திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே துப்பாக்கி முனையில் பெண் கவுன்சிலரை கடத்திய கூலிப்படையினரை காவல்துறையினர் கைது செய்தனர்.
பல்லவாடா கிராமத்தில் அதிமுக ஒன்றிய கவுன்சிலர் ரோஜா மற்றும் அவரது மகன் ஜேக்கப் ஆகிய இருவரும் கடந்த 24ஆம் தேதி துப்பாக்கி முனையில் கடத்தப்பட்டனர். கடத்தல்காரர்களின் செல்போன் சிக்னலை வைத்து காரை பின் தொடந்த போலீசார் ஆந்திர எல்லையில் சித்தவேடு அருகே இருவரையும் மீட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பாக திருவள்ளூர் மாவட்ட காவல்துறையினரும், ஆந்திர மாநிலம் ஸ்ரீசிட்டி போலீஸாரும் விசாரணை நடத்தினர். மேலும் தனிப்படை போலீசாரும் தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் கடத்தல் சம்பவம் தொடர்பாக சுரேந்தர், சந்தோஷ், பாஸ்கர், நவீன் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், நிலப்பிரச்னை காரணமாக கடத்தல் நடந்திருப்பது தெரியவந்துள்ளது.
அதிமுக கவுன்சிலரின் கணவர் ரமேஷ்குமாரின் விவசாய நிலம் அருகில் சுரேந்தர் என்பவரின் நிலம் உள்ளது. இதனால் இருவருக்கும் இடையே நிலப்பிரச்னை இருந்து வந்துள்ளது. இதில் ஏற்பட்ட தகராறு காரணமாக ஆந்திர கூலிப்படை உதவியுடன் கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
கைதானவர்களிடம் இருந்து துப்பாக்கி, 2 கத்தி, 8 சவரன் தங்க நகைகளை பறிமுதல் செய்த போலீசார் தலைமறைவான மேலும் சிலரை தேடி வருகின்றனர்.
newstm.in