ஒடிசாவில் பயங்கரம் அமைச்சர் துப்பாக்கியால் சுட்டுக்கொலை: பொது நிகழ்ச்சிக்கு வந்தபோது சரமாரியாக சுட்ட எஸ்ஐ கைது

புவனேஸ்வர்: ஒடிசாவில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த மாநில சுகாதார அமைச்சர் நபா கிஷோர் தாசை, உதவி எஸ்ஐ துப்பாக்கியால் சரமாரியாக சுட்டதில், அவர் பரிதாபமாக உயிரிழந்தார். பொதுமக்கள் முன்னிலையில் பட்டப்பகலில் நடந்த இந்த பயங்கர சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஒடிசாவில் முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையிலான அமைச்சரவையில் சுகாதார அமைச்சராக பதவி வகிப்பவர் நபா கிஷோர் தாஸ். இவர் நேற்று மதியம் 1 மணி அளவில், ஜர்சுகுதா மாவட்டத்தில் உள்ள பிரஜராஜ்நகர் அருகே உள்ள காந்தி சவுக்கில் பொதுமக்கள் குறைதீர்ப்பு அலுவலக திறப்பு விழாவில் கலந்து கொள்ள காரில் சென்றிருந்தார். நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்கு வந்த அமைச்சரை, அவரது ஆதரவாளர்களும், கட்சியினரும் மாலை அணிவித்து சிறப்பான வரவேற்பு அளித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது அமைச்சர் தாஸ், காரில் இருந்து இறங்கிய அடுத்த சில நொடிகளில் திடீரென அவரது மார்பில் துப்பாக்கி குண்டுகள் சரமாரியாக துளைத்தன. 2 குண்டுகள் மார்பை துளைத்து ரத்த வெள்ளத்தில் அமைச்சர் தாஸ் சரிந்து விழுந்தார். இதைப் பார்த்து, அங்கிருந்தவர்கள் பதறிப் போயினர். அமைச்சரை துப்பாக்கியால் சுட்டது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த உதவி சப் இன்ஸ்பெக்டர் கோபால் தாஸ் என்பது தெரியவந்தது. மிக அருகாமையில் இருந்தபடி, அமைச்சரை அவர் சுட்டுள்ளார்.

அமைச்சர் மயங்கி சரிந்ததைப் பார்த்து எஸ்ஐ கோபால் தாஸ் அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். அவரை பொதுமக்கள் மடக்கிப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். மயங்கிய நிலையில் கிடந்த அமைச்சரை மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து உயர் சிகிச்சைக்காக ஏர் ஆம்புலன்ஸ் மூலமாக புவனேஸ்வரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அமைச்சர் தாஸ் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் ஐசியுவில் சிகிச்சை பெற்றார். ஆனால், சிகிச்சை பலனின்றி அமைச்சர் தாஸ் நேற்று மாலை இறந்ததாக தனியார் மருத்துவமனை உறுதிபடுத்தியது.

பட்டப்பகலில் பொதுமக்கள் முன்னிலையில் அமைச்சர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் ஒடிசாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும், அமைச்சர் மீதான துப்பாக்கி சூடு ஜர்சுகுதா மாவட்டத்தில் மிகுந்த பதற்றத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இது பாதுகாப்பு குறைபாடு எனவும், திட்டமிட்ட சதி எனவும் அமைச்சரின் ஆதரவாளர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். ஆனாலும், போலீஸ்காரர் கோபால்தாஸ் எதற்காக அமைச்சரை சுட்டார் என்பது தெரியவில்லை. அவரை கைது செய்துள்ள போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

பட்நாயக் கண்டனம்
புவனேஸ்வர் மருத்துவமனைக்கு நேரில் வந்த ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், அமைச்சரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். அங்கு அவர் அளித்த பேட்டியில், ‘‘துரதிர்ஷ்டவசமான இந்த தாக்குதல் சம்பவத்தால் நான் அதிர்ச்சியடைந்துள்ளேன். இதை வன்மையாகக் கண்டிக்கிறேன், இதுதொடர்பாக உயர்மட்ட விசாரணைக்கு உத்தவிட்டுள்ளேன்’’ என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.