'இதை செய்யாதது தான் அனைத்து சிக்கல்களுக்கும் காரணம்' – அன்புமணி ராமதாஸ்

புகைத்தடை சட்டம் முறையாக செயல்படுத்தப்படாதது தான் அனைத்து சிக்கல்களுக்கும் காரணம் என்று பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டி உள்ளார்.

இது தொடர்பாக, பாட்டாளி மக்கள் கட்சித் தலைவரும், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருமான
அன்புமணி
ராமதாஸ், சமூக வலைதளமான ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது:

சென்னையில் பள்ளிகளை சுற்றி உள்ள பொது இடங்களில் புகைப்பது அதிகரித்து இருப்பதாகவும், அதனால் பள்ளிகளுக்குச் செல்லும் குழந்தைகள் சிகரெட் புகையை சுவாசித்து பாதிப்புகளுக்கு உள்ளாவதாகவும் தி நியு இந்தியன் எக்ஸ்பிரஸ் நடத்திய கள ஆய்வில் தெரிய வந்துள்ளது. இது பெரும் கவலை அளிக்கிறது.

சென்னையில் 20 இடங்களில் கள ஆய்வு நடத்தப்பட்டு உள்ளது. அனைத்து இடங்களிலும் பள்ளிகளில் இருந்து 500 மீட்டர் தொலைவுக்குள் குறைந்தது 3 இடங்களிலாவது பொது இடங்களில் புகை பிடிக்கின்றனர் என ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதன் மூலம் பாமகவின் நீண்ட கால குற்றச்சாட்டு உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது.

பள்ளிக் குழந்தைகள் மலர்களை விட மென்மையானவர்கள். பிறர் புகைத்து விடும் புகையை சுவாசிப்பதால் அவர்களுக்கு நுரையீரல் புற்றுநோய், மார்பகப் புற்றுநோய், கணையப் புற்றுநோய், கருப்பைவாய் புற்றுநோய், சிறுநீர்ப்பை புற்றுநோய் உள்ளிட்ட பல வகை புற்றுநோய்கள் ஏற்படுகின்றன. ஒரு பாவமும் செய்யாத குழந்தைகள் மற்றவர்கள் செய்யும் குற்றத்திற்காக தண்டிக்கப்படக்கூடாது. அதற்காகத் தான் நான் மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த போது, பல்வேறு தடைகளைத் தகர்த்து பொது இடங்களில் புகைக்க தடை விதிக்கும் சட்டத்தை நிறைவேற்றினேன்.

புகைத்தடை சட்டம் முறையாக செயல்படுத்தப்படாதது தான் அனைத்து சிக்கல்களுக்கும் காரணம் ஆகும். காந்தியடிகளின் பிறந்தநாளில் நடைமுறைப்படுத்தப்பட்ட அந்த சட்டத்தை, அவரது நினைவு நாளான இன்றிலிருந்தாவது கடுமையாக செயல்படுத்த வேண்டும்; குழந்தைகளைக் காக்க வேண்டும்.

இவ்வாறு அன்புமணி ராமதாஸ் தெரிவித்து உள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.