Erode East Bypolls: பாஜகவுக்காக காத்திருக்கிறோம்… வெயிட்டிங்கில் வெறியேற்றும் ஓபிஎஸ் தரப்பு

Erode East Bypolls: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் பிப். 17ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பாக நட்சத்திர வேட்பாளரான ஈ.வி.கே.எஸ் இளங்கோவனை நிறுத்தியுள்ளனர். இதையடுத்து, அதிமுக சார்பில் இபிஎஸ், ஓபிஎஸ் இரண்டு அணிகளுமே போட்டியிடும் என தெரிவித்தன. தொடர்ந்து, கூட்டணியில் பாஜகவும் முஷ்டியை முறுக்க எதிர்க்கட்சி வேட்பாளர் யார் என்ற கேள்வி தொடர்ந்து எழுந்து வருகிறது. 

அதிமுக கூட்டணியில் உள்ள பாமக இத்தேர்தலை புறக்கணிப்பதாகவும், யாருக்கும் ஆதரவில்லை என்றும் அறிவித்துவிட்டது. மற்றோரு கூட்டணி கட்சியான தேமுதிக தனித்து தேர்தலை சந்திப்பதாக தெரிவித்துள்ளது. நாம் தமிழர் கட்சியும் வழக்கம்போல் தனித்து பெண் வேட்பாளரை நிறுத்தப்போவதாக அறிவித்துள்ளது. 

மறுப்புறம் அமமுக வேட்பாளரை அறிவித்தும்விட்டது. இப்படியிருக்க, எதிர்கட்சி வேட்பாளரை களமிறக்கப்போவது ஓபிஎஸ் அணியா – இபிஎஸ் அணியா – அண்ணாமலை அணியா (பாஜக) என்ற பேச்சுகள் அடிப்பட்டு வருகின்றன. 

இந்தச்சூழலில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் சென்னை பசுமைவழிச்சாலையில் உள்ள இல்லத்தில் இன்று ஆலோசனை மேற்கொண்டார்.

ஆலோசனைக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த ஜே.சி.டி.பிரபாகர், “ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் தலைமையில் 118 பேர் கொண்ட தேர்தல் பணி குழு அமைக்கப்பட்டுள்ளது.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பாஜக எப்போது வேட்பாளரை அறிவித்தாலும் அவர்களுக்காக பணியாற்ற தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. பாஜக தேர்தலில் போட்டியிடவில்லை என்று அறிவித்தால் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் வேட்பாளரை உடனடியாக அறிவிப்பார்” என்றார். 

அவரை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சட்டமன்ற உறுப்பினர் மனோஜ் பாண்டியன்,”அதிமுகவை பொறுத்தவரை ஒருங்கிணைப்பாளர் பதவி மட்டுமே தற்போது உள்ளது. எனவே இரட்டை இலை சின்னத்திற்கு அதிகாரப்பூர்வமாக கையெழுத்திடும் உரிமை ஓ.பன்னீர்செல்வத்திடம் மட்டுமே உள்ளது. மேலும், எடப்பாடி பழனிச்சாமி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் சின்னம் தொடர்பாக கொண்டு சென்றுள்ள முறையீடு எந்த வகையிலும் பொதுக்குழு வழக்குக்கு தடையாக இருக்காது” என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.