”இருந்தாலும் நியாயம் வேண்டாமா?” – ரசிகரின் ஃபோனை ரன்பீர் தூக்கியெறிந்தது இதற்குதானாம்!

சினிமா பிரபலங்கள் பொது வெளியில் வரும் போது ரசிகர்கள் படை சூழ்ந்து ஃபோட்டோ எடுக்கத் தொடங்கி விடுவார்கள். கூட்டம் அதிகபடியாக கூடிவிட்டால் வேறு வழியில்லாமல் நட்சத்திரங்கள் வேக வேகமாக அவ்விடத்தை காலி செய்யும் பல வீடியோக்கள் சமூக வலைதளங்களில் நித்தமும் வெளியாவதுண்டு.

இப்படி இருக்கையில், பாலிவுட்டின் முன்னணி ஹீரோவும், நடிகை ஆலியா பட்டின் கணவருமான ரன்பீர் கபூருடன் இளைய ரசிகர் ஒருவர் செல்ஃபி எடுக்க முற்பட்டிருக்கிறார். அப்போது சிரித்துக் கொண்டே போஸ் கொடுத்த ரன்பீர் திடீரென அந்த ரசிகரின் கையில் இருந்த ஃபோனை வாங்கி பின்னால் தூக்கி எறிந்திருக்கிறார்.

வெறும் ஆறு நொடி மட்டுமே இருந்த அந்த வீடியோ நாடுமுழுக்க பட்டித் தொட்டியெங்கும் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. 40 வயதை தொட்டபின்னரும்கூட, ஒரு குழந்தைக்கு தந்தையான பின்னரும்கூட பாலிவுட்டின் சாக்லேட் பாயாகவே இப்போது வரை இருந்து வரும் ரன்பீர் கபூர் இப்படியா கோபத்தில் பொதுவெளியில் ரசிகரிடம் நடந்துக் கொள்வது என்றெல்லாம் பலரும் கடிந்து வந்தார்கள்.

இருப்பினும் இது ஏதேனும் விளம்பரத்துக்கானதாக இருக்கக் கூடும் என்றும் பதிவிட்டு வந்தார்கள். அந்த வகையில், கிட்டத்தட்ட ஒரு நாளைக்கு பிறகு ரசிகரிடம் ஏன் ரன்பீர் அப்படி நடந்துக் கொண்டார் என்பதற்கான விடை தெரிய வந்திருக்கிறது.

சில நெட்டிசன்கள் மற்றும் ரசிகர்கள் கணித்தபடி இது முற்றிலும் விளம்பர நோக்கத்துக்கானதுதான் என்பது தற்போது அம்பலமாகியிருக்கிறது. அதன்படி பிரபல மொபைல் நிறுவனமாக ஓப்போ பிராண்டின் புதிய 5G மொபைலை பரிசாக வழங்கியிருக்கிறார். அந்த புதிய ஃபோன் எதிர்வரும் பிப்ரவரி 3ம் தேதிதான் சந்தைக்கே விற்பனைக்கு வர இருக்கிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.