புகையிலைப் பொருட்களுக்கான தடை உத்தரவு ரத்து – தமிழக அரசின் அடுத்த திட்டம் என்ன?

குட்கா, பான் மசாலா பொருட்களுக்கு விதிக்கப்பட்ட தடையை உயர்நீதிமன்றம் நீக்கி உள்ள நிலையில், இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என்றும், தமிழகத்தில் மாரடைப்பு அதிக அளவில் உள்ளதாகவும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அரசு பெரியார் மருத்துவமனை மாவட்ட மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொற்று நோய் சிகிச்சை பெறுவதற்கான ரூ. 3.65 கோடி மதிப்பிலான கட்டப்பட்ட புதியக் கட்டிடத்தை திறந்து வைத்தார்.
தொடர்ந்து தலா ரூ. 25 லட்சம் மதிப்பீட்டில் அளக்குடி மற்றும் கோமல் கிராமத்தில் கட்டி முடிக்கப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் செவிலியர் குடியிருப்பு கட்டிடத்தை காணொளி மூலம் திறந்து வைத்ததார். மேலும் தரம் உயர்த்தப்பட்டு அரசு மருத்துவமனையாக அறிவிக்கப்பட்டுள்ள மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு ரூ. 46.5 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டமைப்புடன் மாவட்ட மருத்துவமனையாக தரம் உயர்த்த அடிக்கல் நாட்டினார்.
image
பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது தமிழ்நாட்டில் குட்கா பொருட்களுக்கு விதிக்கப்பட்ட தடையை உயர்நீதிமன்றம் நீக்கி உள்ள நிலையில், இது குறித்து முதலமைச்சர் உத்தரவுப்படி தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யும் என்று தெரிவித்தார். மேலும் கொரோனா பாதிப்பு காரணமாக மாரடைப்பு அதிகமாக பரவுவதாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, “தற்போது மாரடைப்புகள் அதிக அளவில் ஏற்பட்டு வருகிறது. இதற்கு கொரோனா பாதிப்பு காரணமா என்று உலக சுகாதார நிறுவனம் ஆய்வு செய்து வருகிறது. இருப்பினும் மாரடைப்புகள் அதிகரித்துள்ளது. அனைவரும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். இதன் மூலம் மாரடைப்பிலிருந்து பாதுகாத்துக் கொள்ளலாம்” என்று கூறினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் லலிதா, எம்.பி ராமலிங்கம், எம்.எல்.ஏக்கள் ராஜகுமார், நிவேதா முருகன் பன்னீர்செல்வம், சுகாதாரத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.