவது ஆகியவை போன்ற தவிர்க்க இயலாத சம்பவங்கள் நேரிடுகின்றன. எனவே பூந்தி தயாரிப்பை முழுவதும் இயந்திர மயமாக்குவது பற்றி தேவஸ்தான நிர்வாகம் கடந்த ஓராண்டாக பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வந்தது. இதற்காக தேவஸ்தான அதிகாரிகள் பல்வேறு நிறுவனங்களுக்குச் சென்று அங்கு இனிப்பு உள்ளிட்ட பொருட்கள் தயார் செய்யும் முறையை பரிசீலித்து வந்தனர்.
இந்த நிலையில் தானியங்கி பூந்தி தயாரிப்பு எந்திரத்தை பொருத்தி பயன்படுத்த ஐம்பது கோடி ரூபாய் நன்கொடை வழங்க ஜியோ நிறுவனம் முன் வந்துள்ளது. இதையடுத்து விரைவில் ஜியோ நிறுவனத்தின் நன்கொடை மூலம் தானியங்கி பூந்தி தயாரிப்பு எந்திரம் திருப்பதி மலையில் பொருத்தப்படும். இதற்கான செயல்முறை சோதனை விரைவில் துவங்க உள்ளது” என தெரிவித்துள்ளார்.