பள்ளியில் தங்கள் குழந்தையை சேர்த்த பெற்றோர், குழந்தைக்குப் பாடத்தை கண்டிப்புடன் சொல்லிக் கொடுக்கச் சொல்லி ஆசிரியரிடம் பிரம்பும், அதற்கு அனுமதியளிக்கும் உறுதிமொழி கடிதமும் அளித்த சம்பவம் சமூக வலைதளத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மதுரை, செல்லூர் பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலரான சங்கரபாண்டியன் – தமிழரசி தம்பதி தங்கள் 4 வயது குழந்தையை செல்லூரிலுள்ள மனோகரா நடுநிலைப்பள்ளியில் சேர்த்தனர்.
அப்போது 4 அடி உயரமுள்ள பிரம்பை ஆசிரியரிடம் பெற்றோர்கள் கொடுக்க, அவர் அதிர்ச்சியானார். ‘எங்கள் மகன் பள்ளியில் தவறு செய்தால் இந்த பிரம்பை கொண்டு அடிக்கலாம். அப்போதுதான் வாழ்க்கையில் முன்னேற முடியும்’ என்று சொன்னதுடன், பிரம்பால் அடிக்க உறுதிமொழி கடிதத்தையும் ஆசிரியரிடம் கொடுத்தனர்.
இது குறித்து சமூக ஊடகத்தில், ”ஆசிரியர் கண்டிப்பில்தான் சிறந்த மாணவனை உருவாக்க முடியும் என்கிற விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்தில், முன்மாதிரியாக எங்கள் மகனை பள்ளியில் சேர்த்தோம்” என்று அவர்கள் பகிர்ந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

குழந்தைகள் நலனுக்காக ஐ.நா, குழந்தைகள் உரிமைகளுக்கான சாசனத்தை வெளியிட்டுள்ளது. இந்திய அளவில் குழந்தைகள் நலன் மற்றும் உரிமை சட்டங்கள் நடைமுறையில் உள்ளன. தமிழக அளவிலும் குழந்தைகள் வீட்டிலோ, பள்ளியிலோ எந்த வகையிலும் துன்புறுத்தலுக்கு உள்ளாகக் கூடாது என்று குழந்தைகள் பாதுகாப்பு குழுக்கள் கலெக்டர் தலைமையில் மாவட்டம் தோறும் இயங்கி வருகின்றன.
இந்நிலையில் இந்த பெற்றோரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக சமூக வலைதளங்களில் பலரும் பகிர்ந்தனர். இதுகுறித்து குழந்தையின் தந்தை சங்கரபாண்டியனிடம் பேசினோம்.
“குழந்தையை அடிக்கத்தான் வேண்டும் என்கிற எண்ணமெல்லாம் கிடையாது. சமீபகாலமாக ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையே பெரிய இடைவெளி ஏற்படுள்ளது. மாணவர்களை கண்டிக்கவே ஆசிரியர்கள் அஞ்சுகிறார்கள். அதனால், பல மாணவர்கள் இளம் வயதிலேயே வழிதவறிப் போகிறார்கள்.

இதை நாள்தோறும் கேள்விப்படுகிறோம். ஒரு மாணவனுக்கு ஆசிரியரின் கண்டிப்பு தேவை. அதற்காக அடிக்க வேண்டும் என்று சொல்லவில்லை. ஒரு விழிப்புணர்வு அடையாளத்துக்குத்தான் பிரம்பை கொண்டு போனோம்.
ஆனால் அங்கிருந்த ஆசிரியர், ’பிரம்பெல்லாம் வேண்டாம், அன்பாலேயே குழந்தைகளை நல்வழிப்படுத்தலாம்’ என்று எங்களிடம் தெரிவித்தார்.
குழந்தைகள் உரிமை சட்டங்கள் நடைமுறையில் இருப்பதை நான் அறிவேன். நானே பல குழந்தைகளுக்கும், பள்ளிகளுக்கும் உதவி வருகிறேன். மாணவர்களுக்கு பிரச்னை என்றால் முன் நின்று உதவி செய்வேன். அதனால் இந்த சம்பவம் விழிப்புணர்வுக்காக செய்ததுதான். வேற எந்த நோக்கமும் இல்லை” என்றார்.