அடுத்தாண்டு லோக்சபா தேர்தல் நடக்கவுள்ளதை அடுத்து, மக்கள் தொகை கணக்கெடுப்பை மீண்டும் ஒத்தி வைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. லோக்சபா தேர்தல் முடிந்ததும், அடுத்தாண்டு ஜூலையில் இதற்கான பணிகள் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நம் நாட்டில், 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. கடைசியாக, 2011ல் முழுமையான மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.
அடுத்ததாக, 2021ல் கணக்கெடுப்பை நடத்த திட்டமிடப்பட்ட நிலையில், கொரோனா பரவல் காரணமாக பணிகள் தடைபட்டன. இதனால், மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி ஒத்தி வைக்கப்பட்டது.
கடந்தாண்டு இந்த கணக்கெடுப்பை நடத்த திட்டமிட்டு, பட்ஜெட்டில் இதற்காக நிதி ஒதுக்கப்பட்டது; ஆனாலும், பணிகள் துவங்கவில்லை. அடுத்த சில மாதங்களில் இதற்கான பணிகள் துவங்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
முக்கிய முடிவுகள்
மக்கள் தொகை கணக்கெடுப்புகளின் அடிப்படையில் தான், நிதி ஒதுக்குதலில் இருந்து, இட ஒதுக்கீடு வரை பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படும்.
இதனால் இந்த பணிகளை ‘டிஜிட்டல்’ முறையில் மேற்கொள்ள முடிவு செய்த மத்திய அரசு, இதற்கென ஒரு செயலி மற்றும் இணையதளத்தை உருவாக்கியது. இதற்கிடையே ராஜஸ்தான், மத்திய பிரதேசம் உள்ளிட்ட, 10 மாநிலங்களுக்கு, இந்தாண்டு சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது; இது, மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு தடையாக இருக்கும் என, அரசு தரப்பில் கருதப்பட்டது.
கொரோனா பரவல்
மேலும், பீஹார் உள்ளிட்ட சில மாநில அரசுகள், திடீரென ஜாதி வாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை துவங்கியுள்ளன. இதற்கிடையே, அடுத்தாண்டு மார்ச் – ஏப்ரலில் லோக்சபா தேர்தலும்நடக்கவுள்ளது. இதனால், லோக்சபா தேர்தலுக்குப் பின் மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தும் முடிவை, மத்திய அரசு எடுத்துள்ளது. அடுத்தாண்டு ஜூலையில் இந்த பணிகள் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 150 ஆண்டுகளாக, 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வந்தது. கொரோனா பரவல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக, முதன்முறையாக தற்போது தான் இந்த பணிகள் முடங்கியுள்ளன.—- புதுடில்லி நிருபர் –
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்